Pages

Saturday, May 25, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 8 !!!

  அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் கோயில் திருவெள்ளறை -  திருச்சி


இத்திருக்கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.சோழ நாட்டு நான்காவது திருத்தலம். இத்திருக்கோவில் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.இங்கு செந்தாமரைக்கணன் (புண்டரீகாக்ஷன்) என்ற திருநாமம்த்தில் எம்பெருமான் எழுந்தருளியுள்ளார்.
புண்டரீகாக்ஷன் - செந்தாமரைக் கண்ணன், நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம். சக்கரம்- ப்ரயோக சக்கரம்.

மூலஸ்தானத்தில் மூலவர் பெருமாளை தவிர ஏழு மூலவர்கள் உள்ளனர். மேலே பெருமாளின் வலது பக்கம் சூரியனும் இடது பக்கம் சந்திரனும் பெருமாளுக்கு சாமரம் வீசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு கீழே பெருமாளின் வலது பக்கம் கருட பகவானும் இடது பக்கம் ஆதிசேஷனும் மனித ரூபத்தில் நின்றுக்கொண்டு பெருமாளை சேவித்த படி இருக்கின்றனர். கீழே அமர்ந்தபடி பெருமாளின் வலது பக்கம் மார்க்கண்டேய மஹரிஷி மோட்சத்திற்காக தவம் புரிந்துக்கொண்டு இருக்கிறார் இடது பக்கம் பூமாதேவி தாயார் உலக நன்மைக்காக தவம் புரிந்துக்கொண்டு இருக்கிறார். இவர்களுக்கு நடுவில் மூலவர் பெருமாள் பெரிய உருவத்துடன் இருக்கிறார். அவருக்கு கீழே ஒரே சிம்மாசனத்தில் உற்சவர் செந்தாமரைக் கண்ணனும் பங்கஜவல்லி தாயாரும் உள்ளனர்.இத்தலம் மிகவும் தொன்மையான தலங்களில் ஒன்றாகும். திருவரங்கத்திற்கும் பழமையானது என்பதாலேயே ஆதிவெள்ளறை என்றும் அழைக்கபடுகிறது. வெண்மையான பாறையினால் ஆன மலை எனப்பொருள்பட வெள்ளறை எனப்படுகிறது. திரு என்பது உயர்வை குறிக்குமாதலால் ‘திருவெள்ளறை’ என அழைக்கப்படுகிறது.திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள்ளாகவே அமைந்துள்ளன.எங்குமில்லாத வகையில் இக்கோயிலில் உத்தராயண வாசல் என்றும் தக்ஷிணாயன வாசல் என்றும் இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தக்ஷிணாயன வாசல் வழியாகவும் கோயிலில் பெருமானைத் தரிசிக்கச் செல்ல வேண்டும். இத்தல பெருமாளை பெரியாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.இக்கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனின் ஐந்தாம் ஆண்டில் (கி.பி 805) தொடங்கி மூன்றாம் நந்திவர்மன் சோழர்கள், விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் என பல காலகட்டங்களில் இந்த கோயில் ஆக்கம் பெற்றுள்ளதை அவர்கள் காலத்தின் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. மதுராந்தக உத்தம சோழனின் எட்டாம் ஆண்டு கல்வெட்டுகளில் இந்த கோயில் "பெரிய ஸ்ரீ கோயில்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயிலில் இருக்கும் கிணறு பல்லவ மன்னன் தந்திவர்மனால் உருவாக்கப்பெற்றது. இது மாற்பிடுகு பெருங்கிணறு என்று அழைக்கப்பெறும். இந்தக் கிணற்றுக்கு அருகில் இருக்கும் ஒரு கல்வெட்டு ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் என்ற தலைவன் தன் அரசன் நந்திவர்மன் பட்டபெயரான மாற்பிடுகு என்ற பெயரில் "மாற்பிடுகு பெருங்கிணறு" என்று தோற்றுவித்தான். இந்த கிணற்றின் பக்கசுவற்றில் ஒரு கல்வெட்டு பாடல் ஆலம்பாக்கத்து கம்பன் அறையனால் பொறிக்கப்பெற்றுள்ளது.




No comments:

Post a Comment