DSE - Our Demands
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு 22.06.2023
பெறுநர்
பள்ளிக் கல்வி இயக்குநர்,
பள்ளிக் கல்வி இயக்ககம்,
கல்லூரிச் சாலை, சென்னை.-6
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் - பள்ளிக் கல்வி – மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
மற்றும் அரசுமுதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில்
ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத சங்கங்களின்
பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் 22.06.2023 அன்று நடை
பெற உள்ளமை – கலந்து கொள்ளல் -கருத்து தெரிவித்தல் -சார்பாக.
பார்வை - தங்களின் கடிதம் ந.க. எண் 033707 /சி2/ இ1 2023 நாள் 15.06.2023
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம், தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு, அரசு பதிவு பெற்ற சேவை மனப்பான்மை கொண்ட ஒரு சங்கம் ஆகும். இச்சங்கத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் முதல் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் வரையிலும், தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து பணி நிலை ஆசிரியர்களும், கல்வி அலுவலக பணியாளர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
எமது சங்கமானது ஆசிரியர் நலன், மாணவர் நலன் மற்றும் சமுதாய நலனில் அக்கறை செலுத்துகிறது. பெருந்தொற்று கால கட்டத்தில் தமிழகம் முழுவதம் சேவைப் பணியில் ஈடுபட்டது. TNPSC தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து இவ்வாண்டில் 15 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எங்களின் கோரிக்கையான காலைச் சிற்றுண்டி திட்டத்தை நிறைவேற்றியமைக்கும், ஆதி திராவிடர் நலத் துறை, பழங்குடியினர் நலத்துறை, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் ஆகிய அனைத்தையும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டுவர சட்டமன்றத்தில் அறிவித்தமைக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது சங்கத்தின் பின் வரும் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகள்
1. கடந்த இரு ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு போதிய வகுப்பறைகள் உடனடியாக கட்ட நடவடிக்கை ஏற்பட வேண்டும். மாணவர் எண்ணிக்கைக்கு தக்கவாறு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு நிரப்பப் பட வேண்டும்.
2. மாணவர்கள் போதைப் பழக்கம், ஆசிரியரை அவமரியாதை செய்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.
3. மாணவர்களுக்கு உடல் நலம், மன நலம் சார்ந்து போதுமான அறிவு பெறும் வகையில் யோகா, நீதி போதனை, உளவியல் ஆலோசனை ஆகியவற்றிற்கு சிறப்புப் பயிற்சியாளரை நியமிக்க வேண்டும்.
4. தேர்ச்சி மட்டும் அல்லாமல் கற்றல் அடைவுகளை அடைதல் என்ற இலக்கை அடைய ஆசிரியர் மாணவர் விகிதம் 1:25 என அனைத்து நிலைகளிலும் நிர்ணயிக்க வேண்டும்.
5. மாநில எல்லைப் புற மாவட்ட மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக மூன்றாவது மொழியாக அவர்கள் விரும்பும் ஒரு மொழியை கற்பிக்க ஆவன செய்ய வேண்டும்.
6. ஏழை கிராமப் புற மாணவர்கள் பயன் பெறும் வகையில் மாவட்டந் தோறும் நவோதயா பள்ளிகள் துவங்க ஆவன செய்ய வேண்டும்.
7. விரைவில் அனைத்துப் பள்ளிகளுக்கும் 6-8 வகுப்பு வரை காலை சிற்றுண்டித் திட்டம் நடை முறைப் படுத்தப் பட வேண்டும்.
8. அனைத்து நாட்களிலும் முட்டை வழங்குவதை மாற்றி பழங்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
9. பொதுத் தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும் 75% வருகைப் பதிவு வேண்டும் என்று விதிமுறை வகுக்க வேண்டும்
10. மேல் நிலை வகுப்புகளில் உள்ளது போல் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கும் அனைத்துப் பாடங்களுக்கும் அகமதிப்பீடு 10 மதிப்பெண்கள் வழங்குதல் வேண்டும். இது 100 சதவீத பள்ளித் தேர்ச்சியை அடைய பெருந்தணையாக இருக்கும்.
11. 6-12 வகுப்பு வரை பாடச் சுமை மிகவும் அதிகமாக உள்ளது. இது குறைக்கப்பட வேண்டும். அகில இந்திய போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் NCERT பாடத் திட்டத்தோடு தமிழ்நாட்டுப் பெருமைகளை சேர்த்தாலே போதுமானதாக இருக்கும்
12. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் வரலாறு பாடத்துடன் கூடிய கலைப்பிரிவு துவங்கப்பட வேண்டும். எலைட் பள்ளிகளில் குடிமைப் பணித் தேர்வுக்கு தயாராகும் வகையில் வரலாறு அரசியல் அறிவியல் போன்ற பாடப் பிரிவுகள் செயல்பட வேண்டும்.
13. மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதன் பொருட்டு உயர்நிலைப் பள்ளித் தமையாசிரியர் நிலை பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு நிரப்பப் பட வேண்டும்.
14. அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு மைதான வசதி கட்டாயம் ஏற்படத்த வேண்டும். விளையாட்டில் குறு மைய அளவில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு அதை ஒரு பாடமாக கணக்கிட்டு மதிப்பெண் வழங்கி ஏதேனும் ஒரு பாடத் தளர்வு வழங்க வேண்டும்.
15. மாணவர்கள் வயதுக்கு ஏற்ற அனைத்து விதமான விளையாட்டுக் கருவிகளும் தரமானதாக பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
16. மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்குவதை எட்டாம் வகுப்பிலிருந்து வழங்கினால் ஆரோக்கியம் மேம்படும்.
17. பள்ளி மாணவர்களுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் குழுக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப் படுத்தி எதிர்பாராத மரணங்களுக்கு இழப்பீடு கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
18. அனைத்து வகுப்புகளிலும் மின்விசிறி, மின்விளக்கு பொருத்தி வெளிச்சமான காற்றோட்டமான வகுப்பறைகளை அமைக்க வேண்டும்.
19. ஆண்டு முழுவதும் தொடர்ந்து அறிவிக்கபடும் பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினாப் போட்டிகளும் அளவேயில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. கலைத் திருவிழாப் போட்டிகள் காலாண்டுத் தேர்வுக்கு முன்னரே முடிக்கும் வகையில் திட்டமிட வேண்டும்.
20. பள்ளிக்கல்வித்துறை ஆண்டு முழுவதும் பலவிதமான உறுதிமொழிகள் மாணவர்கள் எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை விட்டு மாணவர்கள் மனதில் பல நற்செயல்களைப் பதிவு செய்திட மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டத்தக்கது. ஆனால் இத்தகைய உறுதிமொழிகள் காலை வழிபாட்டுக் கூட்ட நேரத்திலேயே எடுக்கும் வண்ணம் அறிவுறுத்தினால் இடையில் பாடவேளைகள் பாதிப்படையாமல் இருக்கும். ஏனெனில் வழிபாட்டு கூட்டம் அல்லாத இடைப்பட்ட நேரத்தில் மாணவர்களை ஒன்று திரட்டி உறுதிமொழி எடுக்கப்படுகிறது. பெரும்பாலும் வெய்யில் அதிகமாக உள்ள நேரங்களில் எடுக்கப்படும் உறுதிமொழிகள் நேரத்தையும் பாதிக்கும். மாணவர்கள் உடல்நிலையையும் பாதிக்கும்.
21. மாதம் ஒருநாள் புத்தகப்பை இல்லாத நாளாக அறிவித்து மாணவர்களின் மற்ற திறன்கள் வளர்க்க ஆவன செய்ய வேண்டும்.
22. .மாணவர்களுக்கு திருக்குறள், ஆங்கில அகராதி, தமிழ் அகராதி நூல்கள் வழங்க வேண்டும்.
23. பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறை, குடிநீர் வசதி, விளையாட்டிடம் போன்ற உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.
24. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் மதிய சத்துணவு வழங்கப்பட வேண்டும்.
