Friday, September 8, 2023

RAMAYANAM PART 55

 இராமாயணம் தொடர் 55

இராமர் வாலியின் மீது அம்பு எய்தல்!...

✽ இராமனின் பாணம் வாலியின் மார்பில் துளைத்தது. வாலி மயங்கி கீழே விழுந்தான். பிறகு சிறிது மயக்கம் தெளிந்த வாலி தன் மார்பில் அம்பு துளைத்தை பார்த்து மிகவும் கோபமுற்றான். வாலி கோபத்தில், என் மீது அம்பு எய்தியவரை நான் உயிரோடு விடமாட்டேன். இவ்வுலகை அழிப்பேன் என உரைத்தான். பிறகு வாலி என் மீது அம்பை தொடுத்தவர் யாராக இருப்பார்கள். தேவர்களாக இருப்பார்களா? ஆனால் தேவர்களுக்கு இந்த அளவுக்கு வலிமை உள்ளதா என எண்ணினான். வாலி தன் மார்பில் பாய்ந்த அம்பை எடுக்க முயற்சித்தான். எவ்வளவு முயன்றும் அந்த அம்பை அவனால் வெளி கொண்டு வர முடியவில்லை. இதனால் அவன் மனம் வருந்தினான். அவன் கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் சிரித்தான். அவன் மார்பில் இருந்து இரத்தம் ஆறு போல் பெருகியது.

✽ இதனை பார்த்துக் கொண்டிருந்த சுக்ரீவன், அண்ணன் மீது கொண்ட பாசத்தில் அழுது கீழே விழுந்தான். பிறகு வாலி மார்பின் மீது பாய்ந்த அம்பில் உள்ள பெயரை பார்த்தான். அதில் ராம் என எழுதப்பட்டிருந்தது. இதனை பார்த்த வாலி மிகவும் அதிர்ச்சி அடைந்தான். தருமநெறியில் நடக்கும் இராமனா இச்செயலை செய்தது. தாரையிடம் இராமனை பற்றி பெருமையாக பேசி அவளை கடிந்துவிட்டு வந்தேனே என நினைத்து ஏளனமாக சிரித்தான். ரகு குலத்தில் பிறந்த இராமர் தவறே செய்யாத என்மீது அம்பு எய்தியது எதற்காக? தசரதரின் புதல்வர் இராமர் நீதிநெறி தவறலாமா? இராமனின் இச்செய்கையை பார்த்து ஏளனமாக சிரித்தான். பிறகு அம்பு வந்த திசையை உற்று பார்த்தான். இராமர் வாலியை நோக்கி வந்துக் கொண்டு இருந்தார்.

✽ வாலி முன் இராமர் வந்து நின்றார். ஒளிவீசும் தோற்றத்தோடும், கையில் வில் ஏந்தி வந்த இராமரை பார்த்தான் வாலி. மிகவும் கோபம் கொண்ட வாலி இராமரிடம், என் மீது அம்பை எதற்காக துளைத்தாய்? நான் உனக்கு என்ன தவறு செய்தேன்? எல்லோருக்கும் தீமையை அகற்றி நன்மை செய்யும் நீ எனக்கு இத்தகைய தீங்கு விளைவிக்க காரணம் என்ன? இராமா! வாய்மையும், மரபையும் காக்கும் தசரதனின் புதல்வனா நீ? இராகவா! உத்தம குணமிக்க பரதனின் அண்ணனா நீ! வசிஷ்ட முனிவரிடம் கற்ற கல்வியை நீ மறந்து விட்டாயா? அரக்கர்களை அழித்து முனிவர்களை காத்தாய். என்னை அழித்து நீ யாரை காக்க போகிறாய்? அன்னம் போன்ற உன் மனைவி சீதா தேவியை பிரிந்த பிறகு உனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லையா? 

✽ ஓர் அரக்கன் உன் மனைவியை கவர்ந்து சென்றதால் குரங்கினத்தின் அரசனாகிய என்னை வதம் செய்வதா? இராமா! உன்னிடத்தில் இருந்த அன்பும், பாசமும் எங்கே போனது? வேந்தனே! நாட்டை உன் தம்பி பரதனுக்கு கொடுத்துவிட்டு, இக்கானகத்துக்கு வந்த நீ, என்னை கொன்றுவிட்டு அரசை தம்பி சுக்ரீவனிடம் கொடுக்கத்தான் இவ்வாறு செய்தாயா? ஓர் உயிரை காக்கும் நீ, ஓர் உயிரை எடுப்பது அதர்மத்திற்கு சமமாகும். எந்த ஒரு வீரனும் பின் நின்று அம்பு எய்த மாட்டான். இதிலிருந்து தெரிகிறது நீ எத்தகைய வீரன் என்று. இன்று நீ அறநெறிப்படி நடக்கவில்லை.

✽ சுக்ரீவன் அழைத்ததால் இங்கு வந்து சண்டையிட்டு கொண்டு இருந்த என்னை இக்கதிக்கு ஆளாக்கிவிட்டாய். இது உனக்கு நியாயமாகப்படுகிறதா? நீ என்னை கொன்று என்ன சாதிக்க போகிறாய். நேருக்குநேர் என்னிடம் சண்டை போடாமல் பின் நின்று என் மீது அம்பு எய்திய உன்னை மக்கள் பாராட்டுவார்களா? இல்லை தூற்றுவார்களா? நீ வில்வித்தையில் சிறந்தவன் என்று கூறுகிறார்கள். நீ பின் நின்று அம்பு எய்துவது தான் உன் வில்வித்தையின் சிறப்பா? என்று கேட்டான் வாலி.

தொடரும்.....



No comments:

Post a Comment