Saturday, September 30, 2023

RAMAYANAM PART 76

 இராமாயணம் தொடர் 76

அனுமன் சீதை முன் தோன்றுதல்!

✻ இராவணன் திரும்பி சென்ற பிறகு அரக்கிகள் சீதையை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் சீதையிடம், அரசன் இராவணன் உன் மீது உண்மையான ஆசை வைத்து இருக்கிறார். அவரை நீ ஏற்றுக் கொள். இல்லையேல் உன்னை நாங்களே கொன்று தின்று விடுவோம் என்றனர். நீ இராவணனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் உன்னால் உயிர் வாழ முடியாது. இனியும் இராமன் வந்து உன்னை காப்பாற்றுவான் என எண்ணிக் கொண்டு இருக்காதே. இராவணன் இம்மூவுலகுக்கும் அதிபதி ஆவான். அவனை நீ ஏற்று கொள்வதை விட உனக்கு வேறு வழி இல்லை என பலவாறு சீதையை துன்புறுத்திக் கூறினர். இவர்களின் துன்புறுத்தல்களை கேட்ட திரிசடை தூக்கத்தில் இருந்து எழுந்தாள். உடனே அவள் மற்ற அரக்கிகளிடம், இனியும் நீங்கள் சீதையை துன்புறுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள். சீதையின் கணவன் இராமன் சீதையை மீட்டுச் செல்ல போகிறார். இது நான் கண்ட கனவு ஆகும்.

✻ பொதுவாக விடியற்காலையில் காணும் கனவு பலிக்கும் என்று சொல்வார்கள் என்றாள். இதைக் கேட்ட மற்ற அரக்கிகள் உன் கனவை விரிவாக கூறு என்றனர். நான் வெள்ளைக்குதிரை கொண்ட தங்கத்திலான புஷ்பரக தேரில் இராமனும் இலட்சுமணும் வந்து சீதையை மீட்டுச் சென்றனர். இராவணன் அத்தேரில் இருந்து தள்ளப்பட்டு கழுதை மீது ஏறி தென் திசை நோக்கிச் சென்றான். அவனுடன் கும்பகர்ணனும் சென்றான். விபீஷணன் மட்டும் யானை மீது அமர்ந்திருந்தான். இலங்கை நகரம் தீப்பிடித்து எரிவது போலவும் கண்டேன் என்றாள். இதைக் கேட்ட சீதை மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். திரிசடை தாயே! நீ கண்ட கனவு பலித்தால் நிச்சயம் நான் உனக்கு உதவி செய்வேன் என்றாள். இருந்தாலும் சீதை இராவணனின் தொல்லைகளையும், மற்ற அரக்கிகளின் அச்சுறுத்தல்களையும் நினைத்து மிகவும் வேதனையடைந்தாள்.

✻ இதையெல்லாம் மரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அனுமன் இது தான் சரியான தருணம் நான் அன்னை சீதையிடம் பேசுவதற்கு என நினைத்தான். அதனால் அனுமன் ஒரு மந்திரத்தைச் சொல்லி அரக்கிகள் அனைவரையும் ஆழ்ந்த தூக்கத்திற்கு போகும்படி செய்தான். அரக்கிகள் என்றும் ஒன்றாக தூங்குவதை காணாத சீதை இன்று ஒன்றாக தூங்குவதைக் கண்டாள். சீதை தனக்கு ஏற்பட்ட துன்பங்களை நினைத்து மிகவும் வருந்தினாள். என் இராமன் எப்போது வந்து என்னை மீட்க போகிறான். மாய மானின் பின்னால் என் இராமனையும் இலட்சுமணனையும் அனுப்பினேனே. அதற்கு பதிலாக தான் இன்று இந்த கொடுமையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன் என நினைத்து வேதனைப்பட்டாள்.

✻ அப்பொழுது இராமனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டு அனுமன் சீதை முன் தோன்றி சீதையை தொழுது வணங்கினான். அனுமன் திடீரென்று தோன்றியதால் சீதை அனுமனை பார்த்து பயந்தாள். அன்னையே! தாங்கள் பயப்பட வேண்டாம். நான் இராமனின் அடியேன் ஆவேன். இராமனின் கட்டளையினால் தங்களை தேடி இங்கு வந்தேன். தங்களை இலங்கை முழுவதும் தேடி கண்டுபிடிக்க முடியாமல் கடைசியில் இங்கு கண்டுவிட்டேன். நான் தங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்றான். அனுமன் பேசியதைக் கேட்ட சீதை நிச்சயம் இவன் அரக்கனாக இருக்க முடியாது என நினைத்தாள். பிறகு சீதை அனுமனை உற்று நோக்கினாள். இவன் என் கணவன் இராமன் பெயரை கூறுவதால் நிச்சயம் இவன் நல்லவனாக தான் இருக்கக்கூடும் என நினைத்தாள். சீதை அனுமனை பார்த்து நீ யார்? என வினவினாள்.

தொடரும்...

No comments:

Post a Comment