Thursday, August 10, 2023

RAMAYANAM PART 3

 இராமாயணம் பகுதி 3

திருமாலின் ராம அவதாரம்

🌟கோசல நாடு கங்கை நதிபாயும் நீர் வளமும், நிலவளமும், குடிவளமும் கொண்ட வளமை மிகுந்த நாடாகும். கோசல நாட்டின் தலைநகரம் அயோத்தி ஆகும். இந்நகரத்தில் வாழும் மக்கள் அனைவரும் தருமகுணசீலர்கள். அயோத்தி என்ற சொல்லுக்கு புத்தம் இல்லாத ஊர் என்று பொருள். அயோத்தி நகரம் போரும் சினமும் இன்றிச் சாந்தமாக திகழ்ந்தது.

🌟அயோத்தி மாநகரை ஆதித்தன் குலத்தில் அஜமகா ராஜனுக்கும் இந்துமதிக்கும் மகனாக பிறந்த தசரத சக்ரவர்த்தி மக்களுக்கு நல்லாட்சி புரிந்து வந்தார். இவருடைய ஆட்சியில் தருமம் தழைத்து நின்றது. மக்கள் துன்பம் இன்றி இன்பமாக வாழ்ந்தார்கள். தசரத மன்னருக்கு கௌசலை, கைகேயி, சுமித்திரை என்று மூன்று மனைவியர் இருந்தார்கள். இவருக்கு மக்கட்பெறு இல்லாததால் இவர் வேறு வேறு மாதர்களை திருமணம் செய்து கொண்டார். அவ்வாறு செய்துகொண்ட பெண்கள் மொத்தம் 360 பேராகும். இவர் அறுபதினாயிரம் ஆண்டுகள் நல்லற நாயகனாக அரசு புரிந்தார்.

🌟தசரதர் மன்னர் தமக்குப் பின் தருமநெறி தவறாமல் தரணியை அரசு புரிய ஒரு மகன் பிறக்கவில்லையே என்று பெரிதும் வருந்தினார். அரசவையில் தசரத சக்ரவர்த்தி, தமது குலகுருவாகிய வசிஷ்ட முனிவரை வணங்கி, குருநாதா! அடியேன் தங்கள் ஆசியினால் இந்த உலகத்தில் பத்து திசைகளிலுமிருந்து வந்த பத்து ரதங்களை வென்று, தசரதன் என்று பேர் பெற்றேன். சம்பரனை வென்று இந்திரனுக்கு உதவி புரிந்தேன். ஆனால் தங்கள் அடியெனுக்கு மகப்பேறு வாய்க்கவில்லை. யாழ் என்ற இன்னிசைக் கருவிகளின் நாதங்களைக் கேட்கும் என் செவியில் அப்பா! என்று அழைக்கும் மழலை சொல் கேட்கும் பாக்கியம் பெற்றெனில்லை என கூறி மிகவும் வருந்தினார். தாங்கள் பிரம புத்திரர். அடியெனுக்கு மகப்பேறு உண்டாக அருள்புரிய வேண்டும் என்று கூறி முறையிட்டார்.

🌟வசிஷ்ட முனிவர் ஊனக்கண்களை மூடினார். அப்பொழுது அவருக்கு ஞானக்கண் திறக்கப்பெற்றது. அதில் முனிவர் கண்ட காட்சி,

🌟திருமால் திருப்பாற்கடலில் அரவணையில் அறிதுயில் புரிகின்றார். இராவணாதி அரக்கர்களால் பலகாலமாக துன்பப்படுகின்ற பிரமாதி தேவர்கள் நாராயணரிடம் தஞ்சம் புகுந்து கருணைக்கடலே! கமலக்கண்ணா! நாங்கள் இராவணன் முதலிய அரக்கர்களால் பஞ்சுபடாத பாடுபடுகின்றோம். தாங்கள் அசுர குலத்தை அழித்து, நாங்கள் செழித்து வாழ அருள் புரியவேண்டும் என்று சரண் அடைந்தார்கள்.

🌟திருமால் தேவர்களை நோக்கி அமரர்களே! நான் பூவுலகில் இராமனாக அவதரித்து இராவணாதி அரக்கர்களை அழித்து தங்களது துயர் நீக்கி அருள் புரிவேன். ஆகவே, நான் மனிதனாக வந்து அவதரிப்பேன். தேவர்களாகிய நீங்கள் முன்னதாகவே வாநரங்களாகப் பிறந்து இருங்கள் என்று கட்டளையிட்டார். திருமாலின் கட்டளையின்படி, 

🌟வானவர்கள் வாநரங்களாகப் பிறந்தார்கள். இந்திரன் வாலியாகப் பிறந்தான். சூரியன் சுக்கிரீவனாகப் பிறந்தான். அக்கினித்தேவன் நீலனாகப் பிறந்தான் (நீலன் சேனை தலைவன்). விசுவபிரம்மா நளனாகப் பிறந்தான், வாயுதேவன் அனுமனாகப் பிறந்தான். ருத்ராம்சமும் அதில் கலந்து நின்றது. உபேந்திரன் அங்கதனாகப் பிறந்தான். பிரமதேவர், நான் ஏற்கெனவே கரடிக் குழுத் தலைவன் ஜாம்பவந்தனாகப் பிறந்திருக்கிறேன் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment