Thursday, November 2, 2023

RAMAYANAM PART 102

 இராமாயணம் தொடர் 102
சுக்ரீவன் இராவணன் மீது பாய்ந்து செல்லுதல்!...
💫 அன்றிரவு பொழுது கலைந்து சூரியன் உதித்தது. இராவணன் இராமனுடன் வந்திருக்கும் வானர படைகளின் அளவை கண்டறிய விரும்பினான். ஆதலால் அவன் இரம்பை, ஊர்வசி மற்றும் ஒற்றர்களுடன் கோபுரத்தின் மீது ஏறி நின்று வானர படையை நோக்கினான். வானர படையின் அளவைக் கண்டு போர் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தான். தூரத்தில் இராமர் நிற்பதையும் கண்டு மனதில் கோபங்கொண்டான். உடனே அங்கு ஒற்றனாகச் சென்ற சாரனை அழைத்து அதோ அங்கு கரிய நிறத்தில் நிற்பவன் தான் இராமன் என்பது தெரிகிறது. அருகில் நிற்கும் மற்றவர்கள் எல்லாம் யார்? என்பதை எனக்குச் சொல் என்றான். சாரன் இராமனுக்கு அருகில் நிற்கிறானே அவன் தான் இலட்சுமணன். தங்கள் தங்கை சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தவன். இவன் இராமனை இரவும் பகலும் கண் இமைக்காமல் காவல் புரிகிறான். அவன் பக்கத்தில் இருப்பவன் தான் சுக்ரீவன். வாலியின் சகோதரன். போரில் வாலியை தோற்கடித்தவன்.
💫 அவன் அருகில் நிற்பவன் தான் அங்கதன். வாலியின் புதல்வன். வாலியை போலவும் மிகவும் வலிமை படைத்தவன். அங்கு மிகவும் பலசாலியாக இருக்கிறான் அல்லவா? அவன் தான் அனுமன். இலங்கைக்கு வந்து அரக்கர்களை கொன்று, நகரை தீமூட்டியவன். அனுமன் அருகில் நிற்பவன் தான் நீலன். இவன் பிறர் வியக்கும் அளவுக்கு ஆற்றல் மிக்கவன். இவனை காட்டிலும் சிறிது மாறுபட்டு இருப்பவன் தான் நளன். இவன் தான் இராமர் முதலிய வானரங்கள் கடலை கடந்து வருவதற்கு ஐந்து நாட்களில் கடலின் மேல் அணைக்கட்டியவன். அங்கு கரடி போல நிற்கிறான் அல்லவா? அவன் தான் கரடி இனத் தலைவன் ஜாம்பவான். அனைத்தையும் தன் அறிவால் உணரக்கூடிய ஆற்றலைப் பெற்றவன். உலகங்களை அழிக்கும் அளவிற்கு வலிமை உடையவன். இப்படி சாரன் வானர வீரர்களைப் பற்றி இராவணனிடம் கூறினான். பிறகு அவன் இந்த வானர படைகளின் ஆரம்பமும், எல்லையும் தெரியவில்லை என்றான்.
💫 சாரன் கூறியதைக்கேட்ட இராவணன் கோபத்துடன் சிரித்தான். இராவணன் சாரனிடம் பேசிக் கொண்டிருப்பதை தூரத்தில் இருந்த விபீஷணன் பார்த்தான். உடனே விபீஷணன் இராமரிடன் சென்று, பெருமானே! அதோ! அரண்மனையின் மேல் கோபுரத்தில் நின்றுக் கொண்டிருக்கிறான் அல்லவா? அவன் தான் இராவணன் என்றான். அவன் பக்கத்தில் இருப்பவர்கள் தேவலோகத்து பெண்களான இரம்பை, ஊர்வசி என்றான். இராவணனை பார்த்த சுக்ரீவன் இராவணன் மீது கோபங்கொண்டு வானத்தில் பாய்ந்து சென்று கோபுரத்தில் நின்று கொண்டிருந்த இராவணன் மீது பாய்ந்தான். எதிர்ப்பாராமல் இப்படி சுக்ரீவன் இராவணன் மேல் விழுந்ததை பார்த்த தேவலோகத்து பெண்கள் பயந்து அங்கிருந்து ஓடினர். இராவணன் சுக்ரீவனைப் பார்த்து எதற்காக இங்கு வந்தாய்? என்றான். அரக்கனே! உன்னை அழிக்க தான் இங்கு வந்துள்ளேன் என கூறி இராவணன் மீது பாய்ந்தான்.
💫 சுக்ரீவனுக்கும் இராவணனுக்கும் இடையே கடும் போர் நிகழ்ந்தது. சுக்ரீவனால் தாக்கப்பட்ட இராவணன் வலியால் கத்தினான். பொறுமையிழந்த இராவணன் சுக்ரீவனை இரத்தம் சிந்தும் அளவிற்கு தாக்கினான். பலமாக உதைத்தான். இருவரும் கடுமையாக சண்டையிட்டார்கள். அங்கு இராமர், சுக்ரீவன் தனிமையில் நின்று போர் புரிவதை கண்டு மிகவும் வருந்தினார். சுக்ரீவா! நான் உன்னை இழந்து சீதையை மீட்டுச் செல்வது வெற்றியாகாது. பலம் பொருந்திய இராவணனை வெல்வது என்பது எளிதானது அல்ல. ஆதலால் நீ நிதானத்தை கடைப்பிடித்து இங்கு வந்துவிடு என மனதில் நினைத்துக் கொண்டு வருந்தினார். அப்பொழுது சுக்ரீவன், இராவணனின் ஒளி மிகுந்த கிரீடத்திலிருந்து மணிகளை பறித்துக் கொண்டு அங்கு வந்து நின்றான். சுக்ரீவனை கண்ட இராமர் நிம்மதியடைந்தார். பிறகு  சுக்ரீவனை தழுவிக் கொண்டார்.
தொடரும்...

No comments:

Post a Comment