இராமாயணம் தொடர் 100
இராவணனின் மந்திர ஆலோசனை!...
💢 இராமர் ஒற்றர்களை பார்த்து, ஒற்றர்களே! நான் சொல்வதை இராவணனிடம் சென்று சொல்லுங்கள். நான் இலங்கை நகர ஆட்சி பொறுப்பையும், வற்றாத செல்வத்தையும் விபீஷணனுக்கு வழங்கிவிட்டேன். அது மட்டுமின்றி கடல் நடுவில் இருக்கும் இலங்கைக்கு பாலம் கட்டிதான் நாங்கள் வந்துள்ளோம் என்பதையும், என்னுடன் ஒப்பற்ற வலிமை வாய்ந்த வீரர்களும் உடன் வந்துள்ளதாகவும் சென்று கூறுவாயாக. எங்களின் கடல் போன்ற வானர படை வீரர்கள் பற்றியும் சொல்வாயாக என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்வதற்கு வழிவகுத்து கொடுத்தார். அங்கு இராவணனின் அரண்மனையில் மந்திர ஆலோசனை கூடியது. அங்கு இராவணனின் பாட்டன் மாலியவான், இராவணனுக்கு அறிவுரை கூறினார். மாலியவான், இராமன் வீரத்தில் சிறந்தவன். இப்பொழுது அவர்கள் கடலில் அணைக்கட்டி இங்கு போர் புரிய வந்துவிட்டார்கள். ஆதலால் சீதையை கவர்ந்து வந்த நீ இராமனிடம் சென்று ஒப்படைத்து விடு. அது தான் உனக்கு நலம் என்றான்.
💢 இதைக் கேட்ட இராவணன் பாட்டன் மீது கோபங்கொண்டு, தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. தங்களுக்கு இவ்வளவு பயம் இருந்தால் விபீஷணனுடன் சென்று சேர்ந்துக் கொள்ளுங்கள். என் கோபத்திற்கு ஆளாகாதீர்கள் என்றான். இதற்கு மாலியவான், உனக்கு நன்மை சொல்வதில் ஒரு பயனும் இல்லை. நல்ல விஷயங்கள் சில நேரத்தில் கசக்கத் தான் செய்யும் என்றான். ஆலோசனை கூட்டத்தில் இருந்தவர்களும் இராவணனின் பாட்டன் சொல்லிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அப்பொழுது இராவணன் அனுப்பிய ஒற்றர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இராவணனை பார்த்து வணங்கினார்கள். இராவணன் ஒற்றர்களிடம், ஒற்றர்களே! நீங்கள் அங்கு சென்று இராம இலட்சுமணரின் திறமை, வானர வீரர்களின் படை வலிமையும் திறமையும், அங்கு விபீஷணன் இருக்கும் நிலையை பற்றியும் நீங்கள் கண்டதை கூறுங்கள் என்றான்.
💢 பிறகு ஒற்றர்கள், அரசே! இராமன் கடலின் மேல் அணைக்கட்டி இங்கு வந்து சேர்ந்துவிட்டான். வானரங்களின் படைகளின் அளவை எங்களால் காண இயலவில்லை. பிறகு நாங்கள் வானரங்கள் உருவம் மாறி சென்றதை விபீஷணன் கண்டுபிடித்து விட்டான். பிறகு அவன் எங்களை இராமன் முன் நிறுத்தினான். இராமன் முன் நாங்கள் ஒற்றர்கள் இல்லை என கூறினோம். ஆனால் விபீஷணன் நாங்கள் தங்களின் ஒற்றர்கள் தான் என்பதை நிரூபித்து விட்டான். இதை அறிந்த இராமர் தங்களிடம் சொல்லச் சொல்லி ஒரு செய்தியை அனுப்பியுள்ளான். இராமன், விபீஷணனை இலங்கையின் அரசனாக முடிசூட்டிவிட்டதாகவும், தன்னிடம் வலிமை வாய்ந்த வீரர்கள் உள்ளதாகவும் கூறினான். ஒற்றர்கள் கூறியதை கேட்ட இராவணன், ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்தான். இனி நாம் என்ன செய்யலாம் என அவையில் இருந்தவர்களிடம் ஆலோசனை கேட்டான்.
💢 அப்போது படைத்தலைவன் எழுந்து, அரசே! இப்பொழுது நாம் சீதையை அவர்களிடம் ஒப்படைத்தால் நாம் அவர்களை கண்டு பயப்படுகிறோம் என எண்ணுவார்கள். மிகுந்த பலம் கொண்ட நம் படைகளை அழிக்க பல வருடங்கள் ஆகும் அவர்களுக்கு. அவர்களிடம் சமாதானம் பேச சென்றால் விபீஷணன் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டான். ஆனால் நாம் விரைவில் படையெடுத்து அவர்களிடம் போர் புரிய சென்றால், நம் படைகளைக் கண்டு வானரங்கள் பயந்து ஓடி விடுவார்கள் என்றான். படைத்தலைவனின் யோசனையைக் கேட்ட இராவணன், சீதையின் காரணமாகத்தான் அவர்கள் என்னுடன் போர் புரிய வருகிறார்கள் என்றால், அதற்காக நான் சிறிதும் பின்வாங்க மாட்டேன். என் கையிலுள்ள அம்புகள் உலகம் அனைத்தையும் வென்ற புகழுடையவை. போர் என்றதும் எதிரியின் மார்பில் புகுந்து செல்லும் வலிமையுடையது. இந்த குரங்குகளிடம் நான் தோற்றுபோவேனா? என்றான் ஆவேசத்துடன்.
தொடரும்...
No comments:
Post a Comment