Saturday, April 20, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 3 !!!

 

காரமடை அருள்மிகு அரங்கநாதசாமி கோயில்

காரமடை அரங்கநாதசாமி கோயில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.இக்கோவில் ஏறக்குறைய 1000 வருடங்கள் பழமை வாய்ந்தது. கொங்கு நாட்டு பகுதிகளில் இருக்கும் வைணவ தலங்களில் புகழ்பெற்றது.
இக்கோயில் 15ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது என்று அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இக்கோயிலின் தலவிருச்சமாக காரை மரம் உள்ளது.காரை மரங்கள், நீர் மடைகள் நிறைந்த பகுதியாதலால் இந்த ஊர் கரைமடை என பெயர்பெற்றது.
கருடாழ்வாரின் விருப்பத்துக்கு உட்பட்டு இத்தலத்தில் கல்யாணக் கோலத்தில் அவருக்கு காட்சியளித்தார் மகாவிஷ்ணு. பின்னர் இந்த இடத்திலேயே சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். நாளடைவில் இப்பகுதி காரை மரங்கள் கொண்ட காடாக மாறியது. இந்தக் காட்டுப் பகுதியில் அருகில் உள்ள சிற்றூர்களைசே சேர்ந்த சில இடையர்கள் மாடுகளை மேய்த்துவந்தனர். அந்த மாடுகளில் ஒரு மாடு திடீரென்று பால் தருவதை நிறுத்திவிட்டது. இந்த மாட்டின் பாலை யாரோ திருடுவதாக ஐயமுற்ற இடையர் அந்த மாட்டை தீவிரமாக கண்காணித்தார்.

காட்டில் மேய்ந்து கொண்டிருந்த அந்தப் பசு ஒரு காரை மரத்தின் அடியில் நின்று அங்கிருந்த ஒரு புதர்மீது பாலை சொரிந்தது. இதனால் கோபமுற்ற இடையர் புதரை கோடாரியால் வெட்டினார். அப்போது அங்கிருந்து குருதி வெளிப்பட்டது. இதைப் பார்த்த இடையரின் கண்பார்வையும் இல்லாமல் போனது.

தகவல் அறிந்து ஊர்மக்கள் திரண்டுவந்து பார்த்தபோது, குருதி பீரிட்ட இடத்தில் பெருமாள் சுயம்புவாக இருக்கிறார் என அசரீரி ஒலித்தது. பின்னர் இடையரின் பார்வை திரும்ப வந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு அப்பகுதி மக்கள் இந்த இடத்தில் கோயில் எழுப்பினர் .
இக்கோயிலில் மூலவராக உள்ள அரங்கநாதர் சதுர வடிவில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். அரங்கநாத சுவாமி சன்னிதானத்துக்கு வலப்புறம் அரங்கநாயகித் தாயார் சன்னிதியும் இடப்புறம் ஆண்டாள் சன்னிதியும் முன்புறம் கருடக் கம்பமும் உள்ளன. அரங்கநாயகித் தாயார் சன்னிதிக்கு வலப்புறம் பரவாசுதேவர் சன்னிதியும் 12 ஆழ்வார்களின் திருவுருவங்களும் சன்னிதிகள் அமைந்துள்ளன. ஆண்டாள் சன்னிதிக்கு இடப்புறம் வீரஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

தொன்மக் கதையில் கூறப்படடதன்படி கோடாரில் வெட்டப்பட்ட சுயம்பு மூர்த்தியின் மேல் வெட்டுத் தழும்பு தற்போதும் உள்ளது என கூறுகின்றனர்.இக்கோயிலில் அரங்கநாதர், அரங்கநாயகி சன்னதிகளும், ஆஞ்சநேயர், ஆண்டாள், அரங்கநாயகிதாயார். ராமானுஜர், ஆழ்வார்கள் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் கோசாலை, கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன.
விஜயநகர பேரரசின் மதுரை நாயக்க மன்னர் திருமலை நாயக்கர் கொடிய நோய் ஒன்றில் அவதிப்பட்டதாகவும் இக்கோவிலுக்கு வந்து வேண்டியதால் அந்நோய் தீர்ந்ததாகவும் தலவரலாறு கூறுகிறது. அந்நோய் தீர்ந்த காரணத்தால் நாயக்கர் சமுதாய மக்கள் வழிபட்டு வந்த சிறிய கோவிலை கோபுரங்கள் அமைத்து தற்போது உள்ள கோவிலை அமைத்தார். இக்கோவிலில் உள்ள காரை என்னும் ஒரு வகை மரம் தலவிருட்சமாக உள்ளது. இம்மரத்தில் கயிறு கட்டினால் குழந்தை பாக்கியம், திருமண யோகம் வரும் என்று நம்புகின்றனர் .





No comments:

Post a Comment