Sunday, October 15, 2023

RAMAYANAM PART 90

 இராமாயணம் தொடர் 90

விபீஷணன் கூறும் இரண்யனின் கதை!

 விபீஷணன் கூறியதை கேட்ட இராவணன் மிகவும் கோபங்கொண்டான். விபீஷணிடம், நீ அந்த இராமனை திருமாலின் அவதாரம் எனக் கூறுகிறாய். நான் இந்திரனை சிறையில் அடைத்தவன். தேவர்களை ஓட ஓட விரட்டினேன் என்பதை மறந்துவிட்டு பேசுகிறாய். உனக்கு என்னுடன் போருக்கு வருவது பயமாக இருக்கிறது என்றால் நீ இங்கேயே இரு என்று சொல்லி விபீஷணனை பார்த்து ஏளனமாக சிரித்தான். இதை பார்த்த விபீஷணன், அண்ணா! இந்த கோபத்தை குறைத்துக் கொள். திருமாலுடன் போரிட்டு மாண்டவர் பலர் உண்டு. அவற்றுள் ஒருவன் தான் இரண்யன் என்பவன். இரண்யன் உன்னைக் காட்டிலும் பல மடங்கு வலிமை உடையவன். காசிப முனிவருக்கும், திதி என்பவளுக்கும் பிறந்தவன் தான் இரண்யன். அவனின் தம்பி இரண்யாட்சன். இவன் மக்களுக்கு பெரும் துன்பங்களை செய்ததால் திருமால் வராக அவதாரம் எடுத்து அவனைக் கொன்றார். இதனால் கோபங்கொண்ட இரண்யன் திருமால் மீது கோபங்கொண்டான்.

இரண்யன் கடுமையான தவம் இருந்து பிரம்மனிடம் வரன் கேட்டான். தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், ஐம்பெரும் பூதங்கள், படைக்கலன்கள், பகல் நேரத்தில், இரவு நேரத்தில், வீட்டுக்கு உள் அல்லது வெளியில் தனக்கு இறப்பு என்பது வரக்கூடாது என வரம் பெற்றான். தான் பெற்ற இவ்வரத்தால் இவன் மக்கள் அனைவரையும் துன்புறுத்தினான். உலகத்தில் உள்ள அனைவரையும் தன்னை கடவுளாக வணங்கும் படி கட்டளையிட்டான். அனைவரும் பயந்து இரண்யனையே கடவுளாக வணங்கினர். அப்போது தேவேந்திரன் இரண்யனைப் பழிவாங்க நினைத்து, இரண்யனின் மனைவி கருவுற்றிருந்தபோது அவளைச் சிலகாலம் ஆசிரமத்தில் வைத்து, நாரதர் மூலம் மகாவிஷ;ணுவின் மகிமைகளை அறிய வைத்தான். இதை அவள் வயிற்றிலிருந்த குழந்தையும் கேட்டு, மகாவிஷ;ணுவின் பக்தனாகியது. அந்தக் குழந்தைதான் பிரகலாதன்.

 அனைவரும் இரண்யனையே கடவுளாக வணங்கினார்கள். ஆனால், இரண்யனின் மகன் பிரகலாதன் மகாவிஷ;ணுவையே எப்போதும் போற்றி வணங்கினான். அதைப் பொறுக்க முடியாத இரண்யன், தன் மகன் என்றும் பார்க்காமல் ஆயுதங்களைக் கொண்டு கொல்ல முயன்றான். தீயில் தள்ளிவிட்டும், கடலுக்குள் தள்ளிவிட்டும், நச்சுப் பாம்புகளை கடிக்க விட்டும் எத்தனையோ கொடுமைகளை செய்தான். ஆனால், எல்லா ஆபத்துகளிலிருந்தும் மகாவிஷஸ்ணு பிரகலாதனைக் காப்பாற்றினார். தன்னை எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பவர் ஹரி என்று அழைக்கப்படுகின்ற மகாவிஷஸ்ணுவே தான் என்று பிரகலாதன் கூறினான். அதைக் கேட்ட இரண்யன், அந்த ஹரி எங்கே இருக்கிறான்?என்று கேட்டான். அதற்கு பிரகலாதன், எங்கும் நிறைந்துள்ள இறைவன் இந்தத் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்று ஒரு தூணைக் காட்டினான்.

 இரண்யன் ஆவேசத்துடன், தன் கையிலிருந்த கதாயுதத்தால் அந்தத் தூணை அடித்தான். அப்போது, ஸ்ரீமந் நாராயணனாகிய மகாவிஷ;ணு, சிங்க முகமும், மனித உடலும் கொண்ட நரசிம்ம அவதாரத்தில், தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டார். அவரைத் தாக்கப் பாய்ந்தான் இரண்யன். நரசிம்மர் தன் நகங்களால் அவனது வயிற்றைக் கிழித்து, குடல்களை உருவி, மாலையாக அணிந்து கொண்டார். பூமியிலும், ஆகாயத்திலும் அவன் உடல் படாமல், தமது மடியில் வைத்துக் கொன்றார். அந்த நேரம் இரவுமின்றி, பகலுமின்றி மாலை வேளையாக இருந்தது. மகாவிஷ;ணுவின் பயங்கரமான நரசிம்ம உருவத்தைக் கண்டு, தேவர்கள் எல்லோரும் அருகில் வரப் பயந்து, தூரத்திலிருந்தபடியே வணங்கினார்கள். பக்தன் பிரகலாதன் அவர் அருகில் சென்று இனிய பாடல்களைப் பாடி வணங்கினான். அப்போது, ஸ்ரீநரசிம்மர் தமது கோபம் தணிந்து, அனைவருக்கும் அருள் புரிந்து மறைந்தார்.

தொடரும்...

No comments:

Post a Comment