Pages

Monday, September 18, 2023

RAMAYANAM PART 65

 இராமாயணம் தொடர் 65

வானர வீரர்களின் கவலை!!

💫 பொய்கை கரையில் அனுமன், அங்கதன், ஜாம்பவான் மற்ற வானர வீரர்கள் அன்றிரவை கழித்தனர். துமிரன் என்ற அரக்கன் கருநிறமுடன், பெரிய உடலும், நீண்ட கைகளுடன் நடுஇரவில் அங்கு வந்தான். என் ஆட்சிப் பகுதியான பொய்கை கரையில் இவர்கள் எவ்வளவு துணிவுடன் உறங்கி கொண்டு இருப்பார்கள் எனக் கூறி அங்கதனின் மார்பில் ஓங்கி குத்தினான். யார் தன் மார்பில் குத்தியது என்பதை அறிய அங்கதன் எழுந்து பார்த்தான். அங்கு அரக்கன் அவன் முன் பெருங்கோபத்தில் நின்று கொண்டு இருந்தான். பிறகு இருவரும் போர் புரிய தொடங்கினர். நெடுந்நேரம் இவர்களின் யுத்தம் தொடர்ந்தது. ஒரு வழியாக அங்கதன் அரக்கனை கொன்று விட்டான். மற்ற வானரங்கள் இவர்களின் போரின் போது ஏற்பட்ட சத்தங்களை கேட்டு எழுந்து பார்த்தனர். அப்போது அரக்கன் மாண்டு கிடந்தான். உடனே அனுமன் அங்கதனை பார்த்து இவன் யார்? எனக் கேட்டான்.

💫 அதற்கு அங்கதன், இவன் யாரென்று எனக்கு தெரியவில்லை என்றான். அப்போது ஜாம்பவான், இவனை எனக்கு தெரியும். இவன் துமிரன் என பெயர் கொண்ட அரக்கன். இவன் பொய்கையை தன்னுடையது என எண்ணிக் கொண்டு இருந்தான். இவனை அங்கதனை தவிர வேறு எவராலும் கொல்ல முடியாது என்றான். பிறகு வானர வீரர்கள் அங்கிருந்து சீதையை தேட புறப்பட்டனர். அவர்கள் விதர்ப்ப நாடு, பாண்டு மலை, தண்டகவனம், கோதாவரி நதி போன்ற இடங்களில் சீதையை மிகுந்த சிரத்தையுடன் தேடினர். இங்கு சீதையை கண்டுபிடிக்க முடியாததால் மிகவும் கவலையுற்று சோனை நதியை அடைந்தனர். அங்கும் சீதையை கண்டுபிடிக்க முடியாததால் அங்கிருந்து அருந்ததி மலையை அடைந்தனர். அங்கு தேடிய பின் திருவேங்கட மலையை அடைந்தனர். அங்கு திருவேங்கட மலையை வணங்கிவிட்டு சீதையை தேடினர்.

💫 பிறகு அவர்கள் அங்கிருந்து அந்தணர் வேடமணிந்து தொண்டை நாட்டை அடைந்தனர். அங்கு சீதையை தேடிய பிறகு வளமிக்க சோழ நாட்டை அடைந்தனர். அங்கும் சீதையை கண்டுபிடிக்க முடியாததால் பாண்டிய நாட்டுக்குச் சென்றனர். அங்கு தேடியும் சீதை கிடைக்காததால் மிகவும் கவலையுற்றனர். பிறகு அவர்கள் கடைசியாக சுக்ரீவன் குறிப்பிட்ட மகேந்திர மலையை அடைந்தனர். அங்கு அவர்கள் பரந்து விரிந்து இருந்த கடல்பகுதியைக் கண்டனர். வானர வீரர்கள் எவ்வளவு முயன்றும் சீதையை தேடி கண்டுