Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Monday, February 7, 2022

ரத சப்தமி என்றால் என்ன ?

ரத சப்தமி இந்து சமயத்தவர்களால் தை அமாவாசை நாளை அடுத்த ஏழாவது நாளில் கொண்டாடப்படுவதாகும்.இது குறிப்பாக சூரிய தேவன் ஏழு குதிரைகள் (ஏழு வண்ணங்களைக் குறிக்கின்றன) பூட்டிய தனது ரதத்தை வடகிழக்கு திசையில் திருப்பி பயணிப்பதாக கருதப்படுகிறது. மேலும், இந்த நாள் சூரியக் கடவுளின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. சூரியன் தெற்கு நோக்கிய தட்சிணாயனம் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கி உத்தராயணம் பயணப்படும் தினமே ரத சப்தமி ஆகும். இது பருவங்களின் அடிப்படையில், வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது. இந்திய விவசாயிகளூக்கு இந்த நாள் ஒரு புதிய ஆண்டின் தொடக்கமாக உள்ளது. இந்து சமய குடும்பங்களிலும், சூரியக் கடவுள் உள்ள கோவில்களிலும் ரத சப்தமி மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

சூரிய வழிபாடு இந்து மதத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அதன் பழமை சீனா, எகிப்து மற்றும் மெசப்படோமியா போன்ற உலகின் பல பகுதிகளில் புராணங்களுடன் தொடர்புடையது. காயத்ரி மந்திரம் என்பது சூரியக் கடவுள் மீது ஒவ்வொரு நாளும் மிகுந்த பயபக்தியுடன் ஓதப்படும் மந்திரம் ஆகும். புராண இந்து மதம் உருவான போது, சூரிய வழிபாடு தோன்றியதாக கருதப்படுகிறது.

பழமையான வேதமான ரிக் வேதத்தில் சூரிய தேவனின் மனைவி இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அமர்ந்திருந்ததாக குறிப்புகள் உள்ளது. எனவே இந்த அடையாளம் நார்ஸ் புராணங்களுக்கும் வேத வரலாறுக்கும் பொதுவானதாக உள்ளது.

ரத சப்தமி என்பது, சூரிய தேவன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை வடக்கு நோக்கி, குறிப்பாக வடகிழக்கு திசையில் திருப்பி பயணிக்கும் நாளாகும். சூரிய தேவனின் தேரோட்டியாக அருணன் உள்ளார். சூரியனின் தேரில் உள்ள ஏழு குதிரைகள் ஏழு வண்ணங்களைக் கொண்ட வானவில் ஐ குறிப்பதாகும். மற்றும் ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிப்பதாகவும் கருத்து நிலவுகிறது. அதாவது சூரியனுக்கு உகந்த தினமான ஞாயிற்றுக் கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான ஏழு நாட்களைக் குறிக்கிறது. மேலும், ரதத்தில் உள்ள 12 சக்கரங்கள் பன்னிரெண்டு ராசிகளைக் குறிக்கின்றன. சூரியனின் சொந்த வீடாக சிம்ம ராசி உள்ளது. சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் பயணித்து திரும்பி வருவதற்கு ஒரு வருடம் ஆகிறது. ரத சப்தமி திருவிழா சூரிய கடவுளிடமிருந்து ஆற்றலையும் ஒளியையும் பெறும் விழாவாக உள்ளது.

ரத சப்தமி அன்று முதல் தென்னிந்திய பகுதிகளில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்வதை உணர முடியும். மேலும் இந்த நாள் வசந்த காலத்தின் ஆரம்பம், அதைத்தொடர்ந்து வரும் தெலுங்கு வருடப்பிறப்பு உகாதி, மற்றும் சித்திரை வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களை மக்கள் எதிர்பார்க்கும் விதமாக உள்ளது.

