திருப்பூர் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில், முப்பெரும் விழா இன்று (20/07/2024) சிறப்புடன் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக, கல்வியறிவு புகட்டிய குருமார்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில், அவர்களை நினைவுகூர்ந்து, போற்றி வணங்கும் விழாவான குரு பூர்ணிமா விழாவுடன், கடந்த கல்வியாண்டுவரை அரசுப் பணியில் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, அவர்கள் சார்பாக மரம் நடுதல் என மூன்று நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக இன்று (20.07.2024, சனிக்கிழமை) கொண்டாடப்பட்டது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள சிவாஜி மந்திரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கடந்த கல்வியாண்டுடன் ஓய்வுபெற்ற தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவரும், நஞ்சப்பா பள்ளித் தலைமையாசிரியருமான பழனிச்சாமி, முதுகலை ஆசிரியர் மதிவாணன், செல்லப்பம்பாளையம் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பழனிசாமி, கவிதாலட்சுமி நகர் துவக்கப்பள்ளித் தலைமையாசிரியர் கற்பகம், போத்தம்பாளையம், உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பத்மாவதி, அவிநாசி பதிவு எழுத்தர் ரங்கநாதன் ஆகியோர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. பணி நிறைவு பெற்ற ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் பொன்னாடை, சந்தன மாலை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும், குரு பூர்ணிமா விழாவை சிறப்பிக்கும் வகையில் குரு வணக்கம் நிகழ்வும், மரம் நடு விழாவையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது.
தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கந்தசாமி பேசுகையில்...
"தொன்று தொட்டு பல்லாண்டு காலமாக நமது நாட்டில் குரு பூர்ணிமா கொண்டாடப்பட்டு வருகிறது. குருவே நல்லவை எவை கெட்டவை எவை என்பதன் வேறுபாட்டை பிரித்துக் கற்பிப்பவர். அவர்கள் கற்பித்தலோடு மட்டுமின்றி சமுதாய உயர்வுக்காக உழைத்தும் உள்ளனர். பல பேரரசர்களின் ஆட்சிக்கு வழிகாட்டியாக இருந்துள்ளனர். இவ்வாறு பல்லாயிரக்கணக்கான குருமார்களைப் போற்றும் வகையில் வேத வியாசரின் அவதார தினமான ஆடி மாத பௌர்ணமி தினத்தை ஆதி குருவாகப் போற்றி வழிபாடு செய்வதே குரு வணக்கம் நிகழ்ச்சியின் நோக்கம் ஆகும். சோதனையான நேரங்களில் சமுதாயத்தை வழிநடத்த சரியான நபரை அடையாளம் காட்டுபவர் அவர். சுவாமி வித்யாரண்யர், சமர்த்த ராமதாசர், சாணக்கியர் ஆகியோரை இதற்கு சான்றாகக் கூறலாம். நாமும் இதுபோல குருமார்களின் வாழ்க்கையை முன் மாதிரியாகக்கொண்டு *ஆசிரியர் என்ற நிலையில் இருந்து குரு என்ற நிலைக்குத் தங்களை உயர்த்திக் கொள்ளும் வகையில்* அனைவரும் பணியாற்ற வேண்டும்" எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் முருகன், சாருமதி தேவி, ஆறுமுகம், தண்டபாணி, திருப்பூர் மாவட்டத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் பிரபு, கோவை மாவட்டத் தலைவர் சனல்ராம், திருச்சி மாவட்டத் தலைவர் ஆறுமுகம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கல்வி மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment