Pages

Monday, August 28, 2023

RAMAYANAM PART 41

 இராமாயணம் தொடர் 41

சீதையை கவர்ந்த பொன் மான்!

💫 என் தாய் தாடகையும் இராமனால் தான் மாண்டு போனார். தம்பி சுபாகுவும் இராமனால் தான் மாண்டு போனார். ஆனால் நான் மட்டும் உயிர் தப்பி பிழைத்து விட்டேன். அதை நினைத்தால் இன்றும் கூட என் உடல் நடுங்குகிறது. விராதன் பற்றி தெரியாதவர் யாரும் இல்லை. அத்தகைய விராதனையை இராமன் வீழ்த்தினான். இராமனை எதிர்ப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அது உன் உயிருக்கே எமனாக வரும். நான் சொல்வதை கேள் என்று அறிவுரை கூறினார் மாரீசன். அதற்கு இராவணன், அந்த அற்ப மனிதர்களை கண்டா நீங்கள் பயப்படுகிறீர். சீதையை நான் அடைந்தே தீர வேண்டும். உன் அறிவுரை ஒன்றும் தேவையில்லை. நான் சொல்வதை மட்டும் கேள். இல்லையேல் உன்னை கொன்று விடுவேன் என எச்சரித்தான்.

💫 இராவணனுக்கு பயந்த மாரீசன், நீ சொல்வதை நான் கேட்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்று சொல் என்றான். மாமா! பெண்களுக்கு அழகான பொருட்கள் மீது தான் ஆசை. ஆதலால் நீ பொன் மானாக அவள் முன் செல்ல வேண்டும். சீதை இராமனிடம் அந்த மான் வேண்டும் என்று வேண்டுவாள். இராமனும், இலட்சுமணனும் மானை பிடிக்க செல்வார்கள். நான் அந்த சமயத்தில் சீதையை அங்கிருந்து கவர்ந்து செல்வேன் என்றான். இதைக்கேட்ட மாரீசனின் நெஞ்சம் துடிதுடித்தது. இராவணா! என் தாய் இறந்த அன்றே நான் இறந்திருக்க வேண்டியவன். நான் கடலில் விழுந்து தப்பித்து விட்டேன். இன்று என் உயிருக்கு எமனாக நீயே வந்துள்ளாய். அசுர குலம் அழிவது நிச்சயம். நீயும் அழிவது நிச்சயம் என்று கூறினான்.

💫 பிறகு இருவரும் புஷ்ப ரதத்தில் பஞ்சவடியை அடைந்தார்கள். இராவணன் இராமனின் பர்ணசாலையை காண்பித்தான். பிறகு இராவணனின் ஆணைப்படி மாரீசன் அழகிய பொன் மான் வடிவம் எடுத்தான். அங்கிருந்து இராமர் தங்கியிருக்கும் பஞ்சவடிக்கு சென்றான். அங்கு சீதை பூக்களை பறித்து கொண்டு இருந்தாள். மாய மான் சீதையின் கண்களில் தெரியும்படி ஓடியது. மாய மானை பார்த்த சீதை அந்த மானின் அழகில் மயங்கினாள். கண்ணிமைக்காமல் அந்த மானை பார்த்து கொண்டு இருந்தாள். உடனே அவள், இராமனையும், இலட்சுமணனையும் அழைத்து பொன் மானை காண்பித்தாள். அந்த மானை பார்த்த இலட்சுமணருக்கு இது மாரீசனாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்தது. மாரீசன் மாய வேலைகள் செய்து பலரை ஏமாற்றுபவன் என்பது இராம இலட்சுமணருக்கு தெரியும்.

💫 சீதை அந்த மான் எனக்கு வேண்டும் என கேட்டாள். சீதையின் ஆசையை நிறைவேற்ற இராமர் மானை பிடிக்க கிளம்பினார். அப்போது இலட்சுமணர், அண்ணா! வனம் வந்த நமக்கு காட்டு மான் எதற்கு? அது மட்டுமின்றி காட்டு மான்கள் பொன் வடிவத்தில் இருக்குமா? இந்த மான் ஏதாவது ஒரு மாயமாக கூட இருக்கலாம். நாம் ஒரு சமயம் தாடகையை வதம் செய்தபோது மாரீசன் என்னும் அரக்கன் தப்பி பிழைத்து விட்டான். ஒரு வேளை இந்த மாய வேலை அவனுடையதாக கூட இருக்கலாம் என்றார். இதற்கு இராமர், தம்பி! நமக்கு தெரியாமல் உலகில் எத்தனையோ விஷயங்கள் உண்டு. அதில் ஒன்று இந்த மானாக கூட இருக்கலாம். அது மட்டுமின்றி எனக்காக நாட்டையும், வீட்டையும் விட்டு என்னை நம்பி வந்த உன் அண்ணி சீதையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.

💫 சீதை, நீங்கள் இருவரும் இப்படி விவாதம் செய்து கொண்டு இருந்தாள் அந்த மான் ஓடி விடும். உடனே சென்று மானை பிடித்து வாருங்கள் என்றாள். இலட்சுமணர், அண்ணா! அரக்கர்கள் நம்மை சூழ்ந்து இடர் செய்து வருகிறார்கள். இந்த பொன் மான் அரக்கன் மாரீசனாக தான் இருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது என்றார். சீதை எனக்கு அந்த பொன் மான் வேண்டும் என்று அடம் பிடித்தாள். இராமர், இலட்சுமணா! இந்த பொன் மான் மாரீசனாக இருந்தால் அக்கணமே அவனை கொன்று விடுவேன். நீ சீதைக்கு பாதுகாப்பாக இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு தன் கோதண்டத்தை எடுத்துக் கொண்டு மானின் பின் சென்றார்.



No comments:

Post a Comment