Pages

Friday, August 11, 2023

RAMAYANAM PART 12

 இராமாயணம் தொடர் 12


ஓடக்காரனின் சாமர்த்தியம்..!!


💫 நீ யார்? உன் பெயர் என்ன? என்று கேட்டனர். அவன் நான் வீரப்பன் என்றான். நான் ஒரு ஓடக்காரன். நான் பரம்பரையாக ஓடம் செலுத்துபவன். நாங்கள் அக்கறைக்கு போக வேண்டும். ஓடம் கிடைக்குமா எனக் கேட்டனர். இந்த ஓடத்தில் எத்தனை நபர் ஏறலாம். ஓடத்தில் அறுபது நபர் போக வேண்டும். நீங்கள் மூவர் தான் வந்து இருக்கின்றீர்கள். அப்படி என்றால், நாங்கள் மீதம் 57 நபர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டுமா? தாங்களோ இந்த உலகத்தை காக்கும் தெய்வங்கள். உங்களை நான் ஒருபோதும் காக்க வைக்கமாட்டேன்.


💫 விசுவாமித்திரர் ஓடத்தில் ஏறினார். இராமர் ஏறும்பொழுது மீனவன், பச்சை! பச்சை! ஓடத்தில் ஏறாதே! இதனை கேட்ட இராமர் தூக்கிய காலை கீழே வைத்துவிட்டார். இலட்சுமணருக்கு பெரும் கோபம் உண்டாயிற்று. தம்பி இலட்சுமணா! அவன் பரம்பரையாக ஓடம் செலுத்துபவன் பச்சையாக இருக்கும் என்னைப் பச்சை என்று அழைத்தால் என்ன, அவனுக்கு சொந்தமான ஓடத்தில் கால் வைக்காதே என்று சொல்லுவதற்கு அவனுக்கு உரிமை உண்டு அல்லவா? இராமர், மீனவனே! நான் ஏன் ஓடத்தில் ஏறக்கூடாது என்றாய். ஐயா! தங்களை நான் ஏற்றிக்கொள்ள மாட்டேன். ஆனால் என் மேல் கோபத்தில் உள்ள சின்ன ஐயாவை ஏற்றிக்கொள்வேன். மீனவனே! நாங்கள் அயோத்தியை ஆளும் தசரத சக்ரவர்த்தியின் மக்கள்.


💫 இதைக்கேட்டவுடன் அம்மீனவனின் உள்ளம் துடித்து, கண்ணீர் மல்க வணங்கி, என்னை மன்னித்து அருள வேண்டும் இராம மூர்த்திகளே! தாங்கள் பிறந்த அன்று எங்களுக்கு அன்னமும் ஆடையும் வழங்கினார்கள். தங்களுக்கு ஒரு கோடி வணக்கங்களை நான் செலுத்துகிறேன். ஆனால் தாங்கள் மட்டும் ஓடத்தில் கால் வைக்கவேண்டாம். இராமர் ஏனப்பா! நான் ஏறக்கூடாது. ஐயனே! நாங்கள் இளமையில் அதில் சருக்கும்பாறை விளையாடுவோம். அந்தக் கல்லில் தங்கள் கால் பட்டவுடனே அது பெண்ணாக மாறிவிட்டது. இந்த ஓடத்திலும் கல்லும், மரமும், இரும்பும் இருக்கின்றன. தாங்கள் கால் வைத்தவுடன் ஓடம் பெண்ணாக மாறிவிட்டால் நான் என்ன செய்வது.


💫 அப்பா மீனவனே! நான் கால் வைத்தால் ஓடம் பெண்ணாகாது. அப்படி என்றால் தாங்கள் நதியில் இறங்கி சுத்தமாக காலைக் கழுவிவிட்டு ஏறுங்கள். இராமர் நதியில் இறங்கிக் கால் கழுவச் சென்றார். மீனவன், ஐயனே! கால் கழுவும் பணியை எனக்கு கொடும். நான் சுத்தமாய் தேய்த்துவிடுகிறேன் என்று கூறி, இராமருடைய பாதங்களை செம்பு தாம்பாளத்தில் வைத்து, ராம ராம என்று கண்ணீரும் பன்னீரும் விட்டு அபிஷேகம் செய்தான். காட்டு மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தான்.


💫 பெருமானே உன் பாத பூஜைக்காக மகரிஷிகள் பல காலம் தவம் இருக்க, தவம் செய்யாத இந்த அடியேனுக்கு முதல் பாத பூஜை கிடைத்தது என்று துதி பாடி வழிபாடு செய்தான். இராமர், தம்பி இலட்சுமணா! நமது பாதபூசைக்காக தான் இவ்வாறு செய்தான். மீனவன், இராமா! நீங்கள் சுத்தம் செய்த இந்த நீரை கீழே விட்டால் கற்களெல்லாம் பெண்களாகிவிடும். அதனால் என் மனமாகிய கல் பெண்ணாகட்டும் என்று கூறி தலையில் ஊற்றிக்கொண்டான்.


💫 பிறகு மூவரும் ஓடத்தில் ஏறினார்கள். அவன் பகவானுடைய கீதத்தைச் சொல்லியபடியே ஓடத்தை செலுத்தினான். மூவரும் ஓடத்தை விட்டு இறங்கிய பின் இராமர் தன் கையிலிருந்த நவரத்தின மோதிரத்தை பரிசாக தந்தார். மீனவன் அதை வாங்க மறுத்தவிட்டான். இராமச்சந்திர மூர்த்தி! நீயும் ஓடக்காரன், நானும் ஓடக்காரன். ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளியிடம் இனாம் வாங்க கூடாது. நான் இந்த நதிக்கு ஓடம் விடுபவன். தாங்கள் பிறவிப் பெருங்கடலுக்கு திருவடி ஆகிய ஓடத்தை விடுபவர் என்று கூறி, இராமர் மலரடிமீது வீழ்ந்து வணங்கினான். மீனவனின் அன்பைக் கண்டு இராமர் உள்ளம் உருகினார். பிறகு மூவரும் மிதிலையை நோக்கி புறப்பட்டார்கள்.

No comments:

Post a Comment