Tuesday, August 29, 2023

RAMAYANAM PART 45

 இராமாயணம் தொடர் 45

சீதையை தேடி செல்லுதல்!

⚡ சீதை ஜடாயுவின் மரணத்தை பார்த்து மிகவும் வேதனைப்பட்டாள். தன்னை காப்பாற்ற வந்த ஜடாயுவுக்கு நேர்ந்த இந்த நிலைமையை கண்டு சீதை மிகவும் வருந்தினாள். இராவணன் இலங்கையை அடைந்தான். அங்கு அசோக வனத்தில் சீதையை சிறை வைத்தான். கொடிய அரக்கர்களை கொண்டு சீதையை காவல் புரிய வைத்தான்.

⚡ சீதையை தனியே விட்டுட்டு மனம் வருந்தி இலட்சுமணர் இராமரை நோக்கிச் சென்றார். மாரீசனின் குரலைக் கேட்டு சீதை தன்னை நினைத்து மிகவும் துன்பப்படுவாள் என எண்ணி இராமர் வேகமாக திரும்பிக் கொண்டு இருந்தார். வரும் வழியில் தொலைவில் இலட்சுமணன் வருவதை கண்டார் இராமர். இலட்சுமணரை பார்த்ததும் இராமரின் மனம் பதைப்பதைத்தது. இலட்சுமணனை சீதைக்கு காவலாக அங்கே இரு என்று சொல்லியிருந்தும், இவன் இங்கு வருவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இலட்சுமணரை நோக்கி வந்தார் இராமர். இலட்சுமணர் இராமரை கண்டதும் அருகில் வந்து வணங்கி, இராமரை தழுவி கொண்டார். பிறகு இராமர் நீ சீதையை தனியாக விட்டுவிட்டு இங்கே வருவதற்கான காரணம் என்ன என்று வினவினார்.

⚡ இலட்சுமணர் நடந்தவற்றை எல்லாம் விவரமாக கூறினான். அன்னை! அரக்கன் குரலை தங்கள் குரல் தான் என்று கூறி என்னை வலுகட்டாயமாக அனுப்பி வைத்தார். நான் தங்களின் குரல் இல்லை என எவ்வளவு சொல்லியும் அன்னை அதை கேட்கவில்லை. அன்னை சீதை, தன்னை கடிந்து பேசி அனுப்பியதை கூறினார். இதை கேட்ட இராமன் அனைத்துக்கும் தானே காரணம் என்று மனம் வருந்தினார். தம்பி! நீ மானை பிடிக்க வேண்டாம் என சொல்லியும், நான் மானை பிடிக்க வந்தது என் தவறு தான் எனக் கூறினார். பிறகு இருவரும் சீதை அங்கே தனியாக இருப்பாள் என விரைந்து பர்ணசாலைக்கு திரும்பினர். இருவரும் பர்ணசாலையை அடைந்தனர். பர்ணசாலை வெறுமையாக இருந்தது. அங்கே சீதை இல்லாததை கண்டு இராமர் திடுக்கிட்டார். பெரும் துயரம் அடைந்தார். இராமர் சீதையை நினைத்து துயரத்தில் மூழ்கினார்.

⚡ இலட்சுமணர், பர்ணசாலை வெளியில் தேர் சுவடு இருப்பதை கண்டார். அத்தேர் தெற்கு நோக்கி பயணித்துள்ளது என்பதை கண்டு இராமரிடம் கூறினார். அண்ணா! நாம் நேரத்தை வீணடிக்காமல் விரைந்து சென்று அன்னையை காப்பாற்றுவோம் என கூறினார் இலட்சுமணர். இராமர், நீ சொல்வதும் சரிதான். வா! உடனே பின் தொடர்ந்து செல்வோம் எனக் கூறி இருவரும் பின் தொடர்ந்தனர். தேரின் சுவடை நோக்கி இருவரும் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் தேரின் சுவடு மறைந்து விட்டது. தேரின் சுவடு மறைந்ததை பார்த்து இராமர் திகைத்து நின்றார். இலட்சுமணர், அண்ணா! தேரின் சுவடு மறைந்தால் என்ன? தேர் தெற்கு நோக்கி சென்றுள்ளது என்பது உறுதியாக தெரிகிறது. நாம் தெற்கு நோக்கி செல்வோம் எனக் கூறினார். இருவரும் தெற்கு நோக்கி சென்றார்கள்.

⚡ அவர்கள் சிறிது தூரம் சென்றதும் வழியில் வீணைக்கொடி ஒன்று அறுந்து கிடப்பதை பார்த்தார்கள். இலட்சுமணர் வீணைக் கொடியைப் பார்த்து இது இராவணனுடையது என்றார். வீணைக் கொடி ஜடாயு-வின் மூக்கினால் அறுப்பட்டுள்ளதை பார்த்தனர். இராவணனிடம் போர் புரிந்து அவன் தேரை உடைத்து வீணைக்கொடியை அறுத்தவர் ஜடாயு பெரியப்பா என்பதை உணர்ந்தனர். பிறகு இருவரும் ஜடாயுவை தேடி சென்றனர். வழியில் பல தலைகள், பல கைகள் அறுப்பட்டு கிடந்தன. இதனைப் பார்த்த இராமர், சீதையை கவர்ந்து சென்றவர் பல அரக்கர்கள் போல் தெரிகிறது என்றார். இலட்சுமணர், அண்ணா! இராவணனுக்கு பல தலைகள், பல கைகள் உண்டு. இவன் பல தலைகள், பல கைகள் அறுக்கப்பட்டாலும் திரும்ப முளைக்கும் வரம் பெற்றவன். இங்கு பல தலைகள், பல கைகள் அறுக்கப்பட்டுள்ளது. ஆனால் கால்கள் அறுப்பட வில்லை. ஆதலால் இராவணன் தான் அன்னையை கவர்ந்து சென்றுள்ளான் என்றார்.

No comments:

Post a Comment