Wednesday, December 28, 2022

தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*

தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (27.12.2022, செவ்வாய்க்கிழமை) பள்ளிக்கல்வித்துறையை பாதுகாக்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர்  திரிலோகசந்திரன்  தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி, மாநில துணைத்தலைவர் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் முருகன் வரவேற்புரை வழங்கினார்.


பணி நிறைவு பெற்ற பின் ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்க திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பழக்கம் உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக வெளியிடவும், ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரியும், தமிழக முழுவதும் கடந்த 2012ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஆசிரியர்களை கல்வி சார்ந்த நிர்வாக ரீதியான பணிகளில் ஈடுபடுத்துவதை முற்றிலுமாக தவிர்த்து, கற்றல், கற்பித்தல் பணிகளில் மட்டும் ஈடுபடுத்துவதை உறுதிசெய்ய வேண்டும், பணியில் சேர்ந்த சிறுபான்மையற்ற அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவும், அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு வழங்கியது போல் ஜூலை 2022 முதல் முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்க வேண்டும் எனவும், 01.06.2009க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு சரி செய்யப்பட வேண்டும், மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப மும்மொழிக் கல்வித்திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தி, விருப்பப்படும் மூன்றாவது மொழியை கற்கும் வாய்ப்பை தனியார் பள்ளி மாணவர்களைப் போல அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும், அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பத்தாருக்கு குழு காப்பீடு திட்டம் வழங்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. மாநில, கோட்ட மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் பலர் இதனை வலியுறுத்தி பேசினார்கள்.


தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலிருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆசிரியைகள், கல்வித்துறை அலுவலர்கள், அரசுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மாநில இணைச்செயலாளர் ராகவன் நன்றியுரை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியை மாநில இணைச்செயலாளர் ராஜகோபால், மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் பூங்குழலி, மாநில ஊடகப்பிரிவு செயலாளர்  யுகபதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

No comments:

Post a Comment