Pages

Wednesday, November 8, 2023

RAMAYANAM PART 110

 இராமாயணம் தொடர் 110

இராவணன் அனுமனுடன் சண்டையிடுதல்!...

🌟 இராவணனின் அம்புகளுக்கு வானர வீரர்கள் பலர் இரையாயினர். இராவணனது வில் திறமையை கண்ட இலட்சுமணன் இவனை என் அம்புகளுக்கு இரையாக்குவேன் என விரைந்து வந்தான். அங்கு வந்த இலட்சுமணன் தன் வில்லின் நாணை இழுத்து ஒலி எழுப்பினான். அங்கு அனுமனின் உடலில் பல அம்புகள் துளைத்து கீழே வீழ்ந்து கிடைப்பதை கண்டான். உடனே இலட்சுமணன் அம்புகளை ஏவி பல அரக்கர்களை அழித்தான். அரக்கர் படைகளும் இலட்சுமணனை சூழ்ந்து தாக்கத் தொடங்கினர். அரக்கர்கள் இவன் இராவணனை நெருங்கி விடக்கூடாது என்று உறுதி கொண்டு இலட்சுமணனை எதிர்த்து போரிட்டனர். அரக்கர்கள் வீசிய அம்புகளை இலட்சுமணன் தகர்த்து எறிந்தான். கட்டுக்கடங்காத அம்புகள் இலட்சுமணனின் உடலில் நுழைந்தது. இலட்சுமணன் தனித்து நின்று அரக்கர்களை அழிப்பதைக் கண்ட இராவணன் கடுங்கோபம் கொண்டு தேரை செலுத்தி இலட்சுமணனின் அருகில் வந்தான்.

🌟 தன் முன் வந்து நின்ற இராவணனை பார்த்த இலட்சுமணனுக்கு கோபம் அதிகமானது. இலட்சுமணன் இராவணனை பார்த்து, அன்னை சீதையை காவல் புரிந்த என்னை வஞ்சனையால் கவர்ந்துச் சென்ற நீ என்னிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது என்றான். பிறகு இலட்சுமணன் அம்புகளை இராவணன் மீது எய்தினான். இராவணனும் இலட்சுமணன் மீது அம்புகளை எய்தினான். தன் அம்புகளால் இலட்சுமணன், இராவணனை செயல் இழக்கும் படி செய்தான். இராவணன் இலட்சுமணனின் அம்புறாத் துணியை அறுத்தெறிந்தான். அப்பொழுது அனுமன் எழுந்து, இராவணா! இப்பொழுது நாம் முஷ்டி யுத்தம் புரிவோம் என்றான். பிறகு அனுமன் தனது விஸ்வரூபத்தை எடுத்து நின்றான். அனுமன் இராவணனை பார்த்து, இராவணா! வா! என்னை எதிர்த்து சண்டையிடு என்றான். இராவணனும் துணிச்சலோடு சண்டைக்கு எதிர்த்து நின்றான்.

🌟 அனுமன் இராவணனிடம், நான் குத்தும் ஒரு குத்துக்கு உன்னால் தாக்கு பிடிக்க முடியுமா? ஒரு குரங்கின் வலிமையை நீ பார்த்திருக்க மாட்டாய். இன்று நீ காண்பாய் என்றான். பிறகு அனுமன், இராவணா! உன் மார்பில் நான் ஒரு குத்து குத்துவேன். நீ பிழைத்துக் கொண்டால் என் மார்பில் குத்து, நான் பிழைத்துக் கொண்டால் இனி உனக்கும் எனக்கும் போர் புரிய நிலைமையில்லை என்றான். இராவணன் அனுமனின் வீர வசனங்களை கேட்டு, அனுமனே உன் வீரத்திற்கு நிகர் எவரும் இல்லை. நான் உன் முஷ்டி யுத்தத்திற்கு சம்மதிக்கிறேன். அனுமனே ஒரு மாவீரனோடு போரிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இனி நான் போர் புரிய தேவையில்லை. வா! என்னை வந்து குத்து என மார்பைக் காட்டி நின்றான். அனுமன் இராவணனிடம், நான் உன் வீரத்தை பாராட்டுகிறேன் என்றான்.

🌟 பிறகு அனுமன் ஆராவாரம் செய்து தன் கண்களை அகல விரித்து தன் கையின் ஐந்து விரல்களை பலமாக மடக்கி இராவணனின் கவசம் அணிந்த உடல் சிதறும்படி இராவணனின் மார்பில் ஓங்கி குத்தினான். அனுமன் குத்தினால் மலைகள் பெயர்ந்து விழுந்தன. இதனைப் பார்த்த அரக்கர்கள் மூர்ச்சித்து கீழே விழுந்தார்கள். மலைகள், பாறைகள், மரங்கள் எல்லாம் நிலைகுழைந்து போயின. இதைப்பார்த்த தேவர்கள் நடுங்கி போனார்கள். வானர வீரர்களும் நிலைகுழைந்து போனார்கள். அனுமனின் குத்தினால் இராவணனுக்கு உயிர் போய் உயிர் வந்தது. அவனது கண்களிலிருந்து தீ வெளிப்பட்டது. நிலை தடுமாறினான். பிறகு தன் உணர்வை பெற்ற இராவணன் அனுமனிடம், உனக்கு நிகர் எவரும் இல்லை. இதுவரை நான் அடையாத துன்பத்தை எனக்கு காட்டி விட்டாய். எனக்கு நிகரான வலிமை உன்னிடம் இருக்கிறது. நீ சிறந்த வீரன் என்பதையும் அறிந்துக் கொண்டேன். இப்பொழுது நான் உன் மார்பில் குத்துகிறேன் என்றான்.

தொடரும்...

No comments:

Post a Comment