இந்தியாவில் பரவலாக உள்ள சூரியக் கோயில்களில், ரத சப்தமி விழா ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது. அவற்றில் மிகவும் பிரபலமான உலகப் பாரம்பரியக் களம் எனப் போற்றப்படும் கொனார்க் சூரியக் கோயில், கொனார்க்கில் உள்ளது. ஒடிசா மாநிலத்தில் மற்றொரு சூரியக் கோயிலான பிரான்ச்சி நாராயணா கோயில் புகுடா, கஞ்சாம் மாவட்டத்தில் உள்ளது. பிற சூரிய கோயில்களாக, சோலாங்கிப் பேரரசுவின் அரசராக இருந்த பீம்தேவால் கட்டப்பட்ட மொதேரா, குசராத்து, அசாம், ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அரசவல்லி சூரியக் கோயில் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள நவக்கிரகக் கோயில்கள் போன்றவை உள்ளது



Saturday, January 22, 2022

ஸ்ரீ தியாக பிரம்ம ஆராதனை - 22.01.2022

தியாகராஜ சுவாமிகள் (1767 -1848) தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராவர். தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இவர் ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.

 கி.பி. 18ஆம் நூற்றாண்டில்   திருவாரூரில் ராம பக்தரான ராமபிரம்மம் என்பவருக்கும் சீதாம்மாவுக்கும் மூன்றாவது புதல்வராக இவர் பிறந்தார். இவர் பிறந்த பின் இவரின் குடும்பத்தினர் தஞ்சாவூருக்கு அண்மையில் உள்ள திருவையாறில் குடியேறினர். திருவையாறில் இவர் சமஸ்கிருத மொழியில் பயிற்சி பெற்றார். இவருக்கு 8 வது வயதிலேயே உபநயனம் நடைபெற்றது. நுட்ப புத்தியும் ராம பக்தியும் கொண்ட தியாகராஜர் ஓய்வு நேரங்களில் சோந்தி வெங்கடராமையரிடம் சங்கீதம் பயின்று வந்தார். குருவின் அருளாலும் வழிநடத்தலாலும் சங்கீத சம்பிரதாயங்களில் மிக சிறந்த முறையில் இவர் கற்று தேறினார். 18 வது வயதில் தியாகராஜருக்குத் திருமணம் நடந்தேறியது.

பல அபூர்வ இராகங்களில் கீர்த்தனைகளை இயற்றியிருப்பதால் அந்த இராகங்களில் சொருபங்களையும், இலக்கணங்களையும் நாம் அறிய முடிகின்றது. ஒரே இராகத்தில் பல கீர்த்தனைகளை இயற்றியிருப்பதிலிருந்து இவருடைய அபூர்வ சங்கீதத் திறமையும் கற்பனையும் வெளியாகின்றன. இவர் தனது தாய் மொழியான தெலுங்கில் பல கீர்த்தனைகள் அமைத்தமை குறிப்பிடத்தக்கது.

இவருடைய இசைத் திறமையைக் கேள்வியுற்ற தஞ்சாவூர் மராத்திய அரசு மன்னரான சரபோஜி இவரைத் தமது அரசவைக்கு அழைத்து, தம்மைப் பற்றி புகழ் பாடச் செய்ய வேண்டுமென விரும்பினார். ஆனால் தியாகராஜர் அரசவைக்கு செல்ல மறுத்து நிதிசால சுகமா என்ற கல்யாணி இராகக் கிருதியைப் பாடினார். இராம பக்தியிலேயே அவர் தம் மனதைச் செலுத்தி வந்தமையால், மனிதர்களை துதி செய்து பொருள் சம்பாதிக்க ஆசைப் படவில்லை.

ஏலநீதயராது கிருதியே தியாகராஜர் முதன் முதலில் பாடிய உருப்படியாகும். ஆரம்ப காலத்திலேயே தியாகராஜர் செய்த உருப்படிகள் அனேகமாக திவ்யநாமக்கீர்த்தனைகளாகவும், தனிச் சரணத்தை உடைய கிருதிகளாகவுமே அமைந்தன. இவை அனேகமாகத் தோத்திரங்களாகவே இருந்தன. இவர் இயற்றிய கீர்த்தனைகள் யாவும் தெலுங்கு மற்றும் வடமொழி தவிர வேறு மொழிகளில் அமையாதது இவரின் தாய் மொழி பற்றை நன்கு விளக்குவதாக அமைந்துள்ளது.

இசையுடன் கலந்த இன்ப வாழ்வில் இவர் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்து இராமகிருஷ்ண யதீந்திரர் என்னும் மகான் வந்து இராம நாமத்தை 96 கோடி முறை செபிக்கும் படி தியாகராஜரிடம் கூறிச் சென்றார். இவர் அதனைத் தெய்வ வாக்காக எடுத்து அப்புனிதச் செயலை 21 ஆண்டுகளிற் செய்து முடித்தார். சராசரியாக ஒரு நாளைக்கு 125,000 முறை இராமநாமத்தைச் செபித்து வந்தார். இதனால் பல தடவைகள் இராம தரிசனத்தைப் பெறும் பாக்கியம் இவருக்குக் கிடைத்தது. இம் முக்கிய சந்தர்ப்பங்களில் ஏலநீதயராது (அடாணா இராகம்) கனுகொண்டினி (பிலகரி இராகம்) ஆகிய கீர்த்திகளை இயற்றினார்.

நாரத பகவான் ஒரு சந்நியாசி வேடத்தில் இவருக்குத் தரிசனமளித்து ஸ்வரார்ணம் என்ற சங்கீதக் கிரந்தத்தை கொடுத்து விட்டுப் போனார். தமக்குக் கிடைத்த அந்தக் கிரந்தத்தை ஆதாரமாகக் கொண்டு சிறீ தியாகராஜர் சங்கீத இலக்கணங்கள் அமைந்த பல கிருதிகளை இயற்றினார்.

இவர் இளமையிலேயே சிறீ இராம, சீதா, லக்ஷ்மண விக்கிரகங்களை வைத்துப் பூசை செய்வதும், சிறீ ராம நாமத்தை செபிப்பதும் வழக்கமாக இருந்தது. இவரது குணங்களை வெறுத்த இவரது தமையனார் ஜபேசன் ஒருநாள் இரவு இவர் பூஜித்து வந்த சீதா, ராம, லக்ஷ்மண விக்கிரகங்களைத் தூக்கி காவேரி நதியில் எறிந்து விட்டார். தமது வழிபாட்டு விக்கிரகங்களைக் காணாமல் வேதனையுற்ற தியாகராஜர் அவற்றைத் தேடி அலைந்து ஈற்றில் சிறீ இராமபிரான் அருளால் விக்கிரகங்கள் கிடக்குமிடத்தை அறிந்து மிக்க மகிழ்ச்சியோடு அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.

இவர் பல தலங்களுக்கும் யாத்திரைகள் சென்று அங்கங்கே பல கீர்த்திகளை இயற்றி வந்தார். வழியில் ஒரு தடவை இவர் திருடர்களிடம் அகப்பட்டுக்கொள்ள நேரிட்ட போது, இராம லக்ஷ்மணர்களே சேவகர்கள் வடிவில் வந்து திருடர்களை விரட்டி விட்டார்கள். இது போன்ற பல அற்புத நிகழ்ச்சிகள் இவர் வாழ்வில் நிகழ்ந்துள்ளன.

 கீர்த்தனைகளைத் தவிர பிரகலாத பக்தி விஜயம், நவுகா சரித்திரம் முதலிய இசை நாடகங்களை இயற்றியுள்ளார். கனராக பஞ்சரத்தினம்நாரத பஞ்சரத்தினம்திருவொற்றியூர் பஞ்சரத்தினம்கோவூர் பஞ்சரத்தினம்சிறீரங்க பஞ்சரத்தினம்லால்குடி பஞ்சரத்தினம் ஆகிய கிருதிகளை இயற்றியுள்ளார். எல்லாக் கர்த்தா இராகங்களிலும் இவர் கிருதிகளை இயற்றியிருக்கின்றார். அவை அனைத்தும் பக்தி ரசம் ததும்புவன ஆகும்.

இவரது உருப்படிகள் உள்ளத்தை உருக்கும் படியான பாவத்துடன் அமைந்திருக்கும். முதன் முதலில் சங்கதிகளை உருப்படிகளில் ஒழுங்கான முறையில் பிரயோகித்தவர் இவரே ஆவார். சங்கதிகள் மூலம் கிருதிகளை மிகவும் அழகு பெறச் செய்யலாம் என்பதை இவர் நிரூபித்தார்.

