Saturday, August 26, 2023

RAMAYANAM PART 39

 இராமாயணம் தொடர் 39

சூர்ப்பனகை இராவணனிடம் சென்று முறையிடுதல்!

⭐ இராமர், அரக்கர் கூட்டத்தை அழித்துவிட்டு ஆசிரமம் திரும்பினார். சீதையும், இலட்சுமணனும் மலைக்குகையில் இருந்து திரும்பி ஆசிரமத்திற்கு வந்தனர். வெற்றியோடு திரும்பி வந்த இராமனை சீதையும், இலட்சுமணனும் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

⭐ சூர்ப்பனகை, நான் இராமன் மீது வைத்த காதலால் என் மூக்கு, காதுகளை மட்டும் இழக்கவில்லை என் சகோதரர்களாகிய உங்களையும் நான் இழந்துள்ளேன் என்று புலம்பி அழுதாள். எனக்கு நேர்ந்த இந்த அநியாயத்தை நான் இராவணனிடம் சென்று முறையிடுவேன் என்று கூறி இலங்கைக்கு விரைந்து சென்றாள். இலங்கையில் இராவணன் ஓர் மணிமண்டபத்தில் கம்பீரமாக வீற்றிருந்தான். அரம்பையர்கள் ஆடிக் கொண்டு இருந்தார்கள். அந்த மண்டபத்தில் கூடியிருந்த அரசர்கள் எப்போது இராவணன் தங்கள் பக்கம் திரும்புவானோ என்று எதிர்பார்த்து கரங்களைக் கூப்பிக்கொண்டு பணிவாக நின்று கொண்டிருந்தார்கள்.

⭐ தேவர்கள் எல்லாம் இராவணனின் சபையில் பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். இவ்வளவு கம்பீரமாய் அமர்ந்திருந்த இராவணனின் காலடியில் சூர்ப்பனகை வந்து வீழ்ந்தாள். இராவணன் தன் தங்கை சூர்ப்பனகையின் நிலைமையை கண்டு பெரும் கோபம் கொண்டான். தங்கையே! உன்னை இக்கதிக்கு ஆளாக்கியவர்கள் யார்? உன் மூக்கையும், காதையும் அறுத்தவர்கள் யார்? எவ்வளவு துணிவு இருந்தால் அவர்கள் உன்னை இவ்வாறு செய்து இருப்பார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் நான் உயிருடன் விடமாட்டேன் என கோபம் பொங்க கூறினான். இராவணனின் கோபத்தை பார்த்து அங்கு கூடியிருந்தவர்கள் அஞ்சி நடுங்கினார்கள். சூர்ப்பனகை! சொல், உன்னை இக்கதிக்கு ஆளாக்கியவர்கள் யார்?

⭐ சூர்ப்பனகை, அண்ணா! தவக்கோலம் பூண்டு இருவர் வனத்திற்கு வந்துள்ளார்கள். அவர்கள் தசரதனின் குமாரர்கள். வீரத்தில் சிறந்தவர்கள். வில்வித்தையில் நன்கு தேறியவர்கள். எல்லா கலைகளையும் நன்கு கற்று தேர்ந்தவர்கள். தர்ம நெறியில் நடப்பவர்கள். அவர்கள் இருவருக்கும் ஈடு இணை யாரும் இல்லை. அவர்கள் பெயர் இராமன், இலட்சுமணன். அது மட்டுமில்லாமல் அவர்கள் அரக்கர் குலத்தை அழிப்போம் என்று சபதம் எடுத்துள்ளார்கள். என்னை இக்கதிக்கு ஆளாக்கியதும் அந்த மனிதர்கள் தான். உனக்கு இப்படியொரு தீங்கு செய்த அவர்கள் உயிரோடு இருக்கலாமா? காட்டில் காவல் புரிந்து கொண்டு இருக்கும் கரனிடம் சென்று சொன்னாயா? என்றான் இராவணன். இதை கேட்ட சூர்ப்பனகை ஒப்பாரி வைத்து அழுதாள். பிறகு நான் முதலில் கரனிடம் தான் சென்று முறையிட்டேன். அவன் தூஷணன் மற்றும் திரிசரஸ் தலைமையில் பெரும் படைகளை அழைத்து கொண்டு இராமனிடம் யுத்தம் செய்ய சென்றான். 

⭐ இராமன் தனி ஒருவனாய் நின்று கரன், தூஷணன், திரிசரஸ் மூவரையும் படையோடு தன் பாணங்களால் கொன்றுவிட்டான். இதனைக்கேட்ட இராவணின் கண்கள் நெருப்பு குழம்பு போல் எரிந்தது. சூர்ப்பனகையிடம், உன் காதையும், மூக்கையும் அறுக்கும்படி நீ அவர்களை என்ன செய்தாய்? என்று கேட்டான் இராவணன். என்னுடைய இக்கதிக்கான காரணம் அவர்களுடன் இருக்கும் சீதை தான். அவள் மகாலட்சுமி போல் பேரழகு உடையவளாக இருக்கிறாள். அவளால் தான், நான் என் காதையும் மூக்கையும் இழந்தேன். அவள் இராமனுடைய மனைவி. அழகின் சொரூபமாய் தங்கச்சிலை போல் உள்ளாள். அவளை பார்த்ததும் நானே ஒரு நிமிடம் மயங்கிவிட்டேன். உலகில் அவளை காட்டிலும் அழகி வேறு யாரும் இல்லை என்று பலவாறாக சீதையின் அழகைப் பற்றி கூறினாள். 

⭐ சீதையின் அழகைப் பற்றி கேட்டதும் இராவணனுக்கு சீதையின் மேல் காதல் வந்தது. சூர்ப்பனகை இராவணனிடம், அண்ணா! நீ சீதையை திருமணம் செய்து இராமனை என்னிடம் ஒப்படைத்து விடு என்றாள்.

No comments:

Post a Comment