Pages

Saturday, May 4, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 5 !!!

 

அருள்மிகு ஶ்ரீ பூவராகசுவாமி கோயில் ஶ்ரீமுஷ்ணம்


 கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூவராக சுவாமி  கோவிலில் 10 ஆம் நூற்றாண்டின் இடைக்கால சோழர்களின் ஆட்சி காலத்தில் திருப்பணிகள் இருந்தன. பின்னர் தஞ்சை நாயக்க மன்னரான அச்சுதப்ப நாயக்கரால் விரிவாக்கபட்டது. கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சிற்றாலயங்களையும் குளத்தையும் உள்ளடக்கி கருங்க்கல்லாலான பெரிய மதில் சுவர் அமைந்துள்ளது. கோயிலின் நுழைவாயில் ஏழு நிலை இராஜகோபுரம் உள்ளது.

கோயிலில் தினசரி ஆறுகால பூசைகளும், ஆண்டு விழாக்கள் மூன்றும் நடத்தப்படுகின்றன. அவற்றில் தேர் திருவிழா, தமிழ் மாதமான வைகாசியில் (ஏப்ரல்-மே) நடத்தப்படுகிறது. இது மிக முக்கியமான விழாவாகும். இந்த திருவிழாவானது பிராந்தியத்தின் சமய நல்லினக்கத்தைக் குறிக்கிறது - தேரில் கட்டப்படும் கொடி முஸ்லிம்களால் வழங்கப்படுகிறது; அவர்கள் கோவிலில் இருந்து பிரசாதம் கொண்டுவந்து மசூதிகளில் அல்லாவுக்கு வைக்கிறார்கள். இந்த கோயில் தமிழக அரசின் இந்து சமய அற நிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. அர்த்த மண்டபம் வரை முஸ்லிம்கள் வழிபட அனுமதிக்கப்பட்ட சில கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.
இரண்யாட்சன் என்றொரு அசுரன், பூமாதேவியையே எடுத்துச் சென்று கடலுக்கு அடியில் சிறை வைத்து விடுகிறான். இந்தப் பூமகளைக் காக்க திருமாள் பன்றி உருவில் தோன்றிக் பாய்ந்து அரக்கனைக கொன்று பூமாதேவியை மீட்கிறார். அந்த அரக்கனின் வியர்வைத் துளி விழுந்து இத்தலத்தில் குளம் உருவானது என்கின்றனர். இறக்கும் தருவாயில் அரக்கன் தன் திசையை நோக்குமாறு கூறுகின்றான். இதனால் இத்தலத்தில் உள்ள வராகர் அவனது ஆசையை நிறேவேற்ற தன் முகத்தை தெற்கு நோக்கி திருப்பியபடி இருக்கிறார். அதேசமயம் அவரது உடல் பகுதி மேற்கு நோக்கியபடி உள்ளது. மேலும் பூதேவி கோரியபடி பூவராகர் தன் கைகளில் சங்கு சக்கரத்தை வைத்துக்கொண்டு காட்சியளிக்கிறார்.ஒரு நவாப் தனக்கிருந்த நோய் நீங்க யக்ஞ வராகரை வேண்டிக் கொள்ள, அப்படியே நோய் நீங்க, அதன்பின் அந்த நவாப் பூவராக சாஹேப் என்ற பெயருடன் வாழ்ந்தார் என்று ஒரு கர்ண பரம்பரை வரலாறு கூறுகிறது. அவர் ஏற்படுத்திய மானியம் இன்றும் இருக்கிறது, இந்தக் கிள்ளையிலே. சமுத்திர தீரத்திற்குச் செல்லு முன் யக்ஞ வராகர் முகமதியர் பிரார்த்தனை ஸ்தலமான மசூதி பக்கம் போய் அவர்கள் செய்யும் மரியாதைகளையும் ஏற்றுக் கொள்கிறார்.
வைணவத் தலங்களுக்குள் இத்தலம் ஒரு தனிச்சிறப்பானது. சுயம்புலிங்கம் போல, சிற்றுளி கொண்டு செய்யப்படாது தானாகவே தோன்றிய தலங்கள் எட்டு என்பர். அவை திருரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், ஸாளக்கிராமம், நைமி, சாரண்யம், வானமாமலை, புஷ்கரம், நாராயணம் என்றும் கூறுவர். இவற்றையே வடமொழியில் 'ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம்' என்பர். அதில் ஒன்றாக இக்கோயில் உள்ளது.
இக்கோயில் பிரும்மாண்டமான கோயில். மூன்று மதில்களால் சூழப்பட்டிருக்கின்றது. இன்று இருப்பது இரண்டு மதில்களே. மூன்றாவது மதில் சிதைந்து அதன் அடையாளங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. கோயில் வாயிலை 150 அடி உயரமுள்ள ஒரு ராஜகோபுரம் அழகு செய்கிறது. இக்கோபுர வாயிலிலே துழைத்த உடனே கோபுரத்தின் மேலே கிழக்கு நோக்கியவராய் வேங்கட வாணன் இருப்பதைக் காட்டுவர். இத்தலத்தில் கோபுரத்தில் உள்ள வேங்கடவனை முதலில் தரிசித்த பின்னரே பூவராகனை சேவிக்க வேண்டும் என்பது இத்தலத்தின் சம்பிரதாயம் ஆகும்.
இது கடலூரிலிருந்து 90 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த இரயில் நிலையம், 20 கிமீ தொலைவில் உள்ள விருத்தாச்சலம் ஆகும். இதன் கிழக்கில் சிதம்பரம் 36 கிமீ; மேற்கில் காட்டுமன்னார்கோயில் 25 கிமீ; வடக்கில் விருத்தாச்சலம் 20 கிமீ; தெற்கில் ஜெயங்கொண்டம் 24 கிமீ; கும்பகோணம் 53 கிமீ தொலைவில் உள்ளது.



























No comments:

Post a Comment