வால்மீகி முனிவரே தியாகராஜராக அவதரித்தார் என்று கூறப்படுகின்றது. வால்மீகியானவர் 2400 சுலோகங்களில் இராமாயணத்தைச் செய்தார். இவர் 2400 கீர்த்தனைகளில் இராமாயணத்தை பாடியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

1845ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பிலே சுவாமிகளின் மனைவியார் காலமானார். 1847ஆம் ஆண்டில் தமது 80 ஆவது வயதில் தியாகராஜ சுவாமிகள் காலமானார். அவர் சித்திநிலை எய்துவதற்கு முன் வந்த தசமி இரவில் இன்னும் 10 நாட்களில் இறைவனின் பாதார விந்தத்தைச் சேருவதாகக் கனவு கண்டார். இதனை அச்சமயத்தில் இயற்றிய கிரிபை நெல எனும் சகானா இராக கிருதியில் விவரித்துள்ளார். இவரின் பூதவுடலானது அவர்தம் சீடர்களால் தக்க மரியாதைகளுடன் காவேரி ஆற்றங்கரையில் அவரது குருவின் (சொண்டி வெங்கட ரமணய்யர்) சமாதிக்கருகில் தகனம் செய்யப்பட்டது.

தியாகராஜ சுவாமிகளின் சமாதி திருவையாற்றில் காவேரி நதிக்கரையில் அழகொளிரக் காட்சியளிக்கின்றது. ஆண்டு தோறும் அங்கு இசைக் கலைஞர்கள் கூடி தியாகபிரம்மத்திற்கு பஞ்சரத்னக் கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்துகின்றனர். அன்னாரின் கீர்த்தனைகளை இசையுலகுக்கு அரும் பொக்கிசங்கள் ஆகும்.

ஆண்டு தோறும் தியாகராஜர் பிறந்த நாளில் திருவையாற்றில் அனைத்து கர்நாடக இசைக் கலைஞர்கள் கூடி, தியாகராஜருக்கு ஆராதனை செய்வர்






Sunday, January 16, 2022

ஆன்மிக தகவல் - உலகின் முதல் பத்து பெரிய இந்து கோவில்களின் தொகுப்பு !!!

  1. ஆங்கோர் வாட் - ஆங்கோர் - கம்போடியா

அங்கோர் வாட் என்பது கம்போடிய நாட்டின் அங்கோர் என்னும் இடத்தில் உள்ள கோவில்களின் தொகுப்பைக் குறிக்கும். இதுவே உலகின் மாபெரும் சமயம் சார்ந்த கட்டிடம் ஆகும். இதன் பரப்பு 162.6 எக்டேர்கள் (1,626,000 m2; 402 ஏக்கர்கள்). இது 12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இரண்டாம் சூரியவர்மனால் அவனது நாட்டின் தலைநகராகவும் நாட்டின் கோவிலாகவும் கட்டப்பட்டது. கட்டப்பட்ட காலத்தில் இருந்தே மிகவும் முதன்மையான வழிபாட்டு இடமாக உள்ள கோவில் இது ஒன்றே. முதலில் திருமால் கோவிலாக இருந்த இது தற்போது பவுத்தக் கோவிலாக உள்ளது.

2. அரங்கநாத சுவாமி கோயில் - ஸ்ரீரங்கம் - திருச்சிராப்பள்ளி

இந்தக் கோவில் மொத்தம் 156 ஏக்கர் (631,000 m²) நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதன் சுற்றளவு 4,116 மீட்டர் (10,710 அடி). இந்தியாவின் மிகப்பெரிய கோவில் இதுவேயாகும்.மேலும் உலகில் உள்ள சமயம் சார்ந்த பெரிய வளாகங்களுள் இதுவும் ஒன்று. ஏழு சுற்றுக்களும் 21 கோபுரங்களும்  கொண்டது.

3. அக்சரதாம் -  தில்லி 

அக்சர்தாம் இந்தியாவின் தில்லியில் உள்ள ஓர் இந்துக் கோவில் வளாகமாகும்.தில்லி அக்சர்தாம் என்றும் சுவாமி நாராயண் அக்சர்தாம் என்றும் வழங்கப்பெறுகிறது.7,000 கட்டிடக் கலைஞர்களைக் கொண்டு கட்டப்பட்டது.

4.  ஸ்ரீராமகிருஷ்னா மடம் - பேலூர் - ஹவுரா - மேற்கு வங்காளம்

பேலூர் மடம் என்பது இராமகிருட்டிணரின் தலைமைச் சீடரான விவேகானந்தரால் தொடங்கப்பபட்ட இராமகிருட்டிண இயக்கத்தின் தலைமையகம் ஆகும். இது மேற்கு வங்களாத்தில் ஊக்லி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. கொல்கத்தா நகரின் முக்கிய நிறுவனங்களுள் இதுவும் ஒன்று. இக்கோவில் இந்து, முசுலீம், கிறித்துவ மதங்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் விதமாக இம்மூன்றின் கட்டிடக்கலை அமைப்புகளையும் உள்ளடக்கிக் கட்டப்பட்டுள்ளது.

5. நடராசர் கோயில் - சிதம்பரம்  - கடலூர்

தில்லை நடராசர் கோவில் அல்லது கூத்தன் கோவில் என்று அறியப்படும் கோவில் தமிழ்நாட்டின் சிதம்பரத்தில் உள்ள ஒரு பெரிய சிவன் கோவில். இது 40 ஏக்கர் பரப்பளவில் சிதம்பரம் நகரின் நடுவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் சிவனைத் தவிர சிவகாமி அம்மன், முருகன், பிள்ளையார், கோவிந்தராசப் பெருமாள் ஆகியோருக்கும் கோவில்கள் உள்ளன.


6.பிரம்பானான் கோயில்- யோக்யகர்த்தா- இந்தோனேசியா

பிரம்பானான் கோவில் என்பது இந்தோனேசியாவின் மத்திய சாவகத்தில் உள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இங்கு பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் கூட கோவில்கள் உள்ளன. இக்கோவில் யோக்கியகர்த்தா நகரில் இருந்து 17 கி.மீ தொலைவில் வடகிழக்குத் திசையில் உள்ளது.

7. பெருவுடையார் கோவில் - தஞ்சாவூர்

தஞ்சைப் பெருவுடையார் கோயில்அல்லது தஞ்சைப் பெரிய கோயில் என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ளசோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார். 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.

8. அண்ணாமலையார் கோயில் -    திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோவில் ஒரு குறிப்பிடத்தகுந்த சிவன் கோவில் ஆகும். கோவில் செயல்கள் நடைபெறும் பரப்பளவின் அடிப்படையில் இது இரண்டாவது பெரிய கோவிலாக விளங்குகிறது. கோவிலின் நாற்புறமும் கோபுரங்களும் கோட்டை போன்ற உயர்ந்த மதில்களும் உள்ளன. 11 அடுக்குள்ள கிழக்குக் கோபுரமானது இராச கோபுரம் என்றழைக்கப்படுகிறது.


9. தக்சிணேசுவர் காளி கோயில் - கொல்கத்தா - மேற்கு வங்காளம்

காளி கோயில், தக்சிணேஸ்வர் ) இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் தலை நகரான கொல்கத்தாவின் தக்சிணேஸ்வர் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். ஹூக்ளி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இக் கோயிலின் முதன்மைக் கடவுள் காளியின் ஒரு அம்சமான பவதாரிணி.தலைமைக் கோயில் ஒன்பது விமானம் போன்ற அமைப்புகளைக் கொண்டு விளங்குகிறது. இக் கோயிலைச் சுற்றி வெளியிடமும், அதனைச் சூழவுள்ள மதிலின் உட்புறத்தில் அறைகளும் அமைந்துள்ளன. ஆற்றங்கரையில் சிவனுக்குப் பன்னிரண்டு சிறு கோவில்கள் அமைந்துள்ளன. கடைசிச் சிவன் கோயிலுக்கு அருகே வட மேற்கு மூலையில் அமைந்துள்ள கூடம் ஒன்றிலேயே இராமகிருஷ்ண பரமஹம்சர் தனது வாழ்வின் குறிப்பிடத்தக்க காலப் பகுதியைக் கழித்தார் என்று சொல்லப்படுகிறது.

10.ராஜகோபால சுவாமி கோயில் - மன்னார்குடி - திருவாரூர்

மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்  ஒரு வைணவக் கோயில் ஆகும். இங்கு உறையும் ராசகோபாலசுவாமி கிருஷ்ணரின் ஒரு வடிவமாக அறியப்படுகிறது.இந்தக் கோவில் 23 ஏக்கர் (93,000 மீ 2) பரப்பளவில் பரவியுள்ளது. குருவாயூரைச் சேர்த்து இந்த கோவிலை தட்சிண துவாரகை (தெற்கு துவாரகா) என இந்துக்கள் கூறுகின்றனர்.நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதனால் சென்பகாரண்யா க்ஷேத்திரம் எனவும், குலோத்துங்க சோழன் இக்கோயிலை அமைத்தபடியால் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்றும், ஸ்ரீ ராஜகோபாலன் கோயில் கொண்டிருப்பதால் ராஜமன்னார்குடி என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோயில் கட்டியதால் மன்னார்கோயில் என்றும், இவ்வூர் அழைக்கப்படுகிறது.


Tuesday, December 28, 2021

ஆன்மீக தகவல் - பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்கள்

 பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்பவை கிருஷ்ணருக்கான தமிழநாட்டில் அமைந்துள்ள ஐந்து தலங்களாக கூறப்படுகிறது.  இதனை பஞ்ச கிருஷ்ண சேத்தரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

1. லோகநாதப் பெருமாள் கோயில்,திருக்கண்ணங்குடி                நாகப்பட்டினம் மாவட்டம்

  வசிஷ்ட முனிவர் வெண்ணெயால் கிருஷ்ண விக்கிரகம் செய்து வழிபட்டு வந்தார். அவரது ஆழ்ந்த பக்தியின் காரணமாக அந்த விக்கிரகம் உருகாமல் இருந்து வந்தது. ஒரு நாள் கிருஷ்ணர் சிறுவனாக வசிஷ்டரின் வீட்டுக்குள் நுழைந்து வெண்ணெய் விக்கிரகத்தைச் சாப்பிட்டு விட்டு வெளியே ஓடினார். ஓடிய சிறுவனைத் துரத்திச் சென்றார் வசிஷ்டர். சிறுவன் ஓடிய வழியில் ஒரு மகிழ மரத்தடியில் சில முனிவர்கள் அமர்ந்து கிருஷ்ணரைத் தியானம் செய்துகொண்டிருந்தனர். ஓடிவந்த சிறுவன் கிருஷ்ணரே என அவர்கள் புரிந்து கொண்டனர். சிறுவனாய் வந்த கிருஷ்ணர் அவர்களின் பக்தியில் மகிழ்ந்து, அவர்களுக்கு ஒரு வரம் தருவதாகச் சொல்ல, அவர்கள் கிருஷ்ணரை அவ்விடத்திலேயே தங்கிவிடுமாறு வேண்டினர். அவரும் அங்கேயே தங்கிவிட்டார். துரத்தி வந்த வசிஷ்டரும் கிருஷ்ணர் நடத்திய லீலையை அறிந்து கொண்டார். இந்நிகழ்வு நடந்ததாகக் கூறப்படும் இடம்தான் திருக்கண்ணன்குடி. அவ்விடத்தில் லோகநாதப் பெருமாள் கோவில் கோபுரத்துடன் எழுப்பப்பட்டது.

2. நீலமேகப்பெருமாள் கோயில் ,திருக்கண்ணபுரம் ,                   நாகப்பட்டினம் மாவட்டம் 

இக்கோவில் அர்ச்சகர் ஒருநாள், கோவிலுக்கு வந்த அரசனுக்கு சுவாமிக்கு சூடிய மாலையைத் தர அதில் ஒரு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால் கோபங்கொண்ட அரசனிடம், அர்ச்சகர் அது பெருமாளின் திருமுடி என்று சொல்லிவிட, அரசன் தான் நாளை வந்து பார்க்கும் போது பெருமாளுக்கு முடி இல்லையெனில் அர்ச்சகர் தண்டனைக்குள்ளாவார் என்று கூறிவிட்டுச் சென்றான். அர்ச்சகர் பெருமாளிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார். அவரிடம் இரக்கம்கொண்ட பெருமாள் அவரைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார். அடுத்த நாள் அரசன் வந்து பார்த்தபோது உண்மையிலேயே பெருமாள் தலையில் திருமுடி இருந்தது. இந்நிகழ்வின் காரணமாகவே உற்சவர் சௌரிராஜப்பெருமாள் எனப் பெயர் கொண்டுள்ளார் என்பது தொன்நம்பிக்கை. உற்சவர் உலாவில் அமாவாசையன்று மட்டும் திருமுடி தரிசனம் காணலாம்.

