Pages

Thursday, January 18, 2024

RAMAYANAM PART 162

 இராமாயணம் தொடர்....162

சீதையை அழைத்து வரச் செல்லும் விபீஷணன்!

விபீஷணன் இராமரிடம் இருந்து விடைப்பெற்று அசோகவனம் நோக்கிச் சென்றான். விபீஷணன் அசோக வனத்தில் இருக்கும் சீதையை வணங்கி, சீதையின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். அப்பொழுது அருகில் இருந்த திரிசடை சீதையிடம், அம்மா சீதை! இவர் தான் என் தந்தை என அறிமுகம் செய்து வைத்தாள். விபீஷணன் சீதையிடம்! தாயே! எம்பெருமான் இராம சந்திர மூர்த்தி தங்களை காண விரும்புகின்றார். தேவர்களும் தங்களை தொழுவதற்காக எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் ஸ்ரீராமர் தங்களுக்கு ஆடை ஆபரணங்கள் கொடுத்து அலங்கரித்து அழைத்து வரச் சொல்லி கட்டளையிட்டுள்ளார் எனக் கூறினான். இதைக்கேட்ட சீதை விபீஷணனிடம், அன்பனே! நான் ஆடை ஆபரணங்கள் இன்றி தவ கோலத்திலேயே வர விரும்புகிறேன்.

நான் இத்தனை நாட்கள் உண்ணாமலும், உறங்காமலும், தவ செய்த கோலத்தை அவர்கள் காண வேண்டாமா? அதனால் நான் தவக் கோலத்திலேயே வருகிறேன் எனக் கூறினாள். விபீஷணன், அன்னையே! இது எம்பெருமான் ஸ்ரீராமனின் கட்டளை. இதை எவ்வாறு மீறுவது? எனக் கேட்டான். பிறகு சீதை, இது எம்பெருமானின் கட்டளை என்பதால் சரி என சம்மதித்தாள். அதன் பின் விபீஷணன் சீதையை அலங்கரித்து வரச் சொல்லி தேவ மாதர்களுக்கு கட்டளையிட்டு அங்கிருந்துச் சென்றான். பிறகு இரம்பை, ஊர்வசி, மேனகை முதலிய தேவ மாதர்கள் சீதையை நறுமண நீரால் குளிர்வித்து, நறுமண தைலங்கள் பூசி, ஆடை ஆபரணங்களால் அழகாய் அலங்கரித்தனர். அதன் பின் சீதையை பல்லக்கில் ஏற்றி இராமர் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.

சீதையை பார்க்க தேவர்களும் முனிவர்களும் அங்கு வந்த கூடினர். வானர வீரர்கள் சீதையைப் பார்த்து பணிந்து நின்றனர். சீதை இராமரை பார்த்து தரிசித்தாள். சீதை பல்லக்கில் இருந்து இறங்கி இராமரை வணங்கி, கண்களில் கண்ணீர் தழும்ப அவரின் திருவடியில் விழுந்து வணங்கினாள். இராமரும் சீதையை கருணைக்கொண்டு அன்பாக நோக்கினார். ஆனால் சீதையை நோக்கிய மறு நிமிடத்தில் இராமரின் முகத்தில் கருணையும் தென்படவில்லை, அன்பும் தென்படவில்லை. இராமரைப் பொருத்தவரை அவருக்கு சீதை மேல் பரிபூரணமான நம்பிக்கை உண்டு என்றாலும், மாற்றானின் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என்றதொரு சந்தேகம் அவருக்கு வரவே, அவர் சீதையை மறுபடியும் மனைவியாக ஏற்றுக்கொள்வதில் ஒரு மனத்தடை ஏற்பட்டது. அதனால் இராமரின் கண்களில் கோபம் சீற்றமாய் நிறைந்திருந்தது.

இராமர் சீதையைப் பார்த்து, ஜானகி! நீ நலமாக இருக்கின்றாயா? நான் உன்னை அரக்கர்களின் சிறையில் இருந்து மீட்கவே இவ்வளவு பெரிய யுத்தத்தை செய்தேன். உன்னை மீட்பதற்காக நான் கடலில் அணை கட்டினேன். ரகு குலத்தில் பிறந்த நான், என் மனைவியை அரக்கர்கள் கவர்ந்து சென்றார்கள் என்னும் பழியை தீர்க்கும் பொருட்டே இத்தகைய மிகப்பெரிய யுத்தத்தை வெற்றிகரமாக முடித்தேன். ஜானகி! நீ இராவணனின் சிறையில் நெடுநாள் இருந்திருக்கிறாய். உனக்கு அங்கு நல்ல உணவுகள் கிடைத்திருக்குமே? அரக்கிகளுடன் சேர்த்து மாமிசம் உண்டாயா? மது அருந்தினாயா? நீதி தவறிய அரக்கனின் நகரில் அவனுக்கு அடங்கி நீ உயிர் வாழ்ந்து இருக்கிறாய்.

தொடரும் ...

No comments:

Post a Comment