தேசிய ஆசிரியர் சங்கம் – தமிழ்நாடு
மாநிலப் பொதுக் குழு கூட்டம் 2022
தீர்மானங்கள்
மாநிலப் பொதுக் குழு கூட்டம் 2022
தீர்மானங்கள்
தமிழக மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையிலும், வருங்கால இந்தியாவை வலிமையான நாடாக முன்னேற்றம் அடையச் செய்யவும் தேசிய கல்வி கொள்கை 2020 ஐ தமிழகத்தில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக ஊரக பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் தரமான தேசிய அளவிலான கல்வியைப் பெறுவதற்காக குறைந்த கட்டணத்தில் செயல்படும் நவோதயா பள்ளிகளை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பள்ளி என்ற வீதம் தமிழகம் முழுவதும் துவக்க அனுமதி அளிக்க வேண்டுகிறோம்.
பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்கள் காலை உணவு கிடைக்காமல் தவிர்ப்பதால் நாள் முழுவதும் கல்வியில் கவனம் செலுத்த முடியாமலும், போதிய உடல் வளர்ச்சி இல்லாமலும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையை சீராக்க தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை வேளையில் பால் மற்றும் சிற்றுண்டி வழங்க வேண்டும்.
அரசுப்பள்ளி மாணவர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கான குழு காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு துவக்கிட வேண்டும்.
அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஊக்க ஊதிய நிறுத்தம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முழுவதும் ரத்து செய்து பழைய முறையிலேயே ஆசிரியர்கள் அனைவருக்கும் ஊக்க ஊதியம் அளிக்க வேண்டும்.
சிறுபான்மையற்ற நிதி உதவி பெறும் பள்ளிகளில் கடந்த பத்து ஆண்டுகளாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (TET) எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து அவர்களுக்கு உரிய ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் ஊக்க ஊதியங்களை அனுமதித்து பணி வரன்முறை செய்வதற்கான அரசாணையினை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்.
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சமூக விரோதிகளால் அவ்வப்போது தாக்கப்படும் நிலையினை தடுக்க அரசு மருத்துவர்களுக்கு உள்ளது போன்று பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்றவேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு மற்றும் 01.06.2009 க்கு பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினையும் சரி செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி ஆதிதிராவிட நலப்பள்ளிகள் பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் பள்ளிகள் அனைத்தையும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் ஒரே நிர்வாகத்தில் கொண்டுவர செய்வதன்மூலம் சிறப்பான நிர்வாகம் நடைபெறும் இதற்குரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
ஜூலை 2021 முதல் மத்திய அரசு வழங்கி வரும் அகவிலைப்படி உயர்வை, ஜூலை 2021 முதல் தமிழக ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் அறிவித்து நிலுவை தொகையினை பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்க வேண்டும்.
ஈரோடு மாவட்டம் - தாளவாடி போன்ற மலைப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான மலைவாழ் படி அனுமதித்து ஆணை பிறப்பிக்க வேண்டும். மேலும் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே பேட்டை, பள்ளிப்பட்டு போன்ற பகுதிகளில் வழங்கப்பட்டுவரும் வீட்டு வாடகை படி சொற்பமான அளவிலே உள்ளது. அதனை அதிகரித்தும் தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையான போக்குவரத்து படியான ரூபாய் 900/- ஐ போக்குவரத்துக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் உயர்வு காரணமாக ரூபாய் 3000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment