இராமாயணம் தொடர் 94
இராமர் கூறும் வரலாற்று கதைகள்...!
💫 இராமர், உங்களுக்கு நான் மற்றொரு வரலாற்றையும் கூறுகிறேன். ஒரு வேடன் காட்டில் வேட்டையாடச் சென்றான். அக்காட்டில் ஆண் புறாவும், பெண் புறாவும் அன்புடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. ஒரு நாள் ஆண் புறாவுக்கு உடல் நலம் சரி இல்லாமல் போனது. ஆதலால் பெண் புறா நான் தனியாக சென்று இரைக் கொண்டு வருகிறேன் என்றது. ஆண் புறா, நீ இரையை தேடி வெகு தூரம் செல்லாமல் சீக்கரம் வந்து விடு என்று கூறி அனுப்பியது. வேடன் மரத்தடியில் பொரிகளை போட்டு வலையை விரித்து வைத்திருந்தான். இதை அறியாத பெண் புறா இரையை எடுக்கப் போய் வலையில் மாட்டிக் கொண்டது. பிறகு அவ்வேடன் பெண் புறாவை தன் கூட்டில் அடைத்துக் கொண்டு, விலங்குகளை வேட்டையாடச் சென்றான். இரவு சூழ்ந்தது. இடியும், மின்னலுமாக மழை பெய்ய தொடங்கியது. வேடன் குளிரும், பசியும் தாங்க முடியாமல் ஆண் புறா இருக்கும் மரத்தடிக்கு வந்தான். பசியால் வேடன் அயர்ந்து தூங்கிவிட்டான்.
💫 ஆண் புறா வெகு நேரம் ஆகியும் பெண் புறாவை காணாததால் மிகவும் வருத்தத்தில் இருந்தது. ஆண்புறா மரத்தின் கிளையில் அமர்ந்து கொண்டு வேடனின் கூண்டில் அடைபட்டிருந்த பெண் புறாவைக் பார்த்து ஒலி எழுப்பியது. அதற்குப் பெண் புறா நான் இங்கு சிறைப்பட்டு விட்டேன். இவ்வேடன் என்னை ஏமாற்றி வலை வைத்து என்னை பிடித்துக் கொண்டான். நம் வீட்டை நோக்கி வந்து விட்ட இந்த வேடன் குளிரால் நடுங்குகிறான். இவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வாயாக என்று கூறியது. பிறகு ஆண்புறா, உன்னை இப்பிறப்பில் காண முடியாமல் போய் விடுமோ? என எண்ணினேன். ஆனால் கடவுளின் கருணையால் உன்னை பார்த்து விட்டேன் என்றது. பிறகு ஆண் புறா, வேடனின் குளிரைப் போக்க, உலர்ந்த சுள்ளிகளைப் போட்டு தீமூட்டியது. பின் வேடன் பசியால் மிகவும் தவித்தான்.
💫 உடனே ஆண் புறா, வேடனைப் பார்த்து, வேடனே இந்த ஆலமரமும் நானும், உன் கூண்டில் அகப்பட்டிருக்கும் என் மனைவியும் வாழும் இடமாகும். எங்கள் இல்லம் தேடி வந்த நீ பசியோடு இருக்கக் கூடாது. ஆதலால் உன் பசி தணிய நீ என்னையே உண்டுக்கொள் என்று தீயில் விழுந்து மாண்டுபோனது. இதைப்பார்த்த வேடன், புறாவின் அன்பைக் கண்டு மெய்சிலிர்த்தான். இந்த புறாவுக்கு இருக்கும் நற்குணம் நமக்கு இல்லையே என நினைத்து மிகவும் வருந்தினான். இனிமேல் நான் வேட்டையாட மாட்டேன் எனக் கூறிவிட்டு கூண்டில் இருக்கும் புறாவை விடுவித்தான். பெண் புறா, வேடனை பார்த்து, என் கணவனை இழந்து ஒரு போதும் என்னால் உயிர் வாழ முடியாது. உன் பசியை நீங்கிக் கொள்ள என்னையும் உண்டுக் கொள் என கூறி தீயில் விழுந்தது. வேடன் இப்புறாக்களின் அன்பைக் கண்டு அதிசயித்தான்.
💫 பிறகு இராமர், தேவர்கள் பாற்கடலை கடைந்தப் போது அதில் ஆல கால விஷம் தோன்றியது. ஆலகால விஷத்தின் கடுமை தாங்க முடியாமல் தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் முறையிட்டு வேண்ட சிவனும் அந்த விஷத்தை அப்படியே எடுத்து உண்டார். விஷம் முழுமையாக இறைவனின் வயிற்றில் இறங்கினால் எங்கே இறைவனிற்கு ஏதாவது தீங்கு நேர்ந்து விடுமோ என அஞ்சிய அன்னை பார்வதிதேவி இறைவனின் கண்டத்தை அழுத்த விஷமானது கழுத்திலேயே தங்கி விட்டது. அன்று முதல் இறைவனும் திருநீலகண்டர் என்று அழைக்கப்பட்டார். இதை நாம் மறக்கலாமா? அது மட்டுமின்றி இராவணன் சீதையை கவர்ந்து சென்றபோது, சீதையின் அலறலைக் கேட்டு ஜடாயு இராவணனிடம் போரிட்டு, சிவன் வாளினால் தன் உயிரை மாய்த்தார். அத்தகைய ஜடாயுவின் கருணை திறத்தை நாம் மறக்கலாமா? விபீஷணனுக்கு அடைக்கலம் தருவதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் எதுவாக இருந்தாலும் அவனை நாம் ஏற்றுக் கொள்வது தான் நம் கடமை என்றார் இராமர்.
தொடரும்...
No comments:
Post a Comment