இராமாயணம் தொடர் 101
இராவணனின் தந்திர வேலை!...
💥 இராவணன், மஹோதரன் என்பவனை அழைத்து, வேறு நல்ல ஒற்றர்களை அழைத்து வரும்படி கட்டளையிட்டான். அந்த ஒற்றர்களிடம் இராமனின் திட்டம், எங்கே, எப்போது, எந்த இடத்தில் இருந்து அவர்கள் தாக்கப் போகின்றார்கள்? மற்றும் இராம, இலட்சுமணனின் சாப்பாட்டு முறைகள், அவர்கள் செய்யும் ஆலோசனைகள் அனைத்தையும் அறிந்து வந்து சொல்லுமாறு பணித்தான். இராவணன் கூறியவாறே ஒற்றர்கள் மாறுவேடத்தில் இராமனின் இருப்பிடத்திற்கு சென்றனர். ஆனால் விபீஷணன் இந்த ஒற்றர்களையும் அடையாளம் கண்டு கொண்டான். உடனே விபீஷணன் இவர்களை, இராமர் முன் கொண்டுச் சென்று நிறுத்தினான். ஆனால் இராமர் இவர்களை விடுவிக்குமாறு கட்டளையிட்டார். ஆனால் வானரர்கள் இவர்களை விடாமல் துன்புறுத்தினர்.
💥 ஒருவழியாக இவர்களிடமிருந்து தப்பித்த ஒற்றர்கள் இராவணனிடம் சென்று நடந்தவற்றைக் கூறினர். மன்னரே! தாங்கள் சீதையை ஒப்படைத்து விடுங்கள், இல்லையெனில் நிச்சயம் யுத்தம் நடைபெறும் என்றார்கள். இதைக் கேட்ட இராவணன், சீதையை அவர்களிடம் அனுப்புவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றான். பிறகு அரண்மனைக்குள் சென்று மந்திர, தந்திரங்களில் தேர்ந்தவன் ஆன வித்யுத்ஜிஹ்வா என்பவனை அழைத்தான். அவனிடம் இராமனின் தலையைப் போல் ஒரு தலையை உருவாக்கிக் கொண்டு வர பணித்தான். அதனுடன் சிறந்த வில்லும், அம்புகளும் கூடவே கொண்டுவர பணித்தான். இராவணனின் கட்டளைப்படி வித்யுத்ஜிஹ்வா அவற்றை உருவாக்கி கொடுத்தான். இராவணன், வித்யுத்ஜிஹ்வா தன் கட்டளைப்படி செய்த இராமனின் தலை, வில் மற்றும் அம்புகளுக்காக பரிசளித்தான்.
💥 பிறகு இராவணன் அவற்றை எடுத்துக் கொண்டு சீதை இருக்கும் அசோகவனத்தை நோக்கிச் சென்றான். தந்திரத்தால் சீதையின் மனதைக் கவரவேண்டும் என நினைத்து இராவணன் சீதையிடம் சென்று, ஏ, சீதா! நான் எவ்வளவோ சொல்லியும், இராமனின் நினைவாகவே இருந்த உனக்கு ஒரு துக்கச் செய்தியை சொல்கிறேன் கேள் என்றான். இராமனை நான் கொன்று விட்டேன். எந்த இராமனை நம்பி, நீ என்னை நிராகரித்தாயோ அந்த இராமன் யுத்தத்தில் கொல்லப் பட்டான். இனியாவது நீ என்னை ஏற்றுக் கொள். இதை தவிர உனக்கு வேறு வழி எதுவும் இல்லை என்றான். பிறகு இராவணன் இந்த யுத்தத்தை நேரில் பார்த்த வித்யுத்ஜிஹ்வாவை இங்கே வரச் சொல். போரில் கொல்லப்பட்ட இராமனின் குருதி வாய்ந்த தலையையும் கொண்டுவரச் சொல் என பணித்தான். வித்யுத்ஜிஹ்வா, இராவணன் சொன்னதை போல் கையில் வில், அம்புகளுடனும், அவனால் செய்யப்பட்ட போலி இராமர் தலையுடனும் அங்கே வந்து சேர்ந்தான்.
💥 இராவணன், சீதையிடம், சீதா! வில்லைப் பார்த்தாயா? இது இராமனின் வில். மற்றும் இந்த தலையை பார்த்து தெரிந்துக் கொள் இராமன் இறந்து விட்டான். இனி நீ என் ஆசைக்கு இணங்குவதே நன்று எனக் கூறி விட்டு அங்கிருந்து சென்றான். சீதை, இராவணன் சொன்ன வார்த்தைகளை நம்பி, துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதாள். என் கணவர் இல்லாத உலகத்தில் நானும் இருக்க மாட்டேன். என்னையும் கொன்று விடுங்கள் என கதறி அழுதாள். அப்பொழுது விபீஷணனின் மனைவி அங்கு, சீதா இதெல்லாம் இராவணனின் மாய செயல். இதை நீ நம்பாதே. நான் இராவணனின் மந்திர ஆலோசனை கூட்டத்திற்கு சென்று அங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்துவிட்டு வருகிறேன். அதுவரை நீ தைரியமாக இரு எனக் கூறிவிட்டுச் சென்றாள்.
தொடரும்...
No comments:
Post a Comment