Pages

Wednesday, January 17, 2024

மனம் கவரும் அழகிய திருச்சி சுற்றுலா தலங்கள் - சிறப்புத் தொகுப்பு !!!

 திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் 'சிரா' என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. "சிரா" துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்குப் பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் திருச்சிராப்பள்ளி, திரு-சிலா-பள்ளி (பொருள்: "புனித-பாறை-ஊர்)" எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. வேறு சில அறிஞர்கள் "திரு-சின்ன-பள்ளி" (புனித-சிறிய-ஊர்) என்பதிலிருந்தும் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தினைக் கொண்டுள்ளனர்.

1. திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில்

 திருச்சி மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது இந்த மலைக்கோட்டையாகும். இது அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது. நிலவியல் அடிப்படையில், இப்பாறை ஒரு பில்லியன்  ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையானது. இம்மலைக் கோட்டையுள் அமைந்துள்ள கோயில்கள் உச்சிப் பிள்ளையார் கோயில், சிவன் கோயில்கள் ஆகும். இக்கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளின் களமாக இருந்துள்ளது. இதற்குள் பல்லவர் காலக் குடைவரைக் கோயில் ஒன்றும், நாயக்கர் காலக் கோட்டை ஒன்றும் உள்ளன. இக்கோட்டை, நாயக்கர்களுக்கும் பிஜாப்பூர், கர்நாடகம், மராத்திய ஆகிய அரசுகளுக்கும் இடையே இடம்பெற்ற பல போர்களைக் கண்டுள்ளது. இந்தியாவில் பிரித்தானியப் பேரரசு காலூன்றுவதற்கு அடிப்படையாக அமைந்த கர்நாடகப் போர்களில் இக்கோட்டை முக்கிய பங்கு வகித்துள்ளது.

2. அருள்மிகு அரங்கநாதர் கோவில் ,ஸ்ரீரங்கம்

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்  108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராசகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987-ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. சோழ நாட்டு காவிரி ஆற்று கரையில் அமைந்துள்ள முதல் திவ்விய தேச தலம்.

திருவரங்கம் கோவிலைப் பாதுகாத்து, திருப்பணிகள் புரிய 1966-இல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) இக்கோயிலுக்குத் தொழிநுட்ப உதவி அளிக்க முடிவு செய்தது. 

3. அருள்மிகு கமலவல்லி  நாச்சியார் சமேத அழகிய மணவாளர் கோவில், உறையூர்

உறையூர் அழகிய மணவாளர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் சோழ நாட்டு இரண்டாவது திருத்தலம் ஆகும். இது திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் அமைந்துள்ளது. இத்தலம் திருஉறையூர் (திருக்கோழி) என்ற பெயரில் புராண காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலம்.சோழ நாட்டு அரண்மனை யானை இங்கு வந்தபோது கோழி ஒன்று யானையைத் தாக்கி ஓடச் செய்ததால் கோழியூர் என்ற பெயர் ஏற்பட்டு அது பின்னர் திருக்கோழி என அழைக்கப்பட்டது.

4.அருள்மிகு ஜம்புகேசுவரர் கோவில்,திருவானைக்காவல்

புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.

சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையைத் தேவையற்றதாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையைத் தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையைச் சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.

சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60-ஆவது சிவத்தலமாகும்.

