Pages

Wednesday, October 4, 2023

RAMAYANAM PART 79

 இராமாயணம் தொடர் 79

அனுமன் ஜம்புமாலி சண்டை!

🌀 அனுமன் சீதையிடம் இருந்து விடைப்பெற்றுச் சென்றான். அனுமன் போகும் போது நான் சீதையைத் தேடி கண்டுபிடித்துவிட்டேன். இப்பொழுது இராவணன் பற்றியும் அவனின் பலத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் இராமர் போர் புரிய எவ்வளவு பலம் வேண்டும் என்பது தெரியும். அதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். அரக்கர்களை தொல்லை செய்யலாம் என எண்ணினான். பிறகு வேண்டாம் என நினைத்து விட்டு இவ்வளவு அழகு மிகுந்த இந்த அசோக வனத்தை அழித்தால் இராவணன் நிச்சயம் வர வாய்ப்புள்ளது என நினைத்தான். உடனே அனுமன் அசோக வனத்தை முற்றிலும் நாசம் செய்தான். இவ்வாறு அனுமன் அசோக வனத்தை நாசம் செய்து கொண்டிருக்கும்போது தூங்கி கொண்டிருந்த அரக்கிகள் விழித்துக் கொண்டனர். அப்போது மேரு மலையை போல் இருந்த அனுமனை கண்டு அரக்கிகள் பயந்தனர்.

🌀 உடனே அவர்கள் சீதையிடம் சென்று, ஏ பெண்ணே! இவன் யார் என்று உனக்கு தெரியுமா? இவன் எப்படி இங்கே வந்தான் எனக் கேட்டனர். இதற்கு சீதை, மாய உருவம் எடுக்கும் அரக்கர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். யார் வந்தார்கள்? என்ன செய்தார்கள் என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறி விட்டாள். உடனே அரக்கிகள் இராவணனிடம் ஓடிச்சென்று, மன்னரே! ஓர் வானரம் அசோகவனத்தில் சீதையின் இருப்பிடத்தை மட்டும் விட்டுவிட்டு மற்ற எல்லா இடங்களையும் நாசம் செய்து விட்டது எனக் கூறினார்கள். இதைக்கேட்ட இராவணன் எவரும் செல்ல முடியாத அசோக வனத்தை ஓர் வானரம் நாசம் செய்து விட்டது என என்னிடம் வந்து மூடத்தனமாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்றான். அப்போது அனுமன் உலகம் அதிரும்படியான ஒரு கூக்குரலை எழுப்பினான். இக்குரல் இராவணனின் காதிலும் விழுந்தது.

🌀 உடனே இராவணன் கிங்கரர் என்னும் ஒரு வகை அரக்கர்களை அழைத்து, அக்குரங்கை தப்பிக்க விடாமல் என்னிடம் கொண்டு வந்து ஒப்படையுங்கள் என்று ஆணையிட்டான். உடனே கிங்கர அரக்கர்கள் அனுமனை தேடி விரைந்துச் சென்றனர். அவர்கள் அனுமனை சூழ்ந்துக் கொண்டனர். உடனே அனுமன் தன் பக்கத்தில் இருந்த மரத்தை பிடுங்கி கிங்கர அரக்கர்கள் அனைவரையும் அழித்தான். அனுமனை பிடிக்கச் சென்ற கிங்கர அரக்கர்கள் அனைவரும் இறந்த செய்தி இராவணனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட இராவணனின் முகம் கோபத்தால் சிவந்தது. உடனே இராவணன், ஜம்புமாலி என்னும் அரக்கனை அழைத்து, நீ குதிரைப்படையுடன் சென்று அக்குரங்கை கயிற்றால் கட்டி இங்கு அழைத்து வா! அப்போது தான் என்னுடைய கோபம் தணியும் என்றான். ஜம்புமாலி தன் படையை அழைத்துக் கொண்டு அனுமன் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

🌀 அனுமன் தன் பக்கத்தில் இருந்த இரும்புத் தடியை கையில் எடுத்துக் கொண்டான். தன்னிடம் போர் புரிய வந்த அரக்கர்கள் எல்லோரையும் இரும்புத் தடியால் அடித்துக் கொன்றான். கடைசியில் ஜம்புமாலி மட்டும் இருந்தான். அனுமன் அவனிடம், உயிர் மேல் ஆசை இருந்தால் இங்கிருந்து தப்பி ஓடிச்செல் என்றான். ஆனால் ஜம்புமாலி அங்கிருந்து கோழை போல் ஓடாமல் அனுமன் மீது அம்புகளை ஏவினான். தன்னை நோக்கி வந்த அம்புகளை அனுமன் தன் இரும்புத் தடியால் தடுத்தான். ஜம்புமாலி தன் அம்பால் அனுமனிடம் இருந்த இரும்புத்தடியையும் ஒடித்து விட்டான். இதனால் சற்று சளைத்து நின்ற அனுமன், ஓடிச்சென்று ஜம்புமாலியின் தேரில் ஏறி அவனின் வில்லை பிடுங்கி அவன் கழுத்தில் மாட்டி தேரிலிருந்து கீழே தள்ளிவிட்டான். ஜம்புமாலி கீழே விழுந்து இறந்தான்.

தொடரும்...



No comments:

Post a Comment