இராமாயணம் தொடர் 80
அட்சய குமாரன் போருக்கு செல்லுதல்!
✻ ஜம்புமாலி இறந்த செய்தியை அரக்கர்கள் ஓடிச் சென்று இராவணனிடம் தெரிவித்தனர். ஒரு குரங்கு தன் அரக்கர்களையும் மற்றும் ஜம்புமாலியையும் கொன்றதை அறிந்து இராவணன் மிகவும் கோபங்கொண்டான். உடனே இராவணன் தானே சென்று அந்த குரங்கைப் பிடித்து வருவதாக கூறினான். இதைக் கேட்ட விரூபாட்சன், யூபாசன், துர்த்தரன், பிரகசன், பாசகர்ணன் என்னும் ஐந்து சேனைத் தலைவர்களும், அரசே! தாங்கள் போய் ஒரு குரங்கிடம் போர் புரிவதா! தாங்கள் இங்கேயே இருங்கள் நாங்கள் சென்று அந்த குரங்கைப் பிடித்து வருகிறோம் எனக் கேட்டுக் கொண்டனர். சேனைத் தலைவர்கள் கேட்டுக் கொண்டத்துக்கிணங்க இராவணன் அவர்கள் போருக்கு செல்வதற்கு சம்மதித்தான். பிறகு ஐந்து சேனைத் தலைவர்கள் தன் அரக்க படைகளைத் திரட்டிக் கொண்டு அனுமன் இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தனர்.
✻ அனுமன் ஒரு பெரும் அரக்க படை வருவதை கண்டு அவர்கள் அனைவரையும் நான் அழிப்பேன் என மனதில் நினைத்துக் கொண்டான். அரக்கர் படை அனுமனை எதிர்க் கொண்டது. இச்சிறிய குரங்கா அரக்கர்களை அழித்தது என ஆச்சர்யப்பட்டனர். அனுமன் தன் உருவத்தை மிகப்பெரிய உருவமாக மாற்றிக் கொண்டான். இதைப் பார்த்த அரக்கர்கள் மிகவும் கோபங்கொண்டு அனுமன் மீது அம்புகளையும், ஏராளமான ஆயுதங்களையும் எய்தினர். ஆனால் அந்த அம்புகளும், ஆயுதங்களும் வலிமைமிக்க அனுமனை ஒன்றும் செய்யவில்லை. அனுமனை தாக்க அரக்கர்கள் அலை போல் வந்தனர். உடனே தன் பக்கத்தில் இருந்த தூணை கையில் எடுத்துக் கொண்டு அரக்கர்களை வீழ்த்தினான். இப்படி அரக்கர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகு, சேனைத் தலைவர்கள் அனுமனை சூழ்ந்து அவன்மீது அம்புகளை எய்தினர்.
✻ அனுமன் தன்னை நோக்கி வந்த அம்புகளை தன் கையால் தடுத்தான். இவர்களுக்குள் கடுமையான போர் நடந்தது. அனுமன் ஐந்து சேனைத் தலைவர்களை ஒவ்வொருவராக கொன்று வீழ்த்தினான். தாங்கள் குரங்கை பிடித்து வருவதாக சென்ற ஐந்து சேனைத் தலைவர்களும் மாண்ட செய்தியை அறிந்த இராவணன் மிகவும் கோபம் கொண்டான். உடனே இராவணன் தான் சென்று அந்த அனுமனை தூக்கிக் கொண்டு வருவதாக கூறினான். அப்போது இராவணனின் கடைசி மகனான அட்சய குமாரன் எழுந்து, தந்தையே! இந்த வாய்ப்பை எனக்கு கொடுங்கள். அக்குரங்கை அழித்து பேரும், புகழும் பெறுவேன். எனக்கு கட்டளையிடுங்கள் என்றான். இதனை கேட்ட இராவணன் தன் மகனை கட்டித் தழுவி விடை கொடுத்தான்.
✻ அட்சய குமாரன் தேரில் ஏறும்போது அவனுடன் இளைஞர்களும், சேனைத் தலைவர்களின் மைந்தர்களும், நான்கு இலட்சம் வீரர்களும் உடன் சென்றனர். அனுமன் தன்னை நோக்கி வரும் பெரும்படையைக் கண்டு வருவது இராவணன் அல்லது இந்திரஜித் ஆக இருக்கக் கூடும் என நினைத்தான். இவர்களிடம் போர் புரிவதை நினைத்து அனுமன் மகிழ்ந்தான். அவர்கள் சிறிது பக்கத்தில் வந்தவுடன் தான் தெரிந்தது அது இராவணனும் இல்லை, இந்திரஜித்தும் இல்லை என்று. அனுமன் வருபவன் யார் என உற்று நோக்கினான். அனுமனை பார்த்த அட்சய குமாரன், இச்சிறிய குரங்கு தான் அரக்கர்களை கொன்றதா என ஏளனமாக கேட்டான். உடனே அனுமன் அவனிடம், ஐயனே! தங்கள் அரசன் இராவணனை வென்ற வாலியும் குரங்கு தான் என்பதை உனக்கு சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன். ஆதலால் இதை மனதில் வைத்து போர் புரியுங்கள் என்றான்.
தொடரும்...
No comments:
Post a Comment