Monday, October 23, 2023

RAMAYANAM PART 96

 இராமாயணம் தொடர் 96

விபீஷணன் இராவணனைப் பற்றி கூறுதல்!

🌀 விபீஷணன், இராவணனின் படைகளின் எண்ணிக்கை ஆயிரம். இராவணனுடன் இருக்கும் அரக்கர்கள் பலம் பொருந்தியவர்கள். அங்கிருக்கும் மிகவும் பலம் பொருந்திய வீரர்களை பற்றி கூறுகிறேன். முதலில் இராவணன் மற்றும் அவனின் சகோதரர்களை பற்றி கூறுகிறேன் என்றான்.

🌀 இராவணன், பிரம்மனும், சிவனும் இவனுக்கு அரிய பெரிய வரங்களை அளித்திருக்கின்றனர். குபேரனை தோற்கடித்து அவனுடைய நகரத்தைக் கைப்பற்றியவன். வருணனை வென்றவன். இவன் மலைகள் போல வலிமையை உடையவன். கும்பகர்ணன் இராவணனின் தம்பி. இவன் தேவர்களை ஓட ஓட விரட்டிய பெரும் வீரன் ஆவான். இவன் இந்திரனின் ஐராவதத்தின் கொம்புகளையே தன் ஆயுதமாகக் கொண்டு தேவர்களை அழித்தவன். இவன் தன் வாழ்நாளில் பெரும்பகுதி தூக்கத்தில் ஆழ்ந்திருப்பவன். மற்ற நாட்களில் இவன் உண்ணும் உணவும் மலையளவு இருக்கும். இந்திரஜித், இராவணனின் மூத்த மகன். இவன் சூரிய சந்திரரை சிறையில் அடைத்தவன். இந்திரனை தோற்கடித்து போரில் வென்றவன். அதிகாயன் இராவணனின் இரண்டாவது மகன். இவன் பிரம்மன் கொடுத்த வில்லை உடையவன். இவன் இந்திரஜித்துக்குத் தம்பி. இவர்கள் இராவணனுடைய பெருமை மிக்கப் புதல்வர்கள்.

🌀 கும்பன் ஆயிரம் யானைகளுக்கும், குதிரைகளுக்கும் இணையான வலிமையும், வீரமும் உடையவன். சூரியனின் வெப்பத்தைக் காட்டிலும் மிகவும் கொடிய வீரன் ஆவான். அடுத்தது அகம்பன் இவன் தவமிருந்து போர் புரிபவன். இவன் நரசிம்ம மூர்த்தியைப் போன்றவன். நிகும்பன் மலைகளைக் காட்டிலும் வலிமை உடையவன். மகோதரன் என்பவன் வஞ்சனையும் மற்றும் மாயையும் செய்து போர் புரிபவன். பகைஞன் என்பவன் மலைவாழ் வீரன் ஆவான். இவன் பெரும்படைக்குத் தலைவன். இவன் தேவர்களை பலமுறை போரில் தோற்கடித்தவன். சூரியன் பகைஞன் என்னும் மற்றொருவன் அனைவரையும் வெல்லக்கூடிய வலிமையுடையவன். பெரும்பக்கன் என்பவனை முனிவர்களும் நேராக பார்க்க பயப்படுவார்கள். வச்சிரதந்தன் என்பவன் எட்டு கோடி சேனைக்கு அதிபதி ஆவான். பலரும் இவனிடம் போரிட அஞ்சுவார்கள்.

🌀 பிசாசன் என்பவன் பகைவரைக் கண்டு அஞ்சாதவன். இவன் பத்து கோடி சேனைகளுக்கு தலைவன் ஆவான். துன்முகன் என்பவன் பதினான்கு கோடி காலாட்படைக்குத் தளபதி. பூமியையும் தகர்த்து எறியும் ஆற்றல் உடையவன். விரூபாட்கன் என்பவன் வாட்போரில் வல்லவன். தூமாட்சன் என்பவன் மாண்ட வீரர்களின் உடலைத் திண்பவன். தேவர்களையும் தோற்கடிக்கும் வல்லமை உடையவன். போர்மத்தன், வயமத்தன் ஆகிய இவ்விருவரும் மிகவும் வலிமை படைத்தவர்கள். கடல் போன்று இருக்கும் படைகளுக்கு இவர்கள் அதிபர்கள். பிரகஸ்தன் என்பவன் இராவணனுக்கு போர்த்தொழிலில் துணை புரிபவன். இந்த பிரகஸ்தன் இராவணனின் படைத்தளபதி ஆவான். இந்திரனின் ஐராவதம் என்னும் யானை உள்ளிட்ட அனைத்துப் படைகளையும் அஞ்சி ஓடச் செய்யும் வல்லமை உடையவன். இவ்வளவு பெரும்படை உடைய இராவணனை தங்களை தவிர வேறு எவராலும் அழிக்க முடியாது என்றான்.

🌀 பிறகு விபீஷணன், இராமா! அனுமன் இலங்கைக்கு வந்த போது ஆற்றிய வீர தீரச் செயல்களை பற்றி கூறுகிறேன் என்றான். அசோகவனத்தில் ஏராளமான அரக்கர்கள் அனுமன் கையால் மாண்டனர். அனுமன் இட்ட தீயினால் இலங்கை மாநகரமே எரிந்து சாம்பலானது. கிங்கரர் எனும் அரக்க போர் வீரர்களை அனுமன் தனித்து நின்று கொன்று குவித்தான். ஜம்புமாலி எனும் வலிமை வாய்ந்த அரக்கனும் அவனுடைய படைகளையும் மாபெரும் வீரர்களான பஞ்ச சேனாதிபதிகளைக் கொன்றான். இராவணனின் இளைய மகனான அக்ஷயகுமாரனை கொன்றான். இராவணனை தடுமாற வைத்தது அக்ஷயகுமாரனின் மரணம் தான். அனுமனால் தாக்கப்பட்டு இலங்கையில் இறந்த அரக்கர்கள் எண்ணில் அடங்காதவை. இப்பொழுது எரிந்து போன இலங்கை நகரை இராவணன் புதுப்பித்து விட்டான் என்றான். 

தொடரும்...

No comments:

Post a Comment