திருப்பாணாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்.
சோழ நாட்டின் உறையூரில் கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்.
இசைக்குப் பெயர்பெற்ற பாணர் குலம் காலக்கிரமத்தில் தீண்டாக்குலமானது. அக்குலத்தில் பாண் பெருமாள் எனும் பெயரோடு ஆழ்வார்கள் வரிசைக் கிரமத்தில் பதினோராம் ஆழ்வாராக பிறந்த இவர் திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். எனினும், தன் குலத்தின் பொருட்டு திருவரங்கத்தின் உள்ளே நுழைவதற்கும் அம்மண்ணை மிதிப்பதற்கும் அஞ்சி காவிரியின் மறுகரையில் இருந்தவாறே பண் இசைத்துத் திருவரங்கனை பாடிவந்தார். காவிரியிலிருந்து தண்ணீர் குடத்தோடு அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்யும் பொருட்டு விரைந்து வந்த லோகசாரங்கர் எனும் கோயில் பட்டர், வழியில் தன்னிலை மறந்து நின்றுகொண்டிருந்த பாணரைப் பலமுறை அழைத்தும் செவிமடுக்காததால் பாணர் விலகும் பொருட்டு ஒரு கல் கொண்டு எறிந்தார். அக்கல் அவரின் தலையில்பட்டு குருதிபெருக, அதைக்கவனியாது லோகசாரங்கர் தண்ணீரோடு அரங்கன் முன் சென்றார். பாணரின் பக்தியையும் உயர்வையும் உணர்த்த விரும்பிய இறைவன் இரத்தம் வடிந்த முகத்தினராய் லோகசாரங்கருக்கு காட்சி கொடுத்ததோடு, சாரங்கரரை, பாணரான திருப்பாணாழ்வாரைத் தனது தோளில் சுமந்து திருவரங்கத்துள் கொணர்ந்து தன் திருமுன் நிறுத்தும்படியும் ஆணையிட அவ்வாறே செய்தார். அதன் பொருட்டு பாணருக்கு "முனிவாகனன்" என்றும் "யோகிவாகனன்" என்றும் பெயர் ஏற்பட்டது.
திருவரங்கத் திருவான அரங்கன் முன் சென்று அவன் வடிவழகில் மயங்கி திருமுடி முதல் திருவடி வரை பாடியவர் "என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே" என்று பாடிய படி தன் பூத உடலோடு ஆண்டாள் போல அரங்கனோடு இரண்டறக்கலந்தார். இவர் பாடிய பத்துப்பாடல்கள் "அமலனாதிபிரான்" எனும் தலைப்போடு நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இவர் அரங்கன் மீது பாடிய பத்துப் பாடல்களும் அரங்கனின் திருவடியில் தொடங்கி தலை வரை உள்ள உறுப்புக்களான, பாதம், ஆடை, உந்தி, உதரபந்தனம், மார்பு, கழுத்து, வாய், கண்கள், உடல், தலை ஆகியவற்றின் வடிவழகையும் குணவழகையும் அற்புதமாக காட்சிப்படுத்துகிறது.
No comments:
Post a Comment