3.பக்தவத்சலப்பெருமாள் கோயில் ,திருக்கண்ணமங்கை,  திருவாரூர் மாவட்டம்

மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப் பெருமாளைக் கைப்பிடித்த தலம் என்பதால் இவ்விடம் லட்சுமி வனம் என்றும் அழைக்கப்படுகிறது. சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கமைந்த புஷ்கரணியில் நீராடி சாபவிமோசனம் பெற்றான் என்பது நம்பிக்கை.திருமணக் கோலம் தினசரி காண முனிவர்கள் தேனீ வடிவில் உள்ளனர்.

4. கஜேந்திர வரதப் பெருமாள்        கோயில்,கபிஸ்தலம்,தஞ்சாவூர் மாவட்டம்

கபி என்றால் குரங்கு என்று பொருள். ஸ்ரீஆஞ்சநேயர் கடும் தவம் செய்து பெருமாளின் தரிசனம்பெற்றார் எனவே கபிஸ்தலம் என அழைக்க பட்டது. இந்திரஜ்யும்னன் என்ற அரசன் சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான். ஒரு சமயம் அவன் விஷ்ணு வழிபாட்டில் தன்னை மறந்து ஆழ்ந்திருந்த போது அவனைக் காண துர்வாச முனிவர் வந்தார். அரசன் அவரது வருகையை உணரவே இல்லை. தன்னை அரசன் அவமதித்து விட்டதாகக் கோபம் கொண்ட முனிவர் ’முனிவர்களை மதிக்கத் தெரியாத நீ யானையாகப் பிறப்பாய்’ எனச் சாபம் கொடுத்து விட்டார். பின் தன்னை மன்னிக்கும்படி வேண்டிய அரசனிடம், ‘திருமால் மேல் பக்தி கொண்ட யானைகளுக்கு அரசனாகப் பிறந்து, திருமால் மூலமாக சாப விமோசனம் அடைவாய்’ என்று கூறினார்.

ஒரு குளக்கரையில் இருந்த கூஹூ என்ற அரக்கன், குளத்தில் குளிக்க வருவோரையெல்லாம் காலைப் பிடித்து நீருக்குள் இழுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தான். ஒரு நாள் அங்கு வந்த அகத்தியர் காலையும் நீருக்குள் இழுத்து, அவர் அவனை முதலையாக்கி சாபம் கொடுத்தார். மன்னிப்பு வேண்டி நின்ற அரக்கனுக்கு திருமால் மூலம் சாப விமோசனம் கிடைக்கும் எனக் கூறினார்.

வழக்கம் போல் ஒருநாள் யானைகளின் அரசனான கஜேந்திரன், விஷ்ணுவை வழிபட தாமரைப்பூ எடுப்பதற்கு அக்குளத்திற்குள் சென்றபோது, முதலையாக அங்கிருந்த அரக்கன் கஜேந்திரனின் ஒரு காலைக் கவ்விக்கொண்டான். காலை விடுவித்துக் கொள்ளமுடியாத கஜேந்திரன் திருமாலை ‘ஆதிமூலமே காப்பாற்று’ என்று அபயக்குரல் கொடுத்தது. திருமாலும் காட்சி தந்து முதலையைக் சக்ராயுதத்தால் கொன்று யானையைக் காப்பாற்றினார். முதலை, யானை இரண்டுமே சாபவிமோசனம் அடைந்தனர். இவ்வாறு யானைக்குத் திருமால் அருளிய தலமே கபிஸ்தலமாகும்.

ஆஞ்சனேயருக்கும் அருள் அளித்த தலம் இந்த கபிஸ்தலம் (கபி-தலம்). இத்தலம் கவித்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

5. உலகளந்த பெருமாள் கோவில்,திருக்கோவிலூர்,கள்ளக்குறிச்சி மாவட்டம்

மகாபலி என்னும் அசுர அரசன் தான தர்மத்தில் சிறந்தவன் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான். அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன (குள்ள) அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார். குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக்கொள்கிறான்.

அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். மகாபலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.

மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது. அவ்வரலாற்றின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோயில் கருவறையில் மூலவராக, வடிக்கப்பெற்றிருக்கிறது.



Wednesday, December 22, 2021

ஆன்மீக தகவல் - பஞ்சரங்க தலங்கள்

 பஞ்சரங்க தலங்கள் அல்லது பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்பன காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின்  கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும். ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்றும் பொருள்படும்.



1. ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம் ,  மாண்டியா மாவட்டம் , கர்நாடக மாநிலம்

 சப்தரிஷிகளில் ஒருவரான கவுதமர், இங்கு வந்து பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். பெருமாள் அவருக்கு புஜங்க சயன திருக்கோலத்தில் காட்சி தந்தார். பெருமாளிடம் அதே கோலத்தில் இங்கு எழுந்தருளும்படி வேண்டிக் கொண்டார். இக்கோவில் 9 ஆம் நூற்றாண்டில் கங்கர் வம்ச அரசர்களால் கட்டப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஹோய்சாள மற்றும் விசயநகர மன்னர்களாலும் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

2. மத்தியரங்கம் - ஸ்ரீரங்கம் , திருச்சிராப்பள்ளி மாவட்டம்

 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய ஒரு சுயம்புத் தலம். இங்கு பெருமாள் தங்கத்தால் வேயப்பட்ட விமானத்தின் கீழே புஜங்க சயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார். மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம். இதை அனந்தரங்கம் என்ற பெயரிலும் அழைக்கிறார்கள்.

3. அப்பாலரங்கம் - கோவிலடி, தஞ்சாவூர் மாவட்டம்

இந்திரகிரி மற்றும் பலாசவனம் என்ற புராதனப் பெயர்களாலும் அறியப்படும் இந்த திவ்யதேசம் ஸ்ரீரங்கத்திற்கும் முன்னதாக ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது. உபமன்யுவிடமிருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு அப்பக்குடத்தான் (அப்பலா ரங்கநாதர்) என்ற பெயர் வழங்கலாயிற்று. இங்கு பெருமாள் மேற்கு நோக்கிய கோலத்தில், புஜங்க சயனத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாள், இந்திரனுக்குக் கர்வம் போக்கியும், மார்க்கண்டேய முனிவருக்கு எம பயம் நீக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம் மற்றும் பாவம் போக்கியும் அருளிய தலமாகும்.

4.சதுர்த்தரங்கம் - கும்பகோணம் , தஞ்சாவூர் மாவட்டம்

பஞ்சரங்க தலங்களில் சதுர்த்தரங்கம் என்று சொல்லப்படும் சாரங்கபாணி கோவில், காவிரி நதி - காவிரி, அரசலாறு என்று - இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் இடமான கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இந்த திவ்யதேசத்தில் பெருமாள் சன்னதி ஒரு தேர் போன்ற அமைப்பில் இருக்கிறது. தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தெட்சிணாயன வாசல்கள் உள்ளன. பெருமாள் வைதிக விமானத்தின் கீழ் சங்கு, சக்கரம் மற்றும் சாரங்கம் என்னும் வில்லும் ஏந்தியவாறு கிழக்கு நோக்கி உத்தான சயன திருக்கோலத்தில் அருள் புரிகிறார். எனவே இவர் சாரங்கபாணி என்று பெயர் பெற்றுள்ளார் இத்தலத்தில் பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்துள்ளார்கள்.

5. பஞ்சரங்கம் - திருஇந்தளூர் , மயிலாடுதுறை மாவட்டம்

சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப்பெற்றமையால் இவ்வூர் திருஇந்தளூர் எனப்பெயர் பெற்றது.வேதசக்ர விமானத்தின் கீழ் பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார். பெருமாள் சந்நிதியின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். பரிமளரங்கநாதர் திருவடிகளில் யமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து வழிபாடு செய்கினறனர்.