Pages

Sunday, November 26, 2023

RAMAYANAM PART 125

 மாய ஜனகனும், சீதையும் !!!

❁ இராவணனின் சொற்களை கேட்ட சீதை நெருப்பு போல் கொதித்தாள். அரக்கனே! கொடியவனே! பாதகனே! ஒரு சிங்கத்தை விரும்பும் நான், ஒரு நாய்குட்டியை விரும்புவேனா? இனியும் இது போன்ற ஆசை இருந்தால் அதை நீ மறந்து விடு. பெண்ணாசையால் அழிந்து விடாதே. உனக்கு அழிவு காலம் நெருங்கி கொண்டு இருக்கிறது. துஷ்டனே! இங்கே நின்று கொண்டு மதிகெட்டு பேசாதே. இங்கே இருந்து சென்று விடு என்று கடிந்து பேசினாள். சீதை இப்படி பேசியதைக் கேட்டு இராவணன் அமைதியாக இருந்தான். பெண்ணே! இராவணனாகிய என்னை மூடனாக நினைக்காதே. நீ என் ஆசைக்கு இணங்கவில்லை என்றால் நீ பிறந்த நகரையும், புகுந்த நகரையும் பொடிபொடியாக்குவேன். என்னை யார் என்று நினைத்தாய்? நான் வெள்ளி மலையை அள்ளியெடுத்தவன். நான் இந்த மூன்று உலகங்களையும் வென்றவன். நான் மிதிலாபுரிக்கும், அயோத்திக்கும் அரக்கர்களை அனுப்பியுள்ளேன்.

❁ அயோத்தியில் பரதன், சத்ருக்கனையும், மிதிலையில் உன் தந்தை ஜனகனையும் கட்டி கொண்டு வருமாறு ஏவலாட்களை அனுப்பியுள்ளேன் என்றான். அப்பொழுது, மகோதரன் மாய ஜனகனாக மாறிய மருத்தனை கை, கால்களை கட்டி இழுத்துக் கொண்டு வந்தான். சீதை வருவது தன் தந்தை என நினைத்து, தந்தையின் இந்த நிலையைக் கண்டு மிகவும் வருந்தினாள். என்ன செய்வதென்று தெரியாமல் தந்தையை பார்த்து அழுதாள். கடவுளே! என் தந்தைக்கு இந்த துயரம் வந்ததே. இனி நான் என்ன செய்வேன். என்னை பெண்ணாக பெற்றதற்கு தாங்கள் இன்று பெருந்துயரம் அடைந்தீரே. என்னை பெற்ற பாவத்திற்காகவா! உங்களுக்கு இந்த தண்டனை. ஆயிரமாயிரம் வறியவர்களுக்கு உதவி செய்வீரே. இன்று நமக்கு உதவ யாரும் இல்லையே! தரும மூர்த்தியாகிய உங்களுக்கு துன்பம் நேர்ந்ததே. இனி நான் என்ன செய்வேன். என்னை சிறை மீட்டுச் செல்ல இன்னும் என் கணவர் வரவில்லையே! எப்படி உங்களை சிறை மீட்பேன்.

❁ ஒரு பெண்ணாகிய நான் உங்களை எப்படி சிறை மீட்பேன் என பலவாறு புலம்பி அழுதாள். அப்பொழுது இராவணன் சீதையிடம், பெண்ணே! நீ கவலைப்படாதே. நீ என்னை ஏற்றுக் கொள். நான் உன் தந்தையை இலங்கையின் அரசனாக முடி சூட்டுகிறேன். நீயும் நானும் இங்கு மகிழ்ச்சியாக வாழலாம். உன்னை பெற்றெடுத்த தாய் தந்தையரை நான் ஒன்றும் செய்ய மாட்டேன். இதற்காக நீ என்னை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என்றான். சீதை, ஒரு சிங்கத்தை விரும்பும் நான், ஒரு நாய்குட்டியுடன் வாழ்வேனா? என் கணவனின் அம்பிற்கு நீ அழிவது நிச்சயம். போர்க்களத்தில் நீ இராமனின் அம்புப்பட்டு வீழ்ந்து கிடப்பாய் என்றாள் கோபத்துடன். இராவணன் இதைக்கேட்டு கடுங்கோபம் கொண்டான். அப்பொழுது மகோதரன் இராவணனை பார்த்து, அரசே! தாங்கள் சீதையிடம் கோபம் கொள்ள வேண்டாம். 

தொடரும்...

No comments:

Post a Comment