Showing posts with label மாணவர்கள் உலகம். Show all posts
Showing posts with label மாணவர்கள் உலகம். Show all posts

Sunday, July 21, 2024

Vidyarthi Vigyan Manthan (VVM 2024) - A Digital Based and Largest Science Talent Search Examination for Emerging India !!!

 வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்-2024

 இணைய வழியில் அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு-2024 

 வெற்றி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ஒரு வருடத்திற்கு உதவித்தொகை 

இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் , விபா , என்.சி,இ,ஆர்,டி ( NCERT, GOVT.OF INDIA) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.  மாணவர்கள் தாம் பயின்று வரும் பள்ளியில் இருந்தே இத்தேர்வை எழுதலாம், அல்லது வீட்டில் இருந்தவாறே  இத்தேர்வை இணைய வழியில் மாணவர்கள் எழுதலாம். இந்தியா முழுவதும் இத்தேர்வை மாணவர்கள் எழுத திட்டமிடப்பட்டுள்ளது.   23-10-2024 (புதன் கிழமை) மற்றும்  27-10-2024 (ஞாயிற்றுக்கிழமை ) ஆகிய இரு நாட்கள்   இணையவழியில் நடைபெற உள்ளது. ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி , கணினி மூலம் தேர்வு நடைபெற உள்ளது.

 இந்த  திறந்த புத்தகத்தேர்வினை ஆங்கிலம் தவிர தமிழ் ,  மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் மாணவர்கள் தேர்வு எழுத இயலும். முக்கியமாக தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு தேசிய அளவிலான தேர்வு வரை அனைத்தும் தமிழிலேயே தேர்வு நடைபெறும்.


 தேர்வுக் கட்டணம்                   :     200 ரூபாய்

 விண்ணப்பிக்க கடைசி தேதி  :     15-9-2024

 தேர்வு நடைபெறும் நாள்         : 23-10-2024 (புதன் கிழமை)  மற்றும்

                                                               27-10-2023 (ஞாயிற்றுக்கிழமை ) 

தேர்வு நேரம்: 90 நிமிடங்கள்(1.30 மணி நேரம்)

நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை  எப்போது வேண்டுமானாலும் எழுதலாம்.

( ஒரு மாணவர் ஒரு முறை மட்டுமே எழுத முடியும்)

 யாரெல்லாம் தேர்வு எழுதலாம்? 

Ø  6ம் வகுப்பு முதல் 11 ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இத்தேர்வு எழுதலாம்.

Ø  6 முதல் 8 வரை ஒரு பிரிவாகவும் 9 முதல் 11 வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடைபெறும்.

 தேர்விற்கான பாடத்திட்டம்: 

பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித பாடப்புத்தகத்தில் இருந்து 50 சதவீத வினாக்களும், அறிவியல் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு,  Dr .சாந்தி சொரூப் பட்நாயக் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் இந்தியாவின் சுதந்திர போராட்டம் மற்றும் அறிவியல் ஆகிய புத்தகங்களில் இருந்து 40 சதவீத கேள்விகளும், சிந்தித்து விடையளித்தல் என்ற தலைப்பில் 10 சதவீத கேள்விகளும் ஆக மொத்தம் 100 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். 

 எவ்வாறு பதிவு செய்வது? 

www.vvm.org.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

 பள்ளி வழியாக: 

பள்ளி மூலமாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பள்ளி அளவிலான சான்றிதழ் வழங்கப்படும்.

 தனித்தேர்வர்களாக :

தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்க விரும்புவர்கள்  இணையதளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

 பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்: 

பள்ளி அளவில்:

பள்ளியில் ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 10 மாணாக்கர்கள் பங்கேற்றால் வகுப்பிற்கு 3 மாணாக்கர்களுக்கு பள்ளி அளவிலான மின் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

 மாவட்ட அளவில்: 

மாவட்ட அளவில் 

(6 முதல் 11 ம் வகுப்புவரை ) ஒவ்வொரு வகுப்பிற்கும் 3 பேர் வீதம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Ø  அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Ø  மாவட்ட மண்டல அளவில் அருகில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு  

அழைத்துச் செல்லப்படுவர்.

 மாநில அளவில்: 

மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவர். 

அத்தேர்வு செயல்முறை வடிவில் அமைந்து இருக்கும்.

Ø  இதில் தேர்வு செய்யப்படும் 120  மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்படும்.

Ø  120 மாணாக்கர்களில் வகுப்பிற்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு   ரொக்கப்பரிசாக முறையே ரூ.5000, ரூ.3000, ரூ,2000 வழங்கப்படும்.

 தேசிய அளவில்: 


Ø  ஒவ்வொரு வகுப்பிலும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை) முதல் 2 இடங்களை பெறும் மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான முகாமிற்கு அழைக்கப்படுவார்கள்.


Ø  தேசிய அளவில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும்.


 தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மாதந்தோறும் 2000 ரூபாய்   பாஸ்கரா உதவித்தொகை வழங்கப்படும்.


மேலும் ஸ்ரீஜன் என்ற பெயரில் தேசிய மற்றும் மண்டல அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் ஒன்று முதல் 3 வாரங்களுக்கு பயிற்சி பெறும் வாய்ப்பை பெறுகிறார்கள்.


Ø  தேசிய அளவிலான முகாமில் நடைபெறும் பல்வேறு வகையான அறிவியல் சார் நிகழ்வுகளில் பங்கேற்பர். அதில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை ) 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் முதல் , இரண்டாம், மூன்றாம் இடம் பெறும் மாணாக்கர்களுக்கு முறையே ரூ.25,000, ரூ.15,000, ரூ.10,000ரொக்கப்பரிசு வழங்கபபடும்.


Ø  மண்டல அளவிலும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக செய்த மாணாக்கர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ,2000 என ரொக்கப்பரிசு வழங்கப்படும்.


Ø  அனைத்து மாணாக்கர்களும் ஒவ்வொரு விஞ்ஞானி அல்லது ஆராய்ச்சியாளருடன் இணைக்கப்பட்டு அவர்கள் படிக்க , கருத்துக்களை தெரிந்து கொள்ள வழிகாட்டப்படுவார்கள்.


இதுபோன்ற தேர்வுகளால் மாணவர்களின் திறமைகள் கண்டறியப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வாய்ப்பாக அமையும்.

மேலும் விவரங்களுக்கு..

  கண்ணபிரான், 

மாநில ஒருங்கிணைப்பாளர்,

வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன், cell:8778201926  

 Email:vvmtamilnadu@gmail.com





Wednesday, June 12, 2024

IAS, IPS கனவல்ல நிஜம் !!!

 IAS, IPS தேர்வுகளை யாரெல்லாம் எழுத முடியும்? | ஒரு முழுமையான வழிகாட்டல்!!

இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு :

இந்திய அரசின் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission - UPSC), ஆண்டுதோறும் 24 வகையான இந்தியக் குடியியல் பணிகளுக்கு அகில இந்திய அளவில் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வினை (Civil Services Examination - CSE) நடத்துகிறது.

தேர்வை எழுதத் தகுதியுடையவர்கள் :

1. இந்தியக் குடிமகன்


2. நேபாளக் குடிமகன் அல்லது பூட்டான் குடிமகன்


3. ஜனவரி 1, 1962-ம் நாளுக்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய திபெத்திய அகதிகள்


4. இந்தியாவில் நிரந்தரமாகக் குடியேறும் நோக்கத்துடன் பாகிஸ்தான், மியான்மர், இலங்கை, கென்யா, உகாண்டா, தான்சானியா, சாம்பியா, மலாவி, ஜைர், எத்தியோப்பியா அல்லது வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.


கல்வித்தகுதி மற்றும் வயது :

இத்தேர்வு எழுதிட விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து ஏதாவதொரு பட்டத்தைப் (10+2+3) பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் விண்ணப்பிக்கும் ஆண்டில் ஆகஸ்ட் முதல் நாளில் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு 32 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். 

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மூன்று ஆண்டுகள் தளர்வுடன் 35 வயதுக்கு அதிகமாகாமலும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகள் தளர்வுடன் 37 வயதுக்கு அதிகமாகாமலும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகள் தளர்வுடன் 42 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். வயதுச் சான்றிதழுக்கு மெட்ரிக் அல்லது மேல்நிலைப்பள்ளிச் சான்றிதழ் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.


எழுதுவதற்கான வாய்ப்புகள் :

இந்தியக் குடியியல் பணிகள் தேர்வினைப் பொதுப்பிரிவினர்கள் குறிப்பிட்ட வயது வரம்புக்குள் ஆறு முறைகள் எழுத அனுமதிக்கப்படுவார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, அவர்களுக்கு அளிக்கப்பட்ட வயது வரம்பிற்குள் ஒன்பது முறைகளும், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர்களுக்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட வயது வரம்பிற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுத முடியும். இங்கு முதல் நிலைத் தேர்வில் ஒரு தாள் மட்டும் எழுதினாலும், தேர்வில் கலந்து கொண்டதாகவேக் கருதப்படும். எனவே, தேர்வுக்கு சரியாகத் தயார் செய்து கொள்ளவில்லை எனக் கருதினால், தேர்வு எழுதுவதை தவிர்த்துவிடுவது சிறந்தது.


காலியிடங்கள் : 

ஒவ்வொரு ஆண்டும் காலியிடங்களின் எண்ணிக்கை மாறுபடும். முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை பொதுவாக காலியிடங்களின் எண்ணிக்கையை விட 11 அல்லது 12 மடங்கு அதிகமாகும், மேலும் இறுதி நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை காலியிடங்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். தற்போதுள்ள கொள்கைகளின்படி, எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தேர்வு செயல்முறையின் ஒவ்வொரு நிலைக்கும் பொருந்தும்.


பணிகளின் பட்டியல் :

இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள், கீழ்க்காணும் 24 வகையான பணிகளில் பணியமர்த்தப்படுகிறார்கள். அவை...


1. இந்திய ஆட்சிப்பணி (Indian Administrative Service - IAS)


2. இந்திய அயலகப் பணி (Indian Foreign Service – IFS)


3. இந்தியக் காவல் பணி (Indian Police Service – IPS)


4. இந்திய அஞ்சல் மற்றும் தொலைதொடர்புக் கணக்குகள் மற்றும் நிதிப் பணி (Indian P & T Accounts & Finance Service – IPTA & FS, Group ‘A’)


5. இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குகள் பணி (Indian Audit and Accounts Service – IA&AS, Group ‘A’)


6. இந்திய வருவாய்ப் பணி (சுங்கம் மற்றும் மத்தியக் கலால்) ((Indian Revenue Service (Customs and Central Excise) – IRS (C&CE), Group ‘A’)


7. இந்தியப் பாதுகாப்புக் கணக்குகள் பணி (Indian Defence Accounts Service – IDAS, Group ‘A’)


8. இந்திய வருவாய்ப் பணி (வருமான வரி) (Indian Revenue Service (I.T) – IRS (IT), Group ‘A’)


9. இந்திய ஆயுதத் தொழிற்சாலைகள் பணி (Indian Ordnance Factories Service - IOFS Group ‘A’ (Assistant Works Manager, Administration))


10. இந்திய அஞ்சலகப் பணி (Indian Postal Service – IPS (Postal) Group ‘A’)


11. இந்தியக் குடிமைக் கணக்குகள் பணி (Indian Civil Accounts Service - ICAS, Group ‘A’)


12. இந்தியத் தொடருந்து போக்குவரத்துப் பணி (Indian Railway Traffic Service - IRTS, Group ‘A’)


13. இந்தியத் தொடருந்துக் கணக்குகள் பணி (Indian Railway Accounts Service - IRAS, Group ‘A’)


14. இந்தியத் தொடருந்துப் பணியாளர் பணி (Indian Railway Personnel Service - IRPS, Group ‘A’)


15. உதவிப் பாதுகாப்பு ஆணையர், தொடருந்து பாதுகாப்புப் படை (Post of Assistant Security Commissioner in Railway Protection Force, Group ‘A’)


16. இந்தியப் பாதுகாப்பு உடைமைகள் பணி (Indian Defence Estates Service - IDES, Group ‘A’)


17. இந்தியத் தகவல் பணி (இளநிலை) (Indian Information Service (Junior Grade), Group ‘A’)


18. இந்தியத் தொழில் பணி (Indian Trade Service - ITS, Group ‘A’)


19. இந்திய நிறுவனச் சட்டப் பணி (Indian Corporate Law Service - ICLS, Group “A”)


20. ஆயுதப் படைத் தலைமையக குடிமைப் பணி (Armed Forces Headquarters Civil Service, Group ‘B’) (Section Officer’s Grade).


21. டெல்லி, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், இலட்சத்தீவு, டாமன் மற்றும் டையூ மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி குடிமைப் பணி (Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service, Group ‘B’)


22. டெல்லி, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், இலட்சத்தீவு, டாமன் மற்றும் டையூ மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி காவல் பணி (Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service, Group ‘B’)


23. புதுச்சேரி குடிமைப் பணி (Pondicherry Civil Service, Group ‘B’)


24. புதுச்சேரி காவல் பணி (Pondicherry Police Service, Group ‘B’)  


தகுதித் தேர்வு :

இத்தேர்வு முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination), முதன்மைத் தேர்வு (Mains Examination) என்று இரு நிலைகளிலான தேர்வினைக் கொண்டிருக்கிறது. முதல்நிலைத் தேர்வில் தாள் 1, தாள் 2 என்று இரு தேர்வுகளும், முதன்மைத் தேர்வில் தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வு (நேர்காணல்) என்று அமைந்திருக்கிறது.


முதல்நிலைத் தேர்வு :

முதல்நிலைத் தேர்வில் தாள் 1 தேர்வில் தற்போதைய நிகழ்வுகள், இந்தியா மற்றும் இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு, இந்திய மற்றும் உலகப் புவியியல், இந்திய அரசியல், பஞ்சாயத்து ராஜ் அமைப்பு மற்றும் நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடு, சுற்றுச்சூழல், சூழலியல், பல்லுயிர், காலநிலை மாற்றம் மற்றும் பொது அறிவியல், கலை மற்றும் பண்பாடு ஆகியவற்றில் விண்ணப்பதாரரின் அறிவை சோதிக்கும் வகையிலான கேள்விகளைக் கொண்டதாக அமைந்திருக்கும்.

தாள் 2 தேர்வில் விண்ணப்பதாரரின் புரிதல், தனிப்பட்ட திறன்கள், தகவல் தொடர்பு, தர்க்கரீதியான பகுத்தறிவு, பகுப்பாய்வு திறன், முடிவெடுத்தல், சிக்கலைத் தீர்ப்பது, அடிப்படை எண், தரவு விளக்கம், ஆங்கில மொழியினைப் புரிந்து கொள்ளும் திறன் மற்றும் மனத்திறன் ஆகியவற்றை சோதிக்கும் வகையிலான கேள்விகளைக் கொண்டதாக அமைந்திருக்கும்.

இந்தத் தாளில் பெற்ற மதிப்பெண்கள் தகுதிக்காகக் கணக்கிடப்படுவதில்லை. இருப்பினும், முதல்நிலைத் தகுதித் தேர்வில் தகுதி பெற, விண்ணப்பதாரர் இந்தத் தாளில் குறைந்தபட்சம் 33 சதவீத மதிப்பெண்களைப் பெறுவது கட்டாயமாக இருக்கிறது.

முதல்நிலைத் தேர்வானது, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் நடத்தப்பெறுகிறது. இத்தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படுகிறது.

முதன்மைத் தேர்வு :

முதன்மை எழுத்துத் தேர்வானது ஒன்பது தாள்கள், இரண்டு தகுதி மற்றும் ஏழு தர வரிசைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தாளுக்கும் 3 மணி நேரம் வழங்கப்படுகிறது.


1. தாள் அ (Paper A) எனும் தாளுக்கு இந்திய அரசின் எட்டாவது அட்டவணையிடப்பட்டுள்ள அசாம், வங்காளம், போடோ, டோக்ரி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு உருது ஆகிய 23 மொழிகளில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். இந்தத் தாளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.


2. தாள் ஆ (Paper B )எனும் தாளில் ஆங்கிலம் இருக்கிறது. இந்தத் தாளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.


3. தாள் 1 எனும் தாளில் கட்டுரைகள் (Essays) இருக்கிறது. இந்தத் தாளுக்கு மொத்தம் 250 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.  


4. தாள் 2 எனும் பொது ஆய்வுகள் – 1 எனும் தாளில் இந்தியப் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் (Indian Heritage and Culture), உலகின் வரலாறு மற்றும் புவியியல் (History and Geography of the World) மற்றும் சமூகம் (Society) தொடர்பான கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இந்தத் தாளுக்கு மொத்தம் 250 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.


5. தாள் 3 எனும் பொது ஆய்வுகள் – 2 எனும் தாளில் ஆட்சி (Governance), அரசியலமைப்பு (Constitution), அரசியல் (Polity), சமூக நீதி (Social Justice) மற்றும் பன்னாட்டு உறவுகள் (International Relations) தொடர்பான கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இந்தத் தாளுக்கு மொத்தம் 250 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.


6. தாள் 4 எனும் பொது ஆய்வுகள் – 3 எனும் தாளில் தொழில்நுட்பம் (Technology), பொருளாதார மேம்பாடு (Economic Development), உயிரியல் பன்முகத்தன்மை (Bio-Diversity), சுற்றுச்சூழல் (Environment), பாதுகாப்பு (Security) மற்றும் பேரிடர் மேலாண்மை (Disaster Management) தொடர்பான கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இந்தத் தாளுக்கு மொத்தம் 250 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.


7. தாள் 5 எனும் பொது ஆய்வுகள் – 4 எனும் தாளில் நெறிமுறைகள் (Ethics), ஒருமைப்பாடு (Integrity) மற்றும் தகுதி (Aptitude) தொடர்பான கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இந்தத் தாளுக்கு மொத்தம் 250 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.


8. 6 மற்றும் 7 தாள்களுக்கு வேளாண்மை (Agriculture), கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல் (Animal Husbandry and Veterinary Science), மானுடவியல் (Anthropology), தாவரவியல் (Botany), வேதியியல் (Chemistry), கட்டிடவியல் பொறியியல் (Civil Engineering), வணிகம் மற்றும் கணக்குப்பதிவியல் (Commerce and Accountancy), பொருளியல் (Economics), மின்னியல் பொறியியல் (Electrical Engineering), புவியியல் (Geography), நிலவியல் (Geology), வரலாறு (History), சட்டம் (Law), மேலே பட்டியலிடப்பட்ட மொழிகளில் ஒன்றின் இலக்கியம் (Literature of any one of the languages listed above), மேலாண்மை (Management), கணிதம் (Mathematics), இயந்திரவியல் பொறியியல் (Mechanical Engineering), மருத்துவ அறிவியல் (Medical Science), மெய்யியல் (Philosophy), இயற்பியல் (Physics), அரசியல் அறிவியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் (Political Science and International Relations), உளவியல் (Psychology), பொது நிர்வாகம் (Public Administration), சமூகவியல் (Sociology), புள்ளியியல் (Statistics), உருது (Urdu), விலங்கியல் (Zoology) எனும் விருப்பப் பாடங்களின் பட்டியலிலிருந்து ஒரு பாடத்தில் இரண்டு தாள்களைத் தேர்வு செய்திட வேண்டும். இந்தத் தாள்கள் ஒவ்வொன்றுக்கும் 250 மதிப்பெண்கள் வீதம் இரு தாள்களுக்கு மொத்தம் 500 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