25. மாணவர்களின் சிகை அலங்காரம் சீருடை போன்றவற்றுக்கு நிலையான வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.
26. அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், இரவுக் காவலர், தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
27. தூய்மைப் பணியாளர்களை அந்தந்த உள்ளாட்சி பகுதிகளிலிருந்து அவுட்சோர்சிங் முறையிலேனும் உடனடியாக நியமிக்க வேண்டும். இவர்களின் ஊதியம் அந்தந்த மாதங்களில் வழங்கப்பட வேண்டும்.
ஆசிரியர் நலன் சார்ந்தவை:
1. பணிப்பாதுகாப்புச் சட்டம் உடனடியாக நிறைவேற்றி ஆசிரியர் நலன்களைப் பாதுகாக்க வேண்டும்.
2. பழைய ஓய்வூதியத்திட்டம் உடனடியாக நடைமுறை படுத்தப்பட வேண்டும்.
3. 29.07.2011 க்கு முன் பணியில் சேர்ந்த இடை நிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் TET தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்பதை உறுதியாக நிலைநிறுத்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
4. 16.11.2012 க்கு முன்பு பணி நியமனம் பெற்று சிறுபான்மையற்ற நிதி உதவிப் பள்ளிகளில் பணியாற்றும் 1500 ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்.
5. நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகை தாமதமின்றி வழங்கப்பட வேண்டும்.
6. நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு முன்போலவே வழங்க வேண்டும்.
7. நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு கண்டு காலியாக உள்ள 680 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் 425 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
8. ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டி தேர்வு நடத்த ஆவன செய்யும் அரசாணை எண் 149 ஐ ரத்து செய்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நேரடியாக நியமிக்க வேண்டும்.
9. CPD பயிற்சிகள் மற்றும் இதர பயிற்சிகள் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை என்பது மிகுந்த சிரமம் ஏற்படுத்துகிறது. இதை மாற்றி பள்ளி நேரம் நடப்பது போல் 4.30 மணிக்கு முடியும் வகையில் மாற்றி அமைக்க ஆவன செய்ய வேண்டும்.
10. EMIS மற்றும் இதர நலத்திட்டங்களுக்கு (scholarship, laptop etc...) தனியே ஒரு நலத்திட்ட உதவியாளரை நியமிக்க வேண்டும்.
11. சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் எனில் மாநிலம் முழுவதும் எழுத்துபூர்வமான இயக்குநர் அல்லது முதன்மைக் கல்வி அலுவலர் ஆணையின் பேரில் மட்டும் நடத்தப்பட வேண்டும்.
12. உள்ளூர் விடுமுறை விடுவதை முன்போலவே ஊர் மக்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப தலைமையாசிரியர் முடிவின் பேரில் விட அனுமதிக்க வேண்டும்.
13. ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணி மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும்
14. விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பணி வழங்கக் கூடாது அவ்வாறு வழங்கினால் ஈடு செய் விடுப்பு வழங்க வேண்டும்.
15. இன்றைய சூழலுக்கு ஏற்ப ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணிப்பொறிகளை ஒரு பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும் (முதல் கட்டமாக 9 மற்றும் 10 வகுப்புக்கு மட்டுமாவது நடத்தப் படல் வேண்டும்)
16. உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு முன்பு போலவே வழங்க ஆவன செய்ய வேண்டும்.
17. பகுதிநேர ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் பணியாற்றும் மாற்று திறன் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் சிறப்பு ஆசிரியர்கள் பணி நிரந்தரமாக்க வேண்டும்.
18. ஆய்வக உதவியாளராகப் பணிக்கு வந்தவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
19. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒன்பது முதுகலை ஆசிரியர் இருக்கும் வண்ணம் பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.
20. அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடத்தை உறுதி செய்தல் வேண்டும்
21. தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி பாடப்பிரிவு உருவாக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.
22. NHIS திட்டத்தை விரிவு படுத்தி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாலே காப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாநிலத் துணைத்தலைவர் மாநிலப்பொதுச் செயலாளர்
x
No comments:
Post a Comment