Thursday, November 2, 2023

RAMAYANAM PART 103

இராமாயணம் தொடர் 103

வானரங்கள் இலங்கையை சுற்றி வளைத்தல்!!!
🐒 இராமர் சுக்ரீவனிடம், தம்பி சுக்ரீவா! பலம் பொருந்திய இராவணனிடம் நீ தனியாகச் சென்று போரிடலாமா? ஒருவேளை அவனால் உன் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருந்தால் நான் என்ன செய்வேன் எனக் கூறி வருந்தினார். பிறகு சுக்ரீவன், எனக்கு எம்பிராட்டி சீதையை கவர்ந்து சென்ற இராவணனை பார்த்தவுடன் அவனின் தலையை கொய்து வரச் சென்றேன். ஆனால் என்னால் இராவணனின் தலையை கொய்துவிட்டு வராமல் அவனின் மகுடத்தில் உள்ள மணிகளை கொண்டு வந்துள்ளேன் என்றான். இதனால் என்னுடைய செயல் சிறப்படையாதாகது எனக் கூறி வருந்தினான். இதைக் கேட்ட விபீஷணன், சுக்ரீவா, நீ வருந்தாதே! நீ செய்த செயல் மிகவும் அரிதானது. இராவணனின் மணிகளை பறிப்பது என்பது எளிதான செயல் அல்ல. நீ அவனின் உயிருக்கு மேலான மணிகளை அல்லவா கொண்டு வந்துள்ளாய். இதைக் காட்டிலும் வீரச் செயல் வேறு எதுவும் இல்லை என்றான். இராமரும் சுக்ரீவனின் செயலை வியந்து பாராட்டினார்.
🐒 அங்கு இலங்கையின் அரண்மனையில், இராவணன் தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் வருந்திக் கொண்டு இருந்தான். ஒரு குரங்கு தன்னை இவ்வளவு அவமானப்படுத்தியதை நினைத்து மனதில் புழுங்கினான். சுக்ரீவனால் ஏற்பட்ட அவமானம் அவன் மனதில் திரும்ப திரும்ப தோன்றியது. இதனால் தலைக்குனிந்த இராவணன் யாரிடமும் ஒன்றும் பேசாமல் தன் மாளிகைக்குச் சென்று படுத்துக் கொண்டான். அப்போது ஒரு வாயிற்காவலன் வந்து ஒற்றன் சார்த்தூலன் தங்களை காண வந்திருப்பதாகச் சொன்னான். இராவணன் அவனை உள்ளே வரச் சொல்லி அனுப்பினான். ஒற்றன் உள்ளே வந்து இராவணனை வணங்கினான். இராவணன் அவனைப்பார்த்து நீ கொண்டு வந்த செய்தியை கூறு என்றான். மன்னா! வானரப் படைகள் நம் நகரின் எல்லா வாயிலிலும் அணிவகுத்து நிற்கின்றனர்.
🐒 அனுமன் தலைமையில் பதினேழு வெள்ளம் (கோடிக்கணக்கான) சேனைகள், தயார் நிலையில் இலங்கையின் மேற்குப் புற வாயிலில் நிற்கின்றன. இலங்கையின் தெற்கு வாயிலில், வாலியின் மைந்தனான அங்கதன் பதினேழு வெள்ளம் (கோடிக்கணக்கான) வானரப் படையுடன் போருக்குத் தயாராக படைகளை அணிவகுத்து நிற்கிறான். கிழக்கு வாயிலில், நீலன் எனும் படைத்தலைவன் அதே பதினேழு வெள்ளம் (கோடிக்கணக்கான) சேனையிலும், படையோடு தயார் நிலையில் நிற்கிறான். வானரப் படைகளுக்குத் தேவையான உணவுகளை கொண்டு வந்து கொடுப்பதற்கு இரண்டு வெள்ளம் (கோடிக்கணக்கான) சேனையிலும், சேனையை பல திசைகளுக்கும் அனுப்பியுள்ளார்கள். இராமன், தங்கள் தம்பியான விபீஷணனை போரின் தன்மையை அறிய அடிக்கடி இலங்கை நகரின் எல்லா வாயில்களுக்கும் சென்று கண்காணிக்கும்படி நியமித்துள்ளான்.
🐒 இராமனும் அவனின் தம்பி இலட்சுமணனும் இலங்கை நகரின் வடக்கு வாயிலில் போரைத் தொடங்குவதற்கு ஆயத்தமாக நிற்கிறார்கள் என்று அந்த ஒற்றன், இராமனின் போர்முனை ஏற்பாடுகள் பற்றி கூறினான். இதைக் கேட்டு இராவணனின் கண்கள் சிவந்தது. இவர்கள் அனைவரையும் நான் அடியோடு ஒழிக்கிறேன் எனக் கூறினான். பிறகு இராவணன் மந்திர ஆலோசனைக் கூட்டத்திற்கு சென்று அங்கு அனைவரையும் வரும்படி கட்டளையிட்டான். அனைவரும் மந்திர ஆலோசனை கூட்டத்திற்கு வந்தனர். இராவணன் அவர்களிடம், நம் நகரத்தின் நான்கு புறங்களிலும் வானர படைகள் ஆயத்தமாக நிற்கின்றன. இனி நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை பற்றி கூறுங்கள் என்றான். அப்பொழுது நிகும்பன் என்னும் அரக்கன் எழுந்து நின்று, நம் நகரை சூழ்ந்துக் கொண்ட கேவலம் இந்த வானரப் படைகளுக்காக நாம் வருந்தலாமா? இவர்களை காட்டிலும் நம்மிடம் ஆயிரம் ஆயிரம் சேனைகள் நம்மிடம் உள்ளது என்றான்.
தொடரும்...

No comments:

Post a Comment