Thursday, August 10, 2023

RAMAYANAM PART 9

 இராமாயணம் பகுதி 9

யாகத்தை காத்த இராமர்

💫 தேவர்கள் இராமபிரானுக்கு சிறந்த பாணங்களை தருமாறு பணித்தார்கள். சிவபெருமானிடம் இருந்து விசுவாமித்திரர் தவம் செய்து பெற்ற 500 வகையான அஷ்திரங்களையும், அதனை திருப்பியழைக்கின்ற உபசம்மாரங்களையும் இராமருக்கு முனிவர் உபதேசித்தருளினார். இராமரால் விசுவாமித்திரர் அடைந்த பயனை காட்டிலும் விசுவாமித்திரரால் இராமர் அடைந்த பயன் 90 சதவீதமாகும். மூவரும் கோமதி என்ற நதி, சரயு நதியில் கலக்கும் சங்கமத்தில் ஓர் இரவு தங்கினார்கள். அந்த நதியின் பெருமைகளை முனிவர் இராமருக்கு கூறி அங்கிருந்து புறப்பட்டு சித்தாசிரமத்தை சேர்ந்தார்கள். அந்த ஆசிரமம் மங்கையரின் உள்ளம்போல் மிகவும் தூய்மையாக இருந்தது.

💫 திருமால் அங்குப் பலகாலம் தவம் செய்தார். அப்பொழுது மகாபலி சக்ரவர்த்தி மிக்க வலிமையுடன் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் கவர்ந்து கொண்டான். திருமால் அதிதி வயிற்றில் ஆயிரம் ஆண்டுகள் கருவிருந்து வாமன மூர்த்தியாக அவதரித்தார். மகாபலி நடத்திய யாகத்திற்கு சென்ற, வாமனர், அவரிடம் 3 அடி மண் கேட்டார். அதற்கு மகாபலியும் ஒப்புக் கொண்டார். ஒரு அடியால் பூமியையும், மற்றொரு அடியால் ஆகாயத்தையும் அளந்த வாமனப் பெருமாள், 3 - வது அடியை எங்கே வைக்க என்று கேட்டார். அதற்கு மகாபலி, 3 - வது அடியை தன் தலையில் வைக்கும்படி பணிந்து நின்றார். அவர் தலையில் கால் வைத்து பாதாளத்திற்குள் தள்ளினார் மகாவிஷ்ணு. ராஜகுமாரா! இத்தகைய பெருமைக்குரிய வாமன மூர்த்தி அவதரித்த இடம் இது. மிகவும் புனிதமானது என்றார், முனிவர்.

💫 அந்த சித்தாசிரமத்தில் பாம்பும் கீரியும், மயிலும் பாம்பும் பகையின்றி ஒன்றுபட்டு இருந்தன. மாமுனிவர், இராமா! இனி நான் யாகத்தை தொடங்குவேன், தாடகையின் அரக்கர்களை வதைத்து யாகத்தை நிறைவேற்றுவாயாக! என்று கூறி யாகத்தை தொடங்கினார். முனிவர்கள் பலர் யாகத்துக்கு உரிய திரவியங்களை சேகரித்து தந்து உதவினார்கள். வேதமந்திரங்களுடன் வேள்வி தொடங்கியது. இராமர் யாகசாலையில் தெற்கு வாசலிலும், இலட்சுமணர் வடக்கு வாசலிலும் வில்லேந்தி நின்று காவல் புரிந்தார்கள். தாடகையின் மக்களாகிய சுபாகுவும், மாரீசனும் ஆயிரம் அரக்கர்களுடன் வந்தனர். அந்த அரக்கர்கள் மாமிசத்தையும், கல்லையும், மண்ணையும் எரிந்து ஆரவாரம் செய்தார்கள். இராமர் சரக்கூடம் கட்டி யாகத்தில் தீய பொருள்கள் விழாத வண்ணம் செய்தார். சுபாகுவை ஒரு சிறந்த அம்பினால் இராமர் கொன்றார். மாரீசன் மீது ஓர் அம்பை ஏவினார். ஆனால் அந்த அம்பு கடலில் எறிந்தது. அவன் பாதாள உலகம் போய் இராவணனுடைய உதவி பெற்று உயிர்பெற்றான். இராமரும் இலட்சுமணரும் அரக்கர்களை வதைத்து மாய்த்தார். தேவர்களின் யாகம் ஐந்து நாள்கள் நடந்தது. யாகம் எவ்வித தடங்களும் இன்றி நிறைவேறியது. யாகம் முடிந்தபின் ஸ்நானம் செய்தார்கள்.

💫 விசுவாமித்திரர் இராமரை பார்த்து, இராமா! எல்லா உலகங்களையும் காத்தருளும் கடவுளாகிய நீ, இந்த வேள்வியை காத்தருளியதில் என்ன சிறப்பு! உன் புகழ் ஓங்குக ! என்று கூறினார்.

No comments:

Post a Comment