இராமாயணம் தொடர்....171
இராமரின் பட்டாபிஷேகம்...!
அனைவரும் அயோத்தி நகரை அடைந்தனர். அயோத்தி மக்கள் அனைவரும் தாயை பிரிந்த குழந்தை போல் இராமரை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். அனைவரும் அரண்மனை அடைந்தனர். இராமர் பரதனிடம், தம்பி! அனுமன், சுக்ரீவன், விபீஷணனுக்கு தேவையான வசதிகளைக் செய்துக் கொடுத்து அரண்மனையை சுற்றி காண்பிப்பாயாக என்றார். பிறகு பரதன் அவர்களுக்கு அரண்மனையை சுற்றி காண்பித்தான். அப்போது சுக்ரீவன் பரதனிடம், பரதரே! முடிசூட்டும் விழாவிற்கு ஏன் தாமதமாகிறது எனக் கேட்டான். பரதன், ஐயனே! பட்டாபிஷேகத்திற்காக நாடு முழுவதும் உள்ள புண்ணிய தீர்த்தங்களை கொண்டு வர தான் தாமதத்திற்கு காரணம் என்றான். உடனே சுக்ரீவன், அனுமனை நோக்கினான். சுக்ரீவனின் நோக்கத்தை அறிந்த அனுமன் புண்ணிய தீர்த்தங்களை கொண்டு வர புறப்பட்டான்.
அதன் பிறகு பரதன், வசிஷ்ட முனிவரிடம் சென்று, குருவே! அண்ணல் இராமருக்கு விரைவில் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும். ஆதலால் பட்டாபிஷேகம் செய்ய உகந்த நாளை தாங்கள் கணிந்து கூறுங்கள் என்றான். வசிஷ்ட முனிவர், நல்ல நாட்களை கணித்து பார்த்து, பரதரே! நாளையே நாம் இராமருக்கான முடிசூட்டும் விழாவை வைத்துக் கொள்வோம் என்றார். இதைக் கேட்டு பரதர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். இச்செய்தி தாய்மார்களுக்கும், அனுமன், சுக்ரீவன், விபீஷணனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அனைவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இச்செய்தி நாட்டு மக்கள் அனைவருக்கும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மக்கள் இச்செய்தியைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இராமருக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடக்க தொடங்கியது.
ஸ்ரீராமருக்கு நாளை முடிசூட்டும் விழா என்ற செய்தியை ஓலை மூலம் மன்னர்களுக்கும், சிற்றரசர்களுக்கும் அனுப்பப்பட்டது. குகனுக்கும் இராமரின் முடிசூட்டும் விழாவிற்கு வரும்படி அழைப்பு விடப்பட்டிருந்தது. அயோத்தி மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை அலங்கரித்தனர். மறுநாள் பட்டாபிஷேகத்திற்கான மண்டபத்தை பொன்னாலும், மலர்களாலும் அலங்கரித்தனர். அப்பொழுது அனுமன், பல நாடுகளிலிருந்து புண்ணிய தீர்த்தங்களை கொண்டு வந்தான்.
இராமரின் பட்டாபிஷேகத்தை காண பல நாட்டிலிருந்து மன்னர்களும், சிற்றரசர்களும் குவிந்த வண்ணம் இருந்தனர். குகனும் இராமரின் பட்டாபிஷேகத்தை காண வந்து சேர்ந்தான். பட்டாபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் எல்லாம் அமைச்சர் சுமந்திரர் தலைமையில் கொண்டு வரப்பட்டது. வசிஷ்டர் முதலான முனிவர்கள் வேள்விகளை ஆரம்பித்தனர். இராமரும் சீதையும் அரியணையில் அமர்திருக்க, பரதன் வெண்கொற்ற குடையை பிடித்தான். இலட்சுமணனும், சத்ருக்கனும் இருப்புறங்களில் நின்றுக் கொண்டு வெண்சாமரை வீசினர்.
தொடரும்...!
No comments:
Post a Comment