Tuesday, December 28, 2021

ஆன்மீக தகவல் - பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்கள்

 பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்பவை கிருஷ்ணருக்கான தமிழநாட்டில் அமைந்துள்ள ஐந்து தலங்களாக கூறப்படுகிறது.  இதனை பஞ்ச கிருஷ்ண சேத்தரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

1. லோகநாதப் பெருமாள் கோயில்,திருக்கண்ணங்குடி                நாகப்பட்டினம் மாவட்டம்

  வசிஷ்ட முனிவர் வெண்ணெயால் கிருஷ்ண விக்கிரகம் செய்து வழிபட்டு வந்தார். அவரது ஆழ்ந்த பக்தியின் காரணமாக அந்த விக்கிரகம் உருகாமல் இருந்து வந்தது. ஒரு நாள் கிருஷ்ணர் சிறுவனாக வசிஷ்டரின் வீட்டுக்குள் நுழைந்து வெண்ணெய் விக்கிரகத்தைச் சாப்பிட்டு விட்டு வெளியே ஓடினார். ஓடிய சிறுவனைத் துரத்திச் சென்றார் வசிஷ்டர். சிறுவன் ஓடிய வழியில் ஒரு மகிழ மரத்தடியில் சில முனிவர்கள் அமர்ந்து கிருஷ்ணரைத் தியானம் செய்துகொண்டிருந்தனர். ஓடிவந்த சிறுவன் கிருஷ்ணரே என அவர்கள் புரிந்து கொண்டனர். சிறுவனாய் வந்த கிருஷ்ணர் அவர்களின் பக்தியில் மகிழ்ந்து, அவர்களுக்கு ஒரு வரம் தருவதாகச் சொல்ல, அவர்கள் கிருஷ்ணரை அவ்விடத்திலேயே தங்கிவிடுமாறு வேண்டினர். அவரும் அங்கேயே தங்கிவிட்டார். துரத்தி வந்த வசிஷ்டரும் கிருஷ்ணர் நடத்திய லீலையை அறிந்து கொண்டார். இந்நிகழ்வு நடந்ததாகக் கூறப்படும் இடம்தான் திருக்கண்ணன்குடி. அவ்விடத்தில் லோகநாதப் பெருமாள் கோவில் கோபுரத்துடன் எழுப்பப்பட்டது.

2. நீலமேகப்பெருமாள் கோயில் ,திருக்கண்ணபுரம் ,                   நாகப்பட்டினம் மாவட்டம் 

இக்கோவில் அர்ச்சகர் ஒருநாள், கோவிலுக்கு வந்த அரசனுக்கு சுவாமிக்கு சூடிய மாலையைத் தர அதில் ஒரு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால் கோபங்கொண்ட அரசனிடம், அர்ச்சகர் அது பெருமாளின் திருமுடி என்று சொல்லிவிட, அரசன் தான் நாளை வந்து பார்க்கும் போது பெருமாளுக்கு முடி இல்லையெனில் அர்ச்சகர் தண்டனைக்குள்ளாவார் என்று கூறிவிட்டுச் சென்றான். அர்ச்சகர் பெருமாளிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார். அவரிடம் இரக்கம்கொண்ட பெருமாள் அவரைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார். அடுத்த நாள் அரசன் வந்து பார்த்தபோது உண்மையிலேயே பெருமாள் தலையில் திருமுடி இருந்தது. இந்நிகழ்வின் காரணமாகவே உற்சவர் சௌரிராஜப்பெருமாள் எனப் பெயர் கொண்டுள்ளார் என்பது தொன்நம்பிக்கை. உற்சவர் உலாவில் அமாவாசையன்று மட்டும் திருமுடி தரிசனம் காணலாம்.

