Thursday, December 21, 2023

RAMAYANAM PART 141

 இராமாயணம் தொடர்...141

சீதையின் துயரம்...!

✨ இராமரின் துயரத்தைக் கண்டு தேவர்கள் முதலானோர் அழுதனர். இதை அறிந்த அரக்க தூதர்கள் இராவணனிடம் ஓடிச் சென்று வானரப் படையோடு இலட்சுமணன் மாண்டான். இலட்சுமணனின் பிரிவை தாங்க முடியாமல் இராமன் மாண்டான். இதனால் தங்களின் பகை தீர்ந்தது எனக் கூறினார்கள். பிரம்மாஸ்திரத்தால் இராம இலட்சுமணன் உட்பட வானர வீரர்கள் மாண்டதை அறிந்து இராவணன் மகிழ்ச்சி அடைந்தான். இந்த மகிழ்ச்சியை விழாவாக கொண்டாட நினைத்தான். உடனே மருத்தன் என்னும் அரக்கனை அழைத்து, நீ உடனே போர்களத்திற்குச் சென்று, போரில் மாண்ட அரக்கர்களை அனைவரையும் ஒன்று விடாமல் கடலில் எடுத்து வீசி விடு. இந்த வேலையை உன்னைத் தவிர வேறு யாரும் செய்யக்கூடாது. இது உன்னை தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது.

✨ அப்படி யாருக்கேனும் தெரிந்தால் உன் தலையை சீவி விடுவேன் எனக் கட்டளையிட்டு அனுப்பினான். (இதற்கான காரணம் என்னவென்றால் அரக்கர்களின் பிணங்கள் போர் களத்தில் இருந்தால், பார்ப்பவர்கள் இராவணனின் அரக்கர்கள் தான் போரில் அதிகம் மாண்டவர்கள் என்பது தெரிய வரும் அதனால் தான்.) இராவணனின் கட்டளைப்படி மருத்தன், போர்களத்திற்குச் சென்று அரக்கர்களின் பிணங்களை கடலில் போட்டுவிட்டான். இப்பொழுது போர்களத்தில் வானர வீரர்கள் மட்டும் வீழ்ந்துக் கிடந்தனர். இராவணன், சீதையை போர்களத்திற்குச் அழைத்துச் சென்று, போரில் அரக்கர்கள் யாரும் மாளவில்லை என்பதை தெரியப்படுத்த நினைத்தான். உடனே இராவணன், சீதையை அழைத்துச் சென்று இராம இலட்சுமணனுக்கு நேர்ந்த கதியை காட்டுங்கள் என கட்டளையிட்டான்.

✨ இதனால் சீதை, இராம இலட்சுமணர் மாண்டு விட்டனர் என நினைத்து தன்னை ஏற்றுக் கொள்வாள் என நினைத்தான். அரக்கியர்கள் சீதையை ஒரு புஷ்பரக விமானத்தில் ஏற்றி ராம இலட்சுமணனின் நிலையை காட்டினர். சீதை, இராம இலட்சுமணரின் நிலையைக் கண்டு கதறி அழுதாள். என் பெருமானே! இராவணாதி அரக்கர்களை கொன்று தண்டகவனத்தில் வாழும் முனிவர்களுக்கு அனுகூலம் புரிவதாக கூறினீர்களே! தங்களின் இந்த நிலைமைக்கு நான் தானே காரணம். நான் அந்த மாய மான் மேல் ஆசைப்படாமல் இருந்திருந்தால் தங்களுக்கு இந்த நிலைமை நேர்ந்திருக்காது. நான் தங்களை மானின் பின் அனுப்பியது என் தவறு. இனி நான் என்ன செய்வேன். எனக்கு துணையாக இனி யார் இருப்பார்கள். எம்பெருமானே தயவுகூர்ந்து எழுங்கள் என கதறி அழுதாள்.

✨ சீதை இலட்சுமணனை பார்த்து, இளையவனே! வலிமையானவனே! என் அண்ணன் இராமனுக்கு துணையாக இருப்பேன் எனக் கூறினாயே! நான் அன்று உன்னை இகழ்ந்து பேசியதற்கு பதிலாக தான் இன்று இங்கு சிறைப்பட்டு கொண்டிருக்கிறேன். நீ மாய மான் எனக் கூறியும் நான் அதைக் கேட்காமல் உன் அண்ணனை சென்று தேடி வருமாறு கூறியது என் தவறு என்பதை உணர்ந்துவிட்டேன். நீ அன்று என்னுடன் இருந்திருந்தால் தங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது. இரவும் பகலும் பாராமல் கண்விழித்து காவல் புரிவாயே. நான் செய்த தவறால் தங்களுக்கு இந்நிலைமை நேர்ந்துவிட்டதே. நான் மதியை இழந்ததால் தான் இராவணனின் சிறையில் அகப்பட்டு விட்டேன். இனி என்னை காக்க யார் இருக்கிறார்கள் என கூறிக் கதறி அழுதாள்.

No comments:

Post a Comment