Pages

Friday, August 11, 2023

RAMAYANAM PART 13

 இராமாயணம் தொடர் பகுதி 13

இராமர் சீதை காதல்

💕 மூவரும் மிதிலையை நோக்கி புறப்பட்டார்கள். மலர் சோலைகளும், கல்வி கூடங்களும், செல்வ மாடங்களும் நிறைந்து அழகுடன் காட்சி தரும் மிதிலை மாநகரத்திற்குள் நுழைந்து, அரச வீதியில் மூவரும் சென்றார்கள். விசுவாமித்திரன் முன்னே நடக்க, ராமனும் லட்சுமணனும் பின்னால் வருகிறார்கள். சிறிது நேரத்தில், அவர்கள் அரண்மனையை நெருங்குகிறார்கள். கன்னிமாடத்தில் தாதியர்கள் சூழ தங்க சிலை போல் சீதாதேவி நின்று கொண்டிருந்தாள். இராமர் அக்குல மகளை பார்த்தார். சீதாதேவியும் இராமனை பார்த்தாள். பார்த்த நொடியில் சீதா தேவியின் உள்ளத்தில் இராமரும், இராமர் உள்ளத்தில் சீதா தேவியும் குடி புகுந்தனர். இருவரின் உள்ளங்கள் ஒன்றிணைந்தது. 

💕 இராமர், என் மனதை பறித்த இப்பெண்மகள் யார்! என்ன பெயர்! முழுமதியை போன்ற அழகிய முகமும், கூர்மையான கண்களும், தாமரை இதழ் போன்ற உதடுகளும் என் உள்ளத்தை கொள்ளை கொண்டன. அவள் என் மனதை உருக்குகின்றாள். இது பூர்வ ஜென்ம பிறப்பின் தொடர்பினால் ஏற்பட்ட சந்திப்பா! என்று எண்ணினார். அத்தெரு வளைவில் மூவரும் மறைந்தனர். 

💕 சீதாதேவி, இவர் மன்மதனோ! என் உள்ளத்தில் குடியிருந்த நாணம், மடம் முதலிய குணங்கள் போன வழி தெரியவில்லையே! இவர் என் கண்ணில் நுழைந்து மனதை களவு செய்துவிட்டார். அந்த முனிவர் சிறிது மெதுவாக சென்றிருந்தால் அந்த சுந்தரனை இன்னும் கொஞ்ச நேரம் பார்த்து இருப்பேன். ஆனால் இவர் எனக்கு கணவனாக வரவேண்டும் என்றால் அறுபதினாயிரம் பேர் தூக்கவேண்டிய சிவதனுசை தூக்க வேண்டுமே! கண்களுக்கு தெரியாமல் விண்ணில் இருக்கும் தேவர்களே! முனிவர்களே! இந்த வீதி வழியாக செல்லும் சுந்தரனின் கையால் சிவதசை பூமாலைப் போல் வளையுமாறு செய்தால் நான் உங்களுக்காக 14 ஆண்டு வனவாசம் செய்வேன் என்று பிரார்த்தனை செய்து கொண்டாள். 

💕 பொழுது போன படியால் ஜனக மகாராஜாவின் கட்டளைப்படி மூவரையும் வரவேற்று விருந்தினர் மாளிகையில் தங்க வைத்து உபசரித்தனர். அயோத்தியிலிருந்து மிதிலாபுரிக்கு 450 மைல், 14 நாள் கடந்து வந்து சேர்ந்தார்கள். நெடுந்தூரம் பயணம் செய்ததால் விசுவாமித்திர முனிவர் அயர்ந்து தூங்கினார். இளைய பெருமாளும் நன்கு உறங்கிவிட்டார். ஆனால் இராமருக்கோ தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தும் இராமருக்கு தூக்கம் வரவில்லை சீதையே நினைத்து படுத்து கொண்டு இருந்தார். மனமே! இன்று மாலை மாடிமேல் நின்ற அழகிய பெண்மணியை கண்டு காதல் கொண்டேனே! இது சரிதானா? ஆனால் எனக்கு அவள் முகம் மட்டுமே தெரிந்தது. அவள் திருமண ஆனவளாக இருந்தால் இது பெரும் பாவம் ஆகிவிடுமே. மறுகணமே தன்னைதானே சமாதானம் செய்து கொண்டார். நான் எந்தப் பெண்களைப் பார்த்தாலும் என் தாயாகவே பார்ப்பேன். இதுவரை நல்வழியில் போகும் என் மனம் அல்வழியில் போனதில்லை. இன்று நான் இந்தப் பெண்ணைப் பார்த்துக் காதல்வயப்படுகிறேன் என்றால், அவள் எனக்கெனப் பிறந்தவளாகதான் இருக்கவேண்டும். குற்றம் செய்யாத என் மனம் அவளை விரும்பியதால் அவள் கன்னியாகத்தான் இருக்கவேண்டும் என்று முடிவு செய்து உறங்கினார். 

💕 மறுநாள் காலை சந்தியா வந்தனங்களைச் செய்துவிட்டு மூவரும் வேள்விச்சாலைக்கு சென்றார்கள். ஜனகர் அவர்களை வரவேற்று ஆசனங்களில் அமர வைத்து உபசரித்தார். ஜனகர் விசுவாமித்திர முனிவருடைய இருபுறங்களிலும் இளம் சூரியனைப்போல் பிரகாசித்து கொண்டு இருக்கும் இராமரையும், இலட்சுமணரையும் பார்த்து, குருநாதா! இக்குமாரர்கள் யார்? என்று வினாவினார். விசுவாமித்திரர் மன்னரே! இவர்கள் தசரதச் சக்ரவர்த்தியன் குமாரர்கள். இவன் இராமன் இலக்குமணன். 

💕 நீ வைத்து இருக்கும் வில்லையும் வளைக்கும் பேராற்றல் படைத்தவர்கள். இராமர் தாடகையைக் கொன்று நான் செய்யும் வேள்வியை முடித்துக் கொடுத்தார். பெருநீதி உடைய போன்ற பரதனை கைகேயி பெற்று எடுத்தாள். சிறந்த வீரர்களாகிய இலட்சுமணனையும், சத்ருக்கனனையும் சுமித்திரை பெற்றெடுத்தாள்

No comments:

Post a Comment