Pages

Monday, January 1, 2024

RAMAYANAM PART 151

 இராமாயணம் தொடர்....151

அசுரப்படைகளை கண்டு வானரங்கள் பயப்படுதல்!

⚩ மகோதரன் கூறியதைக் கேட்டு இராவணன் திரும்பிச் சென்றான். இராவணன் தன் ஏவலாட்களிடம் உலகில் உள்ள அரக்கர்கள் அனைவரும் இங்கு வர வேண்டும் என கட்டளையிட்டான். இராவணனின் கட்டளைப்படி உலகில் உள்ள அரக்கர்கள் இலங்கையை வந்தடைந்தனர். இராவணனின் தூதர்கள், இராவணனுக்கு படைகளை அறிமுகம் செய்தனர். இவர்கள் சாகத் தீவினர், இவர்கள் குசைத் தீவினர் என அங்கு வந்த ஆயிரம் ஆயிரம் படைகளை அறிமுகம் செய்தான். இவர்கள் அனைவரும் மேரு மலையை தூள்தூளாக்குவர். இவர்களால் முடியாத செயல் என்பது எதுவும் கிடையாது என்றனர். பிறகு இராவணன் அங்கிருந்துச் சென்று அரண்மனையின் கோபுரத்தின் மேல் நின்று அரக்கர்களின் எண்ணிக்கையை பார்த்தான்.

⚩ அதன் பின் இராவணன் படைத்தலைவர்களை அழைத்து, இப்போர் ஏற்பட்டதற்கான காரணத்தை விவரமாக கூறினான். அவனுக்கு சீதை மீது ஏற்பட்ட காதலை பற்றியும் கூறினான். அதற்கு அப்படைத்தலைவர்கள், மனிதர்களிடமும், வானரங்களிடமும் போரிடவா எங்களை அழைத்தீர்கள் என்றனர். அப்பொழுது வன்னி என்னும் தலைவன். அந்த மனிதர்கள் யார்? உங்களை காட்டிலும் அவர்கள் வலிமையானவர்களா? எனக் கேட்டான். அப்போது மாலியவான் அவர்களிடம், அவர்கள் வானரங்கள் என்று அலட்சியம் செய்யாதீர்கள். அவர்களில் ஒருவன் இங்கு வந்து அசோக வனத்தை அழித்து, இலங்கை நகரையும் தீமூட்டிவிட்டு சென்றுவிட்டான். அது மட்டுமின்றி பிரம்மாஸ்திரத்தால் வீழ்ந்தவர்களை சிறு பொழுதில் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து அவர்களை உயிர்பித்துவிட்டான்.

⚩ இராமன் திருபாற்கடலை கடைந்த வாலியைக் கொன்றவன் என்றான். இதிலிருந்து ஒரே வழி சீதையை விடுவிப்பது தான் என்றான். ஆனால் அதற்கு வன்னி என்பவன், அரசனின் தம்பிமார்களும், மகன்களும் மாண்டபின் சீதையை விடுவிப்பது தவறு. எதிரிகளை வென்று காண்பிப்பது தான் சிறந்தது என்றான். பிறகு அவன் இராவணனைப் பார்த்து, வேந்தனே! இவ்வளவு நடந்த போதிலும் தாங்கள் ஏன் போருக்குச் செல்லவில்லை எனக் கேட்டேன். அதற்கு இராவணன் முதல் நாள் போரில் தோற்றதைக் கூறாமல், எனக்கு மனிதர்கள் மீதும், குரங்குகள் மீதும் போர் செய்ய கேவலமாக இருந்தது என்றான். பிறகு படைத் தலைவர்கள், நாங்கள் செல்கிறோம். இன்றுடன் போர் முடிந்துவிட்டது என எண்ணிக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு சென்றனர். 

⚩ போருக்குச் செல்ல படைகள் தாயாராயின. அந்தப் படைகள் மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை. இவற்றில் மூலப்படையே தொன்மையானது என அவர்கள் நாங்களே செல்கிறோம் எனக் கூறிவிட்டுச் சென்றனர். மூலப்படையைக் கண்ட வானரங்கள் பயந்து ஓடி ஒளிந்தனர். நீலனும், அங்கதனும் வானரங்களை தடுத்து நிறுத்தி யாரும் பயப்பட வேண்டாம் எனக் கூறினர். அதற்கு வானரங்கள், அங்கே பாருங்கள்! அங்கு வருபவர்கள் எல்லாம் அசுர சேனைகள். உலகத்தை அழிக்கும் ஆற்றல் படைத்தவர்கள். இவர்களுடன் போர் புரிய ஆயிரம் இராமர் வந்தாலும், இலட்சுமணன் வந்தாலும் முடியாது. நாம் உயிர் வாழ்வதற்கு மலைகளும், குகைகளும் உள்ளது. பசியாற காய், கனிகள் இருக்கிறது எங்களுக்கு அது போதும் என நடுநடுங்கக் கூறினார்கள்.

தொடரும்...!

No comments:

Post a Comment