3.பக்தவத்சலப்பெருமாள் கோயில் ,திருக்கண்ணமங்கை,  திருவாரூர் மாவட்டம்

மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப் பெருமாளைக் கைப்பிடித்த தலம் என்பதால் இவ்விடம் லட்சுமி வனம் என்றும் அழைக்கப்படுகிறது. சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கமைந்த புஷ்கரணியில் நீராடி சாபவிமோசனம் பெற்றான் என்பது நம்பிக்கை.திருமணக் கோலம் தினசரி காண முனிவர்கள் தேனீ வடிவில் உள்ளனர்.

4. கஜேந்திர வரதப் பெருமாள்        கோயில்,கபிஸ்தலம்,தஞ்சாவூர் மாவட்டம்

கபி என்றால் குரங்கு என்று பொருள். ஸ்ரீஆஞ்சநேயர் கடும் தவம் செய்து பெருமாளின் தரிசனம்பெற்றார் எனவே கபிஸ்தலம் என அழைக்க பட்டது. இந்திரஜ்யும்னன் என்ற அரசன் சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான். ஒரு சமயம் அவன் விஷ்ணு வழிபாட்டில் தன்னை மறந்து ஆழ்ந்திருந்த போது அவனைக் காண துர்வாச முனிவர் வந்தார். அரசன் அவரது வருகையை உணரவே இல்லை. தன்னை அரசன் அவமதித்து விட்டதாகக் கோபம் கொண்ட முனிவர் ’முனிவர்களை மதிக்கத் தெரியாத நீ யானையாகப் பிறப்பாய்’ எனச் சாபம் கொடுத்து விட்டார். பின் தன்னை மன்னிக்கும்படி வேண்டிய அரசனிடம், ‘திருமால் மேல் பக்தி கொண்ட யானைகளுக்கு அரசனாகப் பிறந்து, திருமால் மூலமாக சாப விமோசனம் அடைவாய்’ என்று கூறினார்.

ஒரு குளக்கரையில் இருந்த கூஹூ என்ற அரக்கன், குளத்தில் குளிக்க வருவோரையெல்லாம் காலைப் பிடித்து நீருக்குள் இழுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தான். ஒரு நாள் அங்கு வந்த அகத்தியர் காலையும் நீருக்குள் இழுத்து, அவர் அவனை முதலையாக்கி சாபம் கொடுத்தார். மன்னிப்பு வேண்டி நின்ற அரக்கனுக்கு திருமால் மூலம் சாப விமோசனம் கிடைக்கும் எனக் கூறினார்.

வழக்கம் போல் ஒருநாள் யானைகளின் அரசனான கஜேந்திரன், விஷ்ணுவை வழிபட தாமரைப்பூ எடுப்பதற்கு அக்குளத்திற்குள் சென்றபோது, முதலையாக அங்கிருந்த அரக்கன் கஜேந்திரனின் ஒரு காலைக் கவ்விக்கொண்டான். காலை விடுவித்துக் கொள்ளமுடியாத கஜேந்திரன் திருமாலை ‘ஆதிமூலமே காப்பாற்று’ என்று அபயக்குரல் கொடுத்தது. திருமாலும் காட்சி தந்து முதலையைக் சக்ராயுதத்தால் கொன்று யானையைக் காப்பாற்றினார். முதலை, யானை இரண்டுமே சாபவிமோசனம் அடைந்தனர். இவ்வாறு யானைக்குத் திருமால் அருளிய தலமே கபிஸ்தலமாகும்.

ஆஞ்சனேயருக்கும் அருள் அளித்த தலம் இந்த கபிஸ்தலம் (கபி-தலம்). இத்தலம் கவித்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

5. உலகளந்த பெருமாள் கோவில்,திருக்கோவிலூர்,கள்ளக்குறிச்சி மாவட்டம்

மகாபலி என்னும் அசுர அரசன் தான தர்மத்தில் சிறந்தவன் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான். அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன (குள்ள) அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார். குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக்கொள்கிறான்.

அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். மகாபலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.

மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது. அவ்வரலாற்றின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோயில் கருவறையில் மூலவராக, வடிக்கப்பெற்றிருக்கிறது.



No comments:

Post a Comment