இராமாயணம் தொடர் 97
இராமரின் கோபம்!...
🌟 விபீஷணன், அனுமனின் வீரச் செயல்களையும், வலிமையையும் கண்டு நான் அடைக்கலம் புகவேண்டியது தங்களிடம்தான் என்பதை உணர்ந்து இங்கு வந்தேன் என்றான். இதைக் கேட்ட இராமர், அனுமனை கருணையோடும், அன்போடும் பார்த்து, வலிமைமிக்க வீரனே! விபீஷணன் சொல்வதிலிருந்து நீ பாதி இலங்கை நகரை அழித்துவிட்டு வந்துள்ளாய் என்பது தெரிகிறது. நீ இலங்கை நகரை தீயிக்கு இரையாக்கிவிட்டு வந்துள்ளாய். என் வில்லின் திறமையை உலகம் அறிய வேண்டும் என்று தான் சீதை அங்கேயே விட்டு வந்துள்ளாய். இதற்கு பரிசாக உனக்கு நான் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை? பிரம்மதேவரின் ஆட்சி காலம் முடிந்தபின் பிரம்மராக ஆட்சி புரிவாய் என்று பிரம்மபதத்தை பரிசாக வழங்கினார். இராமர் கூறியதைக் கேட்ட அனுமன், இராமரின் திருவடியில் விழுந்து வணங்கி, புகழின் நாணத்தால் ஒன்றும் பேசாமல் தலைகுனிந்து நின்றான். இதைப் பார்த்த சுக்ரீவன் மற்றும் மற்ற வானர வீரர்கள் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர்.
🌟 பிறகு இராமர், இப்பெருங்கடலை வானரங்களுடன் கடந்து இலங்கை செல்வதற்கு ஏதேனும் வழி உள்ளதா? என யோசித்துக் கொண்டு கடலுக்கு அருகில் வந்து நின்றார். இராமர் விபீஷணனை பார்த்து இக்கடலை கடப்பதற்கு ஏதேனும் வழி உள்ளதா எனக் கேட்டார். விபீஷணன், பெருமானே! வருணனை வேண்டிக் கேட்டால் நிச்சயம் ஏதாவது வழி கிடைக்கும் என்றான். பிறகு இராமர், கடலுக்கு அருகில் சென்று, தர்ப்பைப் புற்களை அடுக்கி அதன்மேல் நின்று கொண்டு, ஏழு நாட்கள் வருண ஜபம் செய்தார். ஏழு நாட்கள் வருண ஜபம் செய்தும் வருணன் வந்து தோன்றவில்லை. இதனால் இராமர் பெருங்கோபம் கொண்டார். உடனே இராமர் தன் கோதண்டத்தை வளைத்து நாணை பூட்டிய அம்பில் தீயை மூட்டி கடலை நோக்கி எய்தினார். இந்த தீயினால் கடலில் இருந்த மீன்கள் முதலிய விலங்குகள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாயின. இதைப் பார்த்துக் கொண்டிருந்த இலட்சுமணன் முதலிய வானர வீரர்கள் இனி என்ன நடக்குமோ என அச்சத்தில் இருந்தனர்.
🌟 அப்போதும் வருணன் அங்கு வந்து தோன்றவில்லை. இதனால் இராமரின் கோபம் இன்னும் அதிகமானது. இராமர் பிரம்மாஸ்திரத்தை நாணில் மூட்டி கடலை நோக்கி எய்த ஆயத்தமானார். இதனைப் பார்த்து உலகமே நடுங்கியது. தேவர்கள் முதலானோர் மிகவும் வருந்தினர். அப்போது வருணன் கடல் வழியே வந்து இராமரின் திருவடியில் விழுந்து வணங்கி, அடியேன்! செய்த பிழையை மன்னித்தருள வேண்டும் என வேண்டினார். இராமர் கோபம் தணிந்து, நான் இவ்வளவு நேரம் பணிந்து வேண்டியும் வராததற்கு காரணம் என்ன? என்று கேட்டார். வருணம், பெருமானே! கடலில் மீன்களுக்கிடையே போர் நடந்து கொண்டிருந்தது. நான் அவர்களை சமாதானம் செய்து கொண்டிருந்தேன். அதனால் தான் தங்களின் அழைப்பை நான் கவனிக்க மறந்துவிட்டேன். ஆதலால் பெருமானே! இந்த சிறியேன் செய்த பிழையை மன்னித்தருள வேண்டும் என வேண்டினார்.
🌟 இராமர் இதனைக் கேட்டு, வருணனே நான் உன்னை மன்னித்து விடுகிறேன். நான் இப்பொழுது நாணில் பூட்டிய பிரம்மாஸ்திரத்தை ஏதாவது இலக்கில் செலுத்த வேண்டும். எதன் மீது பிரம்மாஸ்திரத்தை செலுத்தலாம் எனக் கூறு என்றார். வருணன், பெருமானே! மருகாந்தாரம் என்னும் தீவில் வாழும் நூறு கோடி அரக்கர்கள் உலக மக்களுக்கு அழிவு செய்து வருகிறார்கள். ஆதலால் இந்த பிரம்மாஸ்திரத்தை மருகாந்தாரம் தீவில் ஏவி அங்கு வாழும் அரக்கர்களை வதம் செய்யுங்கள் என்றார். உடனே இராமர், மருகாந்தாரம் தீவை பார்த்து பிரம்மாஸ்திரத்தை எய்தினார். அத்தீவு கணப்பொழுதில் அழிந்துவிட்டது. பிறகு இராமர் வருணனை பார்த்து, நாங்கள் அனைவரும் கடலை கடந்துச் செல்ல வழி உண்டாக்கி தர வேண்டும் எனக் கேட்டார்.
தொடரும்...
No comments:
Post a Comment