இராமாயணம் தொடர் 77
அனுமன் இராமரை பற்றிக் கூறுதல்!
✼ அனுமன் சீதையை வணங்கிவிட்டு, இராமர் தங்களை விட்டு பிரிந்த பிறகு அவருக்கு சூரிய குமாரான சுக்ரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்ரீவன் குரங்கினத் தலைவன் ஆவான். சுக்ரீவனுடைய அண்ணன் வாலி. வாலி சுக்ரீவனுக்கு தீங்கு இழைத்ததால் இராமர் அவனை தன் பாணத்தால் வீழ்த்தினார். நான் சுக்ரீவனுடைய அமைச்சன் அனுமன். இராவணன் தங்களை கவர்ந்து சென்ற போது, தங்களுடைய ஆபரணங்களை ஓர் துணியில் கட்டி நாங்கள் இருந்த ருசியமுக பர்வதத்தில் தூக்கி எறிந்தீர்கள். அதை நாங்கள் பத்திரபடுத்தி வைத்திருந்தோம். பிறகு நாங்கள் அந்த அணிகலன்களை இராமரிடம் காண்பித்தோம். இராமர் அணிகலன்களை பார்த்து அது தங்களுடைய அணிகலன்கள் தான் என்பதை உறுதி செய்தார். ஆனால் இராமர் தங்களுடைய அணிகலன்களை பார்த்து மிகவும் துன்பப்பட்டார்.
✼ இராமரும் இலட்சுமணரும் நான் கவர்ந்து சென்ற செய்தியை எவ்வாறு அறிந்தனர் எனக் கேட்டாள் சீதை. அதற்கு அனுமன், இராவணன் தூண்டுதலால் மாய மான் போல் வந்த மாரீசனை இராமன் கொன்று விட்டார். ஆனால் அவனோ இறக்கும் தருவாயில் சீதா! தம்பி இலட்சுமணா! என கூறிக் கொண்டு இறந்தவிட்டான். தாங்களோ அது இராமர் என நினைத்து இலட்சுமணரை கடிந்து பேசி இராமரை காண அனுப்பிவிட்டீர்கள். பர்ணசாலை நோக்கி வரும் வழியில் தம்பி இலட்சுமணன் வருவதை கண்ட இராமர், சீதையின் தூண்டுதலால் தான் இலட்சுமணன் இங்கே வந்துள்ளான் என்பதை இராமர் புரிந்துக் கொண்டார். பிறகு தங்களை தனியே விட்டு வந்ததால் அங்கு தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விடுமோ என நினைத்து விரைந்து இருவரும் பர்ணசாலை வந்தடைந்தனர். அங்கு தங்களை காணாமல் இராமர் மிகவும் துன்பப்பட்டார்.
✼ பிறகு அவர்கள் இருவரும் தேரின் சுவடை வைத்து தெற்கு நோக்கி வந்தனர். அவர்கள் வரும் வழியில் ஜடாயு உயிர் துறக்கும் நிலையில் இருப்பதை கண்டனர். ஜடாயு அவர்களிடம் இராவணன் தங்களை கவர்ந்து சென்ற செய்தியை கூறினார். பிறகு இராமரும், இலட்சுமணரும் தங்களை தேடி எங்களை வந்தடைந்தனர் என்றான். இதைக் கேட்ட சீதை, இராமனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நினைத்து மிகவும் வருந்தினாள். சீதை அனுமனிடம், மாருதியே! இவ்வளவு சிறிய உருவம் கொண்ட நீ எவ்வாறு இக்கடலை கடந்து வந்தாய் எனக் கேட்டார். சீதை இவ்வாறு கேட்டதால் அனுமன் தன் முழு உருவத்தையும் காட்ட நினைத்தான். பிறகு அனுமன் வானை முட்டும் அளவிற்கு தன் உருவத்தை வளர்த்து நின்றான். அனுமனின் உருவத்தைக் கண்ட சீதை, மாருதி! போதும் உன் உருவத்தை ஒடுக்கிக் கொள் என்றாள். அனுமன், தங்கள் வார்த்தையே எனக்கு கட்டளையாகும் எனக் கூறிக் கொண்டு தன் உருவத்தை சிறிதாக்கி நின்றான்.
✼ பிறகு அனுமன் இராமரின் கட்டளைப்படி, சுக்ரீவன் தங்களை தேடச் சொல்லி பெரும் சேனையை எட்டுத் திசைகளுக்கும் செல்லுமாறு அனுப்பினார். தெற்கு திசையில் தங்களை தேடி வந்த வானர சேனைகளின் தலைவன் அங்கதன் ஆவான். அவன் தங்களை தேடும் பொருட்டு என்னை இலங்கைக்கு அனுப்பியவன். நான் தங்களை கண்டுபிடித்து விட்டு வருவேன் என்று எனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றான். சீதை அனுமன் சொன்னத்தை கேட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள். மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தாள். சீதை அனுமனிடம் இராமர் நலமாக உள்ளாரா? என வினவினாள். இராமர் நலமாக உள்ளார். ஆனால் தங்களை நினைத்து மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார். இலட்சுமணரும் நலமாக இருக்கிறார். ஆனால் அவர் தங்களை கஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளார் என்றான்.
தொடரும்...
No comments:
Post a Comment