Pages

Monday, August 28, 2023

RAMAYANAM PART 42

இராமாயணம் தொடர் 42

இராவணன் சீதையை தூக்கிச் செல்லுதல்!

✨ இலட்சுமணர் வேதனைப்பட்டு மிகவும் உள்ளம் உடைந்தார். தான் அன்னையை தனியாக விட்டுச் சென்றால் ஆபத்து நேரிடுமோ என பயந்து கொண்டு சென்றார். பிறகு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் ஜடாயு பெரியப்பா காத்தருள்வார் என மனதை தேற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றார். இராமர் சென்ற வழியில் சென்றார். குடிலின் வாசலில் இராமனுக்காக எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தாள் சீதை. இலட்சுமணன் அவ்விடத்தை விட்டு மறைந்ததும், அங்கு மறைந்திருந்த இராவணன், ஒரு முனிவனை போல் தன் உருவத்தை மாற்றிக் கொண்டு, இராமனின் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தான். சீதையின் அழகை பார்த்து, இவளை பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். சூர்ப்பனகை சொன்னதைவிட இவள் மேலும் அழகாக உள்ளாள் என மனதில் நினைத்துக் கொண்டான்.

✨ இராவணன் தோற்றத்தில் உடல் நடுக்கம் கொண்ட ஒரு முனிவரைப் போல தோன்றினான். ஒரு முனிவர் தம் ஆசிரமத்திற்கு வந்திருப்பதை பார்த்த சீதை, உடனே கண்ணீரை துடைத்துக் கொண்டு இன்முகத்துடன் முனிவரை வரவேற்றாள். உள்ளே அழைத்து அமரச் செய்தாள். முனிவருக்கு சீதை உணவளித்தாள். இருந்தபோதிலும் சீதை வாயிலை பார்த்து ஸ்ரீ இராமர் வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தாள். முனிவன் சீதையிடம், நீ யார்? மிருகங்கள் வசிக்கும் இந்த வனத்தில் நீ தனியாக என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? என வினவினான். சீதை, முனிவரே! நான் தசரத புதல்வரின் மனைவி. ஜனக மன்னரின் புதல்வி, சீதை.

✨ நான் தவசிகளை தெய்வமாக எண்ணுகிறேன். தாங்கள் யார்? தாங்கள் எங்கு இருந்து வந்துள்ளீர்கள்? எனக் கேட்டாள். முனிவன் தன்னை பற்றி மெல்ல மெல்ல பேச ஆரம்பித்தான். இராவணன் இலங்கையை ஆள்பவன். நற்குணமுடையவன். தேவர்கள் அனைவரும் அவனுக்கு கீழ் வேலை செய்கிறார்கள். அவன் வீரத்திற்கு நிகர் எவரும் இல்லை. அவன் உயர்ந்த பண்புகள் உடையவன். மிகவும் நல்லவன் எனக் கூறினான். இதைக் கேட்ட சீதை, முனிவரே! தாங்கள் தீயவனை நல்லவன் என்று கூறுகின்றீர்கள். என் கணவர் இராவணன் முதலிய அரக்கர்களை அழிக்க உறுதி கொண்டு உள்ளார். சீதை இராமனின் வீரத்தை புகழ்ந்து கூறினாள். இதைக் கேட்ட இராவணனுக்கு மிகுந்த கோபம் உண்டானது.

✨ முனிவன், இராவணன் மிகுந்த சக்தியும் வலிமையும் படைத்தவன் என்று தன் வீரத்தை புகழ்ந்து பேசி இராமனை இகழ்ந்து பேசினான். இராவணன் உன்னை விரும்புகிறான். நீ அவனுக்கு மனைவியாக வேண்டும் என்று கூறி தன் மாய வடிவத்தை நீங்கி பத்து தலைகளுடன் அசுர வடிவுடன் நின்றான். சீதை அவனை பார்த்து அஞ்சி நடுங்கினாள். பெண்ணே! என்னை பார்த்து பயப்பட வேண்டாம். இதுவரை என் தலைகள் யாரையும் வணங்கியது இல்லை. என் பத்துத் தலைகளில் இருக்கும் கிரீடங்களைப் போல நான் உன்னை என் தலைமீது வைத்துப் போற்றுவேன். நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றான். இதைக் கேட்ட சீதை காதுகளை பொத்திக் கொண்டாள்.

✨ அரக்கனே! உன் உயிரை காப்பாற்றிக் கொண்டு உடனே இங்கிருந்து செல். என் கணவன் வந்தால் உன்னை உயிருடன் விடமாட்டார் என அவன் மீது சீறினாள். இராவணனுக்கு பெருங்கோபம் உண்டானது. அவன் சீதையை வலுகட்டாயமாக இழுத்துக் கொண்டு தன் புஷ்பரக விமானத்தில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து பறந்து சென்றான்.

No comments:

Post a Comment