மொத்தத்தில் இந்த ஒன்பது தாள்களின் எழுத்துத் தேர்வுகளுக்கு மொத்தம் 1750 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

முதன்மைத் தேர்வானது, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நடத்தப்பெறுகிறது. இத்தேர்வின் முடிவுகள் ஜனவரி மாதத்தில் வெளியிடப்படுகிறது.

ஆளுமைத் தேர்வு :

பொதுச்சேவையில் ஒரு பணிக்கு விண்ணப்பதாரரின் தனிப்பட்ட பொருத்தத்தை மதிப்பிடுவதாக இந்த நேர்காணல் அமைகிறது. இந்நேர்காணலானது, தீர்மானிக்கப்பட வேண்டிய சில குணங்கள் மன விழிப்புணர்வு, ஒருங்கிணைக்கும் முக்கியமான சக்திகள், தெளிவான மற்றும் தர்க்கரீதியான வெளிப்பாடு, தீர்ப்பின் சமநிலை, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்திற்கான திறன் மற்றும் அறிவுசார் மற்றும் தார்மீக ஒருமைப்பாடு என்று விண்ணப்பதாரரின் அறிவுசார் குணங்கள் மட்டுமின்றி, சமூகப் பண்புகள் மற்றும் நடப்பு விவகாரங்களில் உள்ள ஆர்வத்தின் மதிப்பீடாகவும் அமைகிறது. ஆளுமைத் தேர்வுக்கு (நேர்காணல்) 275 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கான 1750 மதிப்பெண்கள், ஆளுமைத் தேர்வுக்கான 275 மதிப்பெண்கள் என்று மொத்தம் 2025 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறையினைப் பின்பற்றி, கூடுதல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் இந்தியக் குடியியல் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்தியக் குடியியல் பணிகளுக்குத் தேர்வு செய்யப் பெற்ற விண்ணப்பதாரர்களின் மருத்துவப் பரிசோதனை மற்றும் பிற தேவையான நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான பயிற்சித் திட்டம் அடுத்து வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்குகிறது. பயிற்சி நிறைவுக்குப் பின்பு, அவர்களுக்கான பணி மற்றும் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


அதிகாரப்பூர்வ இணையதளம் :

https://upsc.gov.in/

மாதிரி வினாத்தாட்கள் : 

Click to get pervious year question papers 


தொகுப்பு :

வா ஶ்ரீராம் ,

பட்டதாரி கணித ஆசிரியர்,

மாநில ஊடக இணைச் செயலர், 

தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு.

கைபேசி : 7305518764

Sunday, February 18, 2024

ISRO - இளைஞர் விஞ்ஞானிகள் திட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க அழைப்பு !!!

 மாணவர்களிடம் விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பள்ளிக் குழந்தைகளுக்காக ‘இளம் விஞ்ஞானிகள் திட்டம்’ (யுவிகா) என்ற சிறப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.


இதில், இரண்டு வார வகுப்பறை பயிற்சி, பரிசோதனை விளக்கம், கேன்சாட், ரோபோடிக் கிட், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு இடம்பெற்றுள்ளன. மாணவர்களின் இருப்பிட அடிப்படையில், ஐந்து குழுக்களாகப் பயிற்சிஅளிக்கப்படுகிறது.


2024-ம் ஆண்டுக்கான யுவிகா திட்டத்தில் பங்கேற்க விரும்பும் 9-ம் வகுப்பு மாணவர்கள் வரும் 20முதல் மார்ச் 20-ம் தேதி வரை https://jigyasa.iirs.gov.in/registration என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.