இராமாயணம் தொடர் 62
படைகள் திரண்டு வருதல்!
🎠 அனுமன் இலட்சுமணரை, சுக்ரீவனை காண அழைத்துச் சென்றார். அங்கு சுக்ரீவன் தன் மனைவியுடன் இலட்சுமணனின் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருந்தார். இலட்சுமணர் வந்தவுடன் அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான் சுக்ரீவன். அரண்மனையில் அரியணையில் அமருமாறு இலட்சுமணை வேண்டிக் கொண்டான் சுக்ரீவன். அதற்கு இலட்சுமணர், சுக்ரீவனே! என் அண்ணன் இராமர் துன்பக்கடலில் மூழ்கி இருக்கும்போது நான் எவ்வாறு அரியணையில் அமர முடியும் என்றார். ஆதலால் நான் தரையில் அமருவது தான் சரி என்று சொல்லி தரையில் அமர்ந்தார் இலட்சுமணர். இதைப் பார்த்த சுக்ரீவன் மிகுந்த வேதனைப்பட்டான். பிறகு சுக்ரீவன் இலட்சுமணனிடம், தாங்கள் எங்களுடன் வந்து உணவு உண்ணுமாறு அன்புடன் அழைத்தார். இலட்சுமணர், அங்கு எம்பெருமான்! காய், கனிகளை மட்டும் உண்ணும்போது, நான் எவ்வாறு தங்களின் விருந்தை ஏற்க முடியும் என மறுத்து விட்டார்.
🎠 இதைக் கேட்ட சுக்ரீவன் மட்டுமல்லாது அங்கிருந்த அனைவரும் மிகுந்த வேதனையுடன், கண்ணீர் தழும்ப நின்றனர். மிகவும் வேதனைக் கொண்ட சுக்ரீவன், இராமரை விரைந்து காண வேண்டும் என நினைத்தார். அதனால் சுக்ரீவன் அனுமனிடம், அனுமனே! வானர சேனைகளை திரட்ட சென்று இருக்கும் தூதர்களையும், அவர்களோடு வரும் வானர சேனைகளையும் நீ அழைத்துக் கொண்டு வா என்று கட்டளையிட்டான். பிறகு இலட்சுமணரும், சுக்ரீவனும் இராமரைக் காண விரைந்து சென்றனர். போகும் வழியில் சுக்ரீவன் இராமரை நினைத்துக் கொண்டே சென்றான். அவர்களுடன் அங்கதனும் சென்றான். அவர்கள் இராமர் இருக்கும் இடத்தை அடைந்தனர். சுக்ரீவன் ஓடிச்சென்று இராமனின் திருவடியில் விழுந்து வணங்கினான். இராமர் சுக்ரீவனை அன்போடு தழுவி தன் பக்கத்தில் அமர வைத்தார். சுக்ரீவா! எல்லோரும் நலமாக உள்ளார்களா! உன் ஆட்சி அறநெறியுடன் உள்ளதா? எனக் கேட்டார். சுக்ரீவன், பெருமானே! தங்களின் ஆசியால் எல்லோரும் நலமாக உள்ளார்கள் என்றான்.
🎠 இராமர், அனுமன் எங்கே? எனக் கேட்டார். சுக்ரீவன், அனுமன், படைகளை திரட்ட சென்றுள்ளான். முழு படைகளையும் திரட்டி கொண்டு வருவான் என்றான். அங்கு வானர படைகள் பல்வேறு திசைகளில் இருந்து வந்துக் கொண்டு இருந்தனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வானரங்களாக தெரிந்தன.
🎠 சதவலி என்னும் வானர வீரன், தன் படைத்தளபதிகளோடு, பதினாயிரம் வானரப் படைகளுடன் அங்கு வந்து சேர்ந்தான். சுசேடணன் என்னும் வானர வீரன் மேரு மலையை தகர்த்து எடுக்கும் வலிமை படைத்தவன். அவன் தன் பத்து லட்சம் கோடி வானர படைகளுடன் அங்கு வந்து சேர்ந்தான். தாரன் என்னும் வானர வீரன் கண் சிமிட்டும் நேரத்துக்குள் தன் பெரிய படையான ஐம்பதாயிரம் படையுடன் வந்து சேர்ந்தான். சுவாட்சன் என்னும் வானர வீரன் இரண்டாயிரம் கோடி படையுடன் வந்து சேர்ந்தான். தாரன் என்னும் வானர வீரன் தன் இரண்டாயிரம் படைகளுடன் வந்து சேர்ந்தான்.
🎠 கரடி இனத் தலைவனான தூமிரன் இரண்டாயிரம் கோடி கரடிப்படையுடன் வந்து சேர்ந்தான். பனசன், பெரிய மலையைப் போன்ற உருவம் கொண்டவன் தன் பன்னிரெண்டாயிரம் கோடி படையுடன் அங்கு வந்து சேர்ந்தான். வானர வீரனான நீலன் தன் பதினைந்து கோடி நெடிய வானரப் படையுடன் வந்து சேர்ந்தான். கவயன் எனும் வீரன் முப்பதினாயிரம் கோடி சேனையுடன் அங்கு வந்து சேர்ந்தான். ஆறைந்து தன் முப்பது கோடி குரங்குச் சேனையுடன் அங்கு வந்தான். தரிமுகன் என்பவன் தன் பெரிய படையான ஆயிரத்து அறநூறு கோடி படையுடன் வந்து சேர்ந்தான்.
தொடரும்...
No comments:
Post a Comment