இராமாயணம் தொடர்....137
வானரப் படைகளும் அரக்கப் படைகளும்!...
❆ இராவணன் வானரங்களின் ஆரவாரத்தைக் கேட்டு இந்திரஜித்தின் மாளிகைக்கு விரைந்துச் சென்றான். அங்கு இந்திரஜித் போரினால் ஏற்பட்ட களைப்பால் மிகவும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். இராவணன், இந்திரஜித்தை எழுப்பினான். இந்திரஜித், தந்தையே! தாங்கள் ஏன் இவ்வளவு அவசரமாக என்னை எழுப்பினீர்கள் என்றான். இராவணன், மகனே! நீ நாகபாசத்தால் கொன்று விட்டேன் எனக் கூறியவர்கள், ஆரவாரம் செய்து கொண்டிருக்கும் ஓசை உனக்கு கேட்கவில்லையா? எனக் கேட்டான். இதைக் கேட்ட இந்திரஜித், இது எப்படி சாத்தியமாகும்? நாகபாசத்தால் கட்டுண்டவர்கள் எவ்வாறு மீள முடியும்? என்றான். அப்பொழுது தூதுவன் ஒருவன் அங்கு வந்தான். அரசே! நாகபாசத்தால் கட்டுண்டவர்களை பார்த்த இராமர், கோபங்கொண்டு நாகபாசத்தை ஏவியவனை கொல்வேன் என முனைந்தான்.
❆ அப்பொழுது கருட பகவான், வானத்தில் இருந்து பறந்து வந்து தன் சிறகுகளை அகல விரிந்து நாகபாசத்தால் கட்டுண்டவர்களையும், போர்களத்தில் மாண்ட வானரங்களையும் காப்பாற்றி விட்டான் எனக் கூறினான். இதைக் கேட்ட இராவணன், என்னுடன் தோல்வி அடைந்த அந்த கருடனுக்கு இவ்வளவு ஆற்றலா? எனக் கோபம் கொண்டான். பிறகு இந்திரஜித்திடம், மகனே! நீ உடனே போர்களத்திற்குச் சென்று பிரம்மாஸ்திரத்தை ஏவி அவர்களை கொன்று விட்டு திரும்புவாயாக என்றான். இந்திரஜித், தந்தையே! நான் இன்று ஓய்வு எடுத்துக் கொண்டு நாளை போரில் நிச்சயம் அவர்களை வீழ்த்தி, உங்களுக்கு மன ஆறுதலை கொடுப்பேன் என்றான். இராவணன், இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து வந்தான். இராவணன் தன் மாளிகைக்கு வந்தடைந்தான். அப்பொழுது படைத்தலைவர்கள் அங்கு வந்தனர்.
❆ அவர்கள், அரச பெருமானே! தாங்கள் எங்களை போருக்கு அனுப்புமாறு வேண்டுகிறோம். அப்பொழுது அவர்களில் ஒருவன், அரசே! மாபக்கனும், புகைக்கண்ணனும் போரில் அவர்களை பார்த்து ஓடி வந்தவர்கள் எனக் கூறினான். இதைக் கேட்டு இராவணன் அவர்கள் மேல் பெருங்கோபம் கொண்டான். போரில் எதிரிகளை கண்டு பயந்து ஓடி வந்த நீங்கள் எல்லாம் வீரர்களா? இவர்களின் மூக்கை அறுத்தெறியுங்கள் என்றான். அப்பொழுது மாலி என்னும் வீரன் இராவணனை வணங்கி, அரசே! ஒருவனுக்கு வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வரும். வெற்றியும், தோல்வியும் யாருக்கும் நிரந்தரம் அல்ல. உங்கள் தம்பிமார்களும் போரில் தோற்றவர்கள் தான். அதனால் தோற்றவர்களின் மூக்கை அறுப்பது நியாயமாகாது என்றான்.
❆ இதைக்கேட்டு இராவணன் கோபம் தணிந்து அவர்களை மன்னித்து, போருக்கு அவர்களுடன் பத்து கோடி வெள்ள சேனைகளை உடன் அனுப்பி வைத்தான். பிறகு படைத்தலைவர்களும், அரக்கப்படைகளும் கையில் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு போருக்கு புறப்பட்டனர். போருக்கு வரும் படைத்தலைவர்களின் ஆற்றலைப் பற்றி விபீஷணன், இராமரிடன் எடுத்துக் கூறினான். அரக்கப்படைகளும், வானரப்படைகளும் பெரும் ஆரவாரத்தோடு போர் புரியத் தொடங்கினர். இரு படைகளின் போர் மிகவும் கடுமையாக நடந்தது. புகைக்கண்ணன் அனுமனுடன் போர் புரிந்து மாண்டான். மாபக்கன், அங்கதனுடன் போர் புரிந்து மாண்டான். மாபெரும் வீரனான் மாலி, வானர படைத்தலைவன் நீலனுடன் போர் புரிந்து மாண்டான்.
தொடரும்...
No comments:
Post a Comment