Pages

Tuesday, September 12, 2023

RAMAYANAM PART 59

 இராமாயணம் தொடர் 59

கார்காலம்

🌺 இராமர் அனுமனிடம், வீரனே! நீ சுக்ரீவனுக்கு துணையாக அவர்களுடன் சேர்ந்து இரு என்றார். அனுமன், பெருமானே! தங்கள் அடியேன், தங்களுடன் இருந்து சேவைபுரிய விரும்புகிறேன் என்றான். இராமன், அனுமனே! வாலி நாட்டை வலிமையுடனும், திறமையுடனும் ஆண்டு வந்தான். வாலியின் மறைவுக்கு பின் சுக்ரீவன் அரசனாக முடிசூட்டி உள்ளான். சுக்ரீவனின் ஆட்சியில் யாரெனும் நாட்டை கைப்பற்றக் கூடும். ஆதலால் நீ சுக்ரீவனுக்கு துணையாக அவனுடம் இரு என்று கூறினார். மழைக்காலம் முடிந்து எனக்கு சுக்ரீவனுடன் உதவி புரிய வருவாயாக எனக் கூறினார். இராமரின் ஆணையை மீற முடியாத அனுமன் இராமரை வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

🌺 சுக்ரீவன் தனது அமைச்சர்கள், அண்ணன் வாலியின் மனைவியான தாரையின் அறிவுரைகளின்படி நாட்டை நெறி தவறாமல் ஆட்சி புரிந்து வந்தான். இளவரசனாக முடிசூட்டிக் கொண்ட அங்கதன், தன் நகரத்தை கண்ணும் கருத்துமாக ஆண்டு வந்தான். அனுமனை நாட்டுக்கு அனுப்பிவிட்டு, இராமரும் இலட்மணரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் பிரஸ்ரவண மலை என்னும் மலைபகுதியை அடைந்தனர். அங்கு அவர்கள் ஒரு குகையில் வாழ்ந்தனர். மழைக்காலமும் வந்தது. சுக்ரீவன் தன் மனைவி ருமாதேவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான். அனுமன் மக்களுக்கு நீதி நெறிகளை பரப்பிக் கொண்டு இருந்தான். அங்கதனும் நீதி தவறாமல் நகரத்தை ஆட்சி செய்தான்.

🌺 கார்மேகம் சூழ்ந்தது. இடியும், மின்னலுமாக மழை பெய்தது. மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இராமர் சீதையை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டு இருந்தார். இலட்சுமணர் இராமரை சமாதானம் செய்தார். காற்றும் மழையினால் வெளியில் எங்கும் போகாத நிலை இராமருக்கு. சீதை இப்பொழுது என்ன துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாளோ என வருந்தினார் இராமர். இராமருக்கு சீதையின் பிரிவும், தனிமையும் பெரும்துன்பத்தை ஏற்படுத்தியது. இலட்சுமணன் இராமனுக்கு ஆறுதல் சொல்வதால் இராமரின் மனம் சாந்தம் அடைந்தது. கார்காலம் ஒருவழியாக முடிந்தது. வெயில் படர தொடங்கியது. வானம் தெளிவடைந்து வெளிச்சத்தைக் கொண்டு வந்தது. 

🌺 இராமரும் இலட்சுமணரும் குகையைவிட்டு வெளியே வந்தனர். கார்காலம் முடிந்து தன் படைகளுடன் வருவதாக சொன்ன சுக்ரீவன் வராததால் கோபமடைந்த இராமர் இலட்சுமணனிடம், தம்பி இலட்சுமணா! சுக்ரீவன் கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டான். கார்காலம் முடிந்து வருவதாக சொன்ன சுக்ரீவன் இன்னும் திரும்பி வரவில்லை. அவன் நட்பையும், நன்றியையும் மறந்து அரச வாழ்வில் மூழ்கி விட்டான் போலும். நன்றியை மறந்தவனை கொல்வது கூட தவறில்லை. வாலியை கொல்ல என்னிடம் உதவியை நாடினான். நம்மை கொல்ல வேறு ஒருவரிடம் கூட உதவியை நாடலாம். அப்படி இருந்தால் இவ்வுலகில் வானரங்கள் இல்லாதவாறு நான் செய்து விடுவேன். 

🌺 நீ கிஷ்கிந்தைக்கு சென்று அவனின் மனநிலையை அறிந்து வா. உன் கோபத்தில் அவனை ஒன்றும் செய்து விடாதே. கிஷ்கிந்தையில் அவன் மனநிலை மாறிருந்தால் என்னிடம் வந்து சொல். நீ கிஷ்கிந்தை சென்று வருவாயாக என்று இலட்சுமணருக்கு விடைக் கொடுத்தார். இலட்சுமணரும் விடைப்பெற்று கிஷ்கிந்தை நோக்கி புறப்பட்டுச் சென்றார்.

தொடரும்...

No comments:

Post a Comment