Pages

Saturday, June 8, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 10 !!!

 திரு ஆயர்பாடி, மதுரா மாவட்டம், உத்திரபிரதேசம்

ஆயர்பாடி என்றும் ஆய்ப்பாடி என்றும் கோகுலம் என்றும் அழைக்கப்படும் இத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய மூவரால் பாடல்பெற்ற தலம் இதுவாகும். இந்த கோகுலம் என்னும் ஆய்ப்பாடி மதுரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 மைல் தொலைவில் உள்ளது.

இத்தலம் பற்றியும், கோகுலம் பற்றியும் ஸ்ரீமத் பாகவதம் உட்பட எண்ணற்ற வடமொழி நூல்கள் எடுத்தியம்பியுள்ளன. துவாபரயுகத்தில் திருமாலின் அவதாரமான கண்ணன் குழந்தைப்பருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன் சின்னஞ்சிறு சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம் எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் பாடியுள்ளனர்.
இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நவமோகன கிருஷ்ணன் என்ற பெயரில் காட்சி தருகிறார். இறைவி ருக்மணி தேவி, சத்திய பாமா ஆகியோர். இதன் விமானம் ஹேம கூட விமானம் என்னும் அமைப்பினைச் சேர்ந்தது.
இங்கு யமுனை நதி ஓடுகிறது. இங்கு கோகுல் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடம் தான் உண்மையான கோகுலப் பகுதி என்று சொல்லப்படுகிறது.புராண்கோகுல் என்று அழைக்கப்படும் இந்தப் பழைய கோகுலத்தில் யமுனை நதிக்கரையில் ஒரு தலம் அமைந்துள்ளது. இங்கு நந்தகோபர், யசோதை, பலராமர், மற்றும் தொட்டில் கிருஷ்ணன் ஆகியோருக்கு மரத்தினால் செய்யப்பட்ட மூர்த்திகள் உள்ளன.

சிறைச்சாலையில் தேவகி மைந்தனாகப் பிறந்த கண்ணன் இந்த ஆயர்பாடியில் உள்ள நந்த கோபர் வீட்டிற்கு வந்த நாளை ஆண்டுதோறும் இங்கு விழாவாக நந்தோற்சவம் என்ற பெயரில் இன்றும் கொண்டாடுகின்றனர். இன்றும் ஜன்மாஷ்டமியின் மறுநாள் (கோகுலாஷ்டமியின் மறுதினம்) இதே பெயரில் இந்த உற்சவம் வடநாட்டிலும், பிற முக்கிய தலங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கௌடில்யா மடத்தில் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் மிக்க சிறப்புடன் தற்போதும் நடத்தப்பட்டு வருகிறது.



No comments:

Post a Comment