Pages

Wednesday, November 8, 2023

RAMAYANAM PART 109

 இராமாயணம் தொடர் 109

இராவணன் போருக்கு செல்லுதல்!...

தூதர்கள் சொன்ன செய்தியைக் கேட்டு, இராவணனின் முகம் தீ போல் சிவந்தது. இராவணன், பிரஹஸ்தனைக் கொன்றவன் யார்? என கோபத்துடன் கேட்டான். அதற்கு தூதர்கள் பிரஹஸ்தனை கொன்றது, வானர படைத்தலைவன் நீலன் என்றார்கள். இந்திரனையும் வென்ற பிரஹஸ்தன் மிகுந்த பலம் கொண்டவன். இவ்வளவு பலம் கொண்ட பிரஹஸ்தனை, கேவலம் ஒரு குரங்கு கொன்றுவிட்டதா! என மனதில் நினைத்து புலம்பினான். கோபம் இராவணனின் தலைக்கேறியது. உடனே அவன் போருக்கு தயாராகி, ஆயிரம் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறினான். இத்தேர், இந்திரன் போரில் தோற்றபோது இராவணனுக்குக் கொடுத்த தேர். அதிரும்படி ஒலி எழுப்பும் தேர். இத்தேர் விண்ணுலகுக்கும் சென்று வரும் வலிமை பெற்றது. இராவணன் தான் வணங்கும் ருத்ரனை மனதால் வணங்கி, தன் வில்லை கையில் எடுத்து அதில் நாணைப் பூட்டி ஒலி எழுப்பினான்.

பிறகு அவன் தன்மார்பில் கவசத்தை அணிந்துக் கொண்டு தும்பைப்பூவை மாலையாக கழுத்தில் அணிந்துக் கொண்டான். இராவணன் போருக்கு தேவையான ஆயுதங்களை எடுத்துக் கொண்டான். ஏவலர்கள் இராவணனின் தலைக்குமேல் வெண்கொற்ற குடையை பிடித்துக் கொண்டனர். முரசுகள் முழங்கின. இதனைப் பார்த்து தேவர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர். இராவணனின் தேரில் வீணைக்கொடி பறந்தது. இராவணன் முதல் நாள் போருக்கு புறப்பட்டான். இராவணனின் கண்களில் தீப்பொறி பறக்க அவன் போர்க்களத்திற்கு வந்துச் சேர்ந்தான். இராவணன், கோபத்தோடும், படைகளோடும் போருக்குப் வந்தச் செய்தியை ஒற்றர்கள் இராமனிடம் ஓடிச் சென்று தெரிவித்தனர். இராமர், போர்க்கோலம் பூண்டு, தன் கோதண்டத்தையும், வில்லையும், அம்புறாத் துணியையும் கட்டிக் கொண்டு, தும்பை மாலை சூடிக் கொண்டு புறப்பட்டார். இலட்சுமணனும், இராமனோடு போர்க்கோலம் பூண்டு இராவணனை போரில் சந்திக்க புறப்பட்டான்.

எதிரெதிராக அரக்கர் சேனையும், வானர சேனையும் போருக்குத் தயாராக நின்றனர். போர் தொடங்கியது. அரக்கர் சேனையும், வானர சேனையும் மிகக் கடுமையான போரில் ஈடுபட்டனர். இதற்கு காரணம் வானர படைகளுக்கு இராமர் தலைமை வகித்துப் போரிடுவதும், அரக்கர் படைக்கு இராவணன் தலைமை வகித்துப் போரிடுவது தான் இந்த கடுமையான போருக்கு காரணம். போரில் வானர வீரர்கள் மிகக் கடுமையாகப் போர் புரிந்தனர். ஒரு புறம் வானர படை வீரர்கள் மற்றொரு புறம் அரக்க படை வீரர்கள் கடுமையாக போர் புரிந்தனர். போரில் மாண்டவர்கள் பலர். இதனால் அந்த இடம் இரத்த பூமியாக தென்பட்டது. காணும் இடமெல்லாம் பிணங்களாக தெரிந்தன. இராவணன் தன் வில்லில் நாணை பூட்டி அம்புகளை எய்த தொடங்கினான். அப்போது சுக்ரீவன் அங்கு வந்து இராவணனை தடுத்து நிறுத்தி போர் புரிய தொடங்கினான். இருவருக்கும் இடையில் மிகக் கடுமையாக போர் நடந்தது. இராவணனின் பலமான தாக்குதலை தாக்கு பிடிக்காமல் சுக்ரீவன் மயங்கி கீழே விழுந்தான்.

இதைப் பார்த்த அனுமன் அங்கு வந்தான். இராவணா! பலம் இருந்தால் என்னிடம் வந்து போரிடு என்றான். பிறகு அனுமன் தன் பக்கத்தில் இருந்த பெரிய மரம் ஒன்றை பிடுங்கி இராவணன் மீது வீசினான். இராவணன் அம்மரத்தின் மீது ஓர் அம்பை ஏவி அதை தூள் தூளாக்கினான். அனுமன் மறுபடியும் ஒரு மலையை பிடுங்கி இராவணனை நோக்கி எறிந்தான். ஆனால் இராவணன் அதை தடுக்கும் முன்பு மரம் அவனது தோளை தாக்கியது. இதனால் பெருங்கோபம் அடைந்த இராவணன் அம்புகளை அனுமன் மீது எய்தினான். இராவணன் எய்திய அம்புகள் அனுமனின் உடலை துளைத்தது. ஆனால் அனுமன் அதை பொருட்படுத்தாமல் போர் புரிந்தான். அனுமன் மறுபடியும் ஒரு மரத்தை பிடுங்கி இராவணனை நோக்கி எறிந்தான். ஆனால் அந்த மரம் இராவணனின் தேரோட்டியின்மேல் விழுந்து பல அரக்கர்களை கொன்றது. உடனே வேறோரு தேரோட்டி தேரில் ஏறி தேரைச் செலுத்தினான். இராவணன் ஆயிரமாயிரம் அம்புகளை வானர படைகள் மீது எய்தினான். இதனால் பல வானரங்கள் மாண்டனர்.

தொடரும்...

No comments:

Post a Comment