5.அருள்மிகு மாரியம்மன் கோவில்,சமயபுரம்

மூலவரான மாரியம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி இருக்கிறார். பெருவளை வாய்க்கால் மற்றும் மேற்கே உள்ள மாரி தீர்த்தம் (தெப்பக்குளம்) இக்கோயிலின் தீர்த்தங்களாகும். இக்கோயிலின் தல மரம் வேப்ப மரமாகும்.அம்மனை வழிபட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலத்தவரும், பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சித்திரைத் தேர்த்திருவிழா, ஆடி வெள்ளி, பூச்சொரிதல் விழா போன்ற விழாக்காலங்களிலும் கூட்டம் அதிகமாகிறது. ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். குறிப்பாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாகவும், தொடர்ந்து அங்கு அம்மன் கோயில் உருவானதாகவும் கூறப்படுகிறது. வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், அங்கிருந்த ஜீயர் சுவாமிகள், அச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவருடைய ஆணைப்படி வைணவியின் சிலையை அப்புறப்படுத்த வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்று சற்று தூரத்தில் தற்போதுள்ள இனாம் சமயபுரம் என்னுமிடத்தில் இளைப்பாறினார்கள். பிறகு அதனை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து தற்போதுள்ள மாரியம்மன் கோயில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றனர். அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்த கிராம மக்களைக் கூட்டிவந்து அதற்கு ”கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபடத் தொடங்கினர். அக்காலகட்டத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோயில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே வெற்றி பெறவே, கோயிலைக் கட்டினார்கள். விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் பொ.ஊ. 1706-ல் அம்மனுக்குத் தனியாக கோயில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று, ”சமயபுரம் மாரியம்மன்” கோயிலாக மாறி புகழ்பெற்று விளங்குகிறது.

6. அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், குணசீலம்

குணசீலம் என்பதின் பெயர் கௌனம் (பொருள் குணமாகும்) மற்றும் "சீலம்" என்பதிலிருந்து பெறப்படுகிறது, அதாவது நோய் குணப்படுத்தப்படும் இடம். "குணம்" என்பது குணங்கள் மற்றும் "சீலம்" என்பதன் அர்த்தம் "குறைந்த நிலைப்பாட்டைக் கொண்டது" என்பதாகும். எனவே குணசேலம் என்பது விஷ்ணு கீழே வந்து, தனது பரலோக நிலைப்பாட்டிலிருந்து பக்தர்களின் பிரச்சினைகளைக் குறிப்பிடுகிறார்.பவிஷிய புராணத்தில், குணசீல மகாத்மியத்தில் இந்த கோயிலின் முக்கியத்துவத்தை ஒருவர் குறிப்பிடுகிறார். தாலிபியா மகரிஷி மற்றும் அவரது சீடரான குணசீல ரிஷி ஆகியோர் இமயமலைக்குச் சென்றனர். குணசீல ரிஷி திருப்பதியில் தங்கியிருந்தார். இது வெங்கடாசலபதியை மிகவும் கவர்ந்தது. குணசீலத்தில் இறைவன் தோன்றி, பக்தர்களை ஆசீர்வதிப்பார். காவிரியில் குளித்துவிட்டு குணசீலத்தில் தனது ஆசிரமத்தில் கடுமையான தவம் செய்தார். அவரது நேர்மை இறைவனை ஈர்த்ததால், தேவியுடன் சேர்ந்து அவருக்கு முன்பாக தோன்றினார். காளி யுகம் முடிவடையும்வரை இங்கு தங்குவதாக வாக்குறுதி அளித்தார். பிரசன்ன வெங்கடாசலபதி தரிசன மகிழ்ச்சியுடன், குணசீல மகரிஷி தனது ஆசிரமத்தில் இருந்து தனது அன்றாட பூசைகளை இங்கு பக்தர்களுக்கு வழங்கினார். திவாதார யுகத்தின் முடிவில் குணசீல ரிஷி தினசரி பூஜைகளைத் தொடர தனது இளம் சீடரை நியமித்தார். எனினும், காவேரியில் பெருவெள்ளம் ஏற்பட்டதால் சீடர் அந்த இடத்தை விட்டு வெளியேறினார், இதனால் பூஜைகள் திடீரென முடிவுக்கு வந்தது. இறைவன் குழிக்குள் மறைய முடிவு செய்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, சோழ மன்னன் நயன் வர்மன், இந்த இடத்தை தலைநகராக உரையூருடன் ஆட்சி செய்தவர், குணசீலத்திற்கு வழக்கமாக வருகை தருவார். ஒவ்வொரு நாளும், மாடுகளை பன்றியின் அருகே இருந்து பசுக்களைப் பாலாக்கிவிட்டு, பால் முழுவதும் அவரது கோட்டிற்கு மீண்டும் கொண்டு செல்வார்.குணசீலம் ஆலயத்தின் முழுமையான புனரமைப்புடன் கூடுதலாக, தமிழ்நாடு அரசு உரிமத்தின் உத்தியோகபூர்வ முத்திரை கொண்ட மனநல சுகாதார மறுவாழ்வு மையத்தை அறக்கட்டளை அமைத்துள்ளது. இம்மையம் தனிப்பட்ட அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் கொண்டது. ஒவ்வொரு வாரமும் ஒரு மனநல மருத்துவர் மையத்திற்கு வருகிறார். தினசரி அடிப்படையில் இந்த மனநிலை சவாலான மக்களை கவனித்துக்கொள்ளும் தொண்டர்கள் உள்ளனர். 48 நாட்களுக்கு உச்சிகாலம்(நண்பகல்) மற்றும் அர்த்தசாமத்தின்(இரவு) போது ஒவ்வொரு நாளும் இந்த மனச்சோர்வுடைய மக்கள் மீது புனித நீர் தெளீக்கபடுகிறது. அவர்கள் உண்மையாகவே தங்கள் வேண்டுகோள்களை இறைவனிடம் பிரார்த்தித்து, இந்த வழிமுறையை பின்பற்றினால், குணமடைவார்கள் என்று நம்புகிறார்கள். இன்று இது நம்பிக்கை மற்றும் நவீன சிகிச்சையின் கலவையாகும்.

7. கல்லணை

கல்லணை (Grand Anicut) இந்தியாவின் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இந்த அணை கரிகால் சோழனால் பொ.ஊ. முதலாம் நூற்றாண்டில் காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் உள்ள கல்லணை - தோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி ஆறு முக்கொம்பில் வடபுறமாக கொள்ளிடம், தென்புறமாக காவிரி என இரண்டாகப் பிரிகிறது. இவ்விடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டுள்ளது. காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடையில் திருவரங்கம் ஆற்றுத்தீவு உள்ளது. அங்கிருந்து காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. அங்கு காவிரி ஆறானது உள்ளாறு (கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரிகிறது. உள்ளாறு (கொள்ளிடம்) மீண்டும் கொள்ளிடத்தில் இணைகிறது. காவிரி இவ்வாறு பிரியுமிடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.

பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ளக் காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணீர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் (முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்த கிளை ஆறு) திருப்பி விடப்படும். எனவே தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.

இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் பொ.ஊ. முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.

கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, மற்றும் உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால் சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும்.

8. முக்கொம்பு

கர்நாடகாவின் தலைக்காவிரியாக உருவெடுத்து ஒற்றைக் காவிரியாக வரும் ஆறானது‌ இவ்விடத்தில் (முக்) மூன்று (கொம்பு) முனை இவ்விடத்தில் மூன்று முனையிலும் ஆறாக பிரிவதால் முக்கொம்பு எனப் பெயர் பெற்றது.

9.ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா

தமிழ்நாடு அரசு வனத்துறையின் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பில் உள்ள இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா வெப்ப மண்டல வண்ணத்துப் பூச்சிகளுக்கான காப்பகமாகும். வண்ணத்துப்பூச்சி இனங்களை பாதுகாக்கவும் அவற்றின் எண்ணிக்கையை பெருக்கும் நோக்கிலும் இயற்கை சூழலில் இப்பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. . இங்கு நட்சத்திர வனமும் அமைக்கப்பட்டுள்ளது. .இது ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்தப்பூச்சி பூங்காவாகும்.இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கத்திலிருந்து மேற்கே 6.கி.மீ தொலைவிலும், காவிரி ஆற்றிலிருந்து கொள்ளிடம் ஆறு பிரியும் இடமான முக்கொம்பிலிருந்து கிழக்கே 7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. வண்ணத்துப்பூச்சி பூங்காவின் வடக்குப்புறத்தில் கொள்ளிடம் ஆறு தெற்குப்புறத்தில் காவிரி ஆறுகள் ஓடுகின்றன.

இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய 27 வகை மரங்களை கொண்ட நட்சத்திர வனம் அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியில் இருந்து சுமார் 30 அடி உயரம் வளரக்கூடிய 9 அடி உயரம் கொண்ட 5000 மரச் செடிகள் வரவழைக்கப்பட்டு நடப்பட்டுள்ளது.

10. அருள்மிகு எறும்பீசவரர் கோவில்,திருவெறும்பூர்

தாரகாசுரன் என்னும் கொடிய அரக்கன் இழைத்த கொடுமைகளினால் தாங்கொணாத் துயருற்ற தேவர்களும் முனிவர்களும், நாரத முனிவரின் அறிவுரையின்படி திருச்சியை அடுத்துள்ள இம்மலையில் எழுந்தருளிய ஈசனைத் தொழச் செல்கையில், அவ்வரக்கன் அறியாத வண்ணம் எறும்பின் வடிவினை மேற்கொண்டு வழிபட்டனராம். மலைமீது அமைந்துள்ள இக்கோயிலை அடைந்து அதில் சிவ லிங்கத்தைத் தொழ எறும்புகள் மிகவும் சிரமப்பட்டதால், ஈசன் தனது உறைவிடத்தையே ஒரு எறும்புப் புற்றாக மாற்றிக் கொண்டார். இதன் காரணமாகவே எறும்பீஸ்வரர் என இத்தல நாதர் அழைக்கப்படலானார்.

எறும்புகளுக்கும் அருள் ஈந்த ஈஸ்வரன் எழுந்தருளிய இடமாதலால், இத்தலம் எறும்பியூர் எனப்பட்டது.63 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் ஐந்தாம் திருமுறையில் ஒரு பதிகமும் ஆறாம் திருமுறையில் ஒரு பதிகமும் இக்கோயில் பெருமானை பற்றி பாடல்கள் பாடியுள்ளார்.

11. அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் கோயில் , திருவெள்ளரை 

இத்தலம் மிகவும் தொன்மையான தலங்களில் ஒன்றாகும். திருவரங்கத்திற்கும் பழமையானது என்பதாலேயே ஆதிவெள்ளறை என்றும் அழைக்கபடுகிறது. வெண்மையானா பாறையினால் ஆன மலை எனப்பொருள்பட வெள்ளறை எனப்படுகிறது. திரு என்பது உயர்வை குறிக்குமாதலால் ‘திருவெள்ளறை’ என அழைக்கப்படுகிறது.இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.சோழ நாட்டு நான்காவது திருத்தலம். இத்திருக்கோவில் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ளது.

12. அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் கோயில்,திருப்பைஞ்சீலி (திருமண பரிகார கோவில்)

திருப்பைஞ்சீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் என்பது சம்பந்தர், சுந்தரர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும். மூலவர் ஞீலிவனேஸ்வரர் என்றும், தாயார் விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி என்றும் அழைக்கப்பெறுகிறார். இத்தலத்தில் 7 தீர்த்தங்கள் உள்ளது. 61வது சிவத்தலமாகிய இக்கோவிலில் கல்வாழை தலவிருட்சமாக உள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகும்.

ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைப்பாகிற ஒரு வகைக் கல்வாழை. இதுவே இக்கோவிலில் தலமரமாக அமைந்ததால், இது ஞீலிவனம் எனப் பெயர் பெற்றது.

நீலகண்டனார் சிதம்பரத்தில் தாம் கொண்டிருந்த ஆடலரசன் கோலத்தை வசிட்ட மாமுனிக்கு இத்தலத்திலேயே காட்டியமையால், இது மேலச் சிதம்பரம் எனலானது.

ஏழு கன்னிமார்களான பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் திருமண வரம் வேண்டி இவ்விடத்தில் தவம் இயற்றுகையில், பார்வதி அன்னை அவ்ர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு வரம் அளித்ததுடன், வாழை மர வடிவில் அத்தலத்திலேயே குடி கொண்டு என்றென்றும் தனது காட்சியினைக் கண்டு களித்தேயிருக்கலாம் எனப் பெரும் பேறளித்தாள். பின்னர், அவ்வாழை வனத்தின் மத்தியில் சிவனாரும் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளினார்.

13. அருள்மிகு உத்தமர் கோயில், திருக்கரம்பனூர் ( மும்மூர்த்திகள் ஸ்தலம்)

இத்தலத்திற்குப் பல வரலாறுகள் உள்ளன. ஆதிபிரம்ம புராணத்திலேயே இக்கோயில் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.


தம்மிடம் மிக்க பக்தி செலுத்தி வரும் பிரம்மாவைச் சோதிக்க விஷ்ணு கடம்ப மரமாக உருவெடுத்து இங்கு வந்ததாகவும், அவ்வுருவிலும் பிரம்மா அவரை அறிந்து கொண்டு தொடர்ந்து வழிபட்டமையால், மனம் மகிழ்ந்த விஷ்ணு அவருக்கு இங்கு தனி வழிபாட்டு சந்நிதி கொள்ளுமாறு செய்ததாகவும் கூறுவர். இந்தியாவில் மிகச் சில இடங்களிலேயே பிரம்மா மற்றும் சரஸ்வதி ஆகியோருக்கு தனிக் கோயில்களோ, சந்நதிகளோ உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இக்கோயிலில், சிவன் பிச்சாடனாராக உருக்கொண்டமைக்கும் ஒரு வரலாறு உள்ளது. தன்னைப் போல் பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் உள்ளதைச் சகிக்காத சிவபெருமான் பிரம்மனுடைய ஒரு தலையைக் கிள்ளி எறிந்ததாகவும், பிரம்ம ஹத்தி தோஷம் வந்ததால், சிவனின் கையிலிருந்த கபாலம் அவரது கையோடு ஒட்டிக் கொண்டதாகவும், சிவன் கையில் ஒட்டிக் கொண்ட கபாலத்தில் மகாலட்சுமியைக் கொண்டு பிச்சையிடச் செய்ததால் அச்சாபம் நீங்கியதாகவும் கூறுவதுண்டு.

14.தூய லூர்து அன்னை தேவாலயம் , திருச்சி

லூர்து அன்னை தேவாலயம்  திருச்சிராப்பள்ளி நகரின் மையத்தில் அமைந்துள்ளது காலோ-கத்தோலிக்க வடிவமைப்பில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் லூர்து அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது  இந்த தேவாலயம் நகரத்தில் உள்ள 22 தேவாலயங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஒன்றாக கருதப்படுகிறது.  திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்.

1895 ஆம் ஆண்டில் அடித்தளம் அமைக்கப்பட்டது மற்றும் 1903 ஆம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பின்னர் அது பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. கோபுரத்தின் நடுவில் உள்ள புனித இக்னேஷியஸ், புனித பிரான்சிஸ் சேவியர் , இயேசுவின் புனித இதயம், புனித பீட்டர் மற்றும் புனித ஜான் டி பிரிட்டோ ஆகியோரின் உருவங்கள் தேவாலயத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். புதுப்பிக்கப்பட்ட தேவாலயம் 10 பிப்ரவரி 1898 அன்று அர்ப்பணிக்கப்பட்டது மற்றும் 1899 ஆம் ஆண்டில் சிலுவை வழி ஆசீர்வதிக்கப்பட்டு அமைக்கப்பட்டது. கோதிக் பாணி தேவாலயத்தின் ஒரு வழக்கு ஆய்வை தேவாலயம் வழங்குகிறது.

எங்கள் லேடி ஆஃப் ஏஞ்சல்ஸ் தேவாலயம் மணிநேர பிரார்த்தனை மற்றும் தினசரி சேவைகளுடன் செயல்படும் தேவாலயமாகும், மேலும் இது ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவப் பிரிவைப் பின்பற்றுகிறது தேவாலயத்தில் காலை 5:15 மணி முதல் இரவு 8 மணி வரை பல்வேறு மத நடைமுறைகள் உள்ளன. தேவாலயத்தில் நான்கு வருடாந்த விருந்துகள் உள்ளன, ஆண்டுதோறும் பிப்ரவரி 11 அன்று நடைபெறும் லூர்து மாதாவின் விழா அவற்றில் மிகவும் முக்கியமானது. இந்த தேவாலயம் திருச்சிராப்பள்ளியின் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்துடன் தொடர்புடையது , அதே சமயம் இது இயேசுவின் பிதாக்கள் (ஜேசுயிட்ஸ்) மூலம் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

15. அருள்மிகு தாருகாவனேஸ்வரர் கோயில்,திருப்பராய்த்துறை

திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில் அப்பர்சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இறைவன் பிட்சாடனராய் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை . தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள மூன்றாவது சிவத்தலமாகும்.பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் 'பராய்த்துறை' எனப்படுகிறது

16. அருள்மிகு மாற்றுரைவரதர்  கோயில், திருவாசி

சுந்தரர் தன்னுடன் சிவதல யாத்திரைக்கு வருகின்ற சிவனடியார்களுக்கு உணவு படைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறு உணவு படைக்க சிவபெருமானிடம் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொள்வார். ஆனால் இத்தலத்தில் சுந்தரர் பொற் பதிகம் பாடியும் சிவபெருமான் பொன்னைத் தரவில்லை. சுந்தரர் கோபம் கொண்டு பாடல்களைப் பாடினார். அதன்பின்பு சிவபெருமான் பொன்னை தந்தார். பிறகு அந்தப் பொன் சுத்தமானதா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்கு வந்த இருவர் அந்தப் பொன்னை சோதித்து அதன் தரத்தினை உரைத்தனர். சிவபெருமான் தன்னை இகழ்ந்து பாடினாலும் பொன் தருவார் என்பதை சுந்தரர் அறிந்தார். பொன்னை உரைத்து தரத்தை உரைத்த இருவரும் மறைந்தனர். அவர்கள் சிவபெருமானும் திருமாலும் என சுந்தரர் அறிந்தார்.மாற்றுரைவரதர் எனும் பெயர் இதன் காரணமாகவே வந்தது. இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 62வது சிவதலமாகவும் உள்ளது. இச்சிவாலய மூலவரை உமாதேவி, பிரம்மதேவன், இலக்குமி, அகத்திய முனிவர், கமலன் எனும் வைசியன், கொல்லிமழவன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

17. நத்தர்ஷா பள்ளிவாசல், திருச்சி

சுமார் 1100 வருடங்களுக்கு முன்பு நத்தர்ஷா வலி எனும் இசுலாமிய சூபி மகான் தனது சுல்தான் பதவியை தனது சகோதரருக்கு கொடுத்து விட்டு தமிழ்நாட்டில் திருச்சிக்கு வந்து மக்களுக்கு போதனைகள் செய்தார். அவரது போதனை மூலம் பலர் இசுலாம் மதத்தை ஏற்றனர்.அவர் இறந்த பின் அவரை திருச்சியிலே அடக்கம் செய்தனர்.அவரது அடக்கத்தலம் அருகிலேயே பள்ளிவாசல் கட்டப்பட்டது.அப்பள்ளிவாசல் நத்தர்ஷா வலி பள்ளிவாசல் என அழைக்கப்படுகிறது.

18. ஸ்ரீ குருவாயூரப்பன் கோவில், முத்தரசநல்லூர்

திருச்சி கரூர் சாலையில் திருச்சியை அடுத்துள்ள முத்தரசநல்லூரில் உள்ளது இந்த கோயில். முற்றிலும் கேரள பாணியில் கட்டப்பட்ட இக்கோயில் கேரளத்தின் குருவாயூர் கோயிலை தரிசிக்கும் உணர்வை தருகிறது. திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் முத்தரசநல்லூரை அடைந்து இடதுபுறமாக உள்ள ரயில் பாதையை கடந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்று அங்கிருந்து இடது புறமாக செல்லும் குறுகிய சாலையில் சென்று கோயிலை அடையலாம்.

தொகுப்பு

வா ஸ்ரீராம்

மாநில ஊடக இணைச் செயலர்

தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு

7305518764





No comments:

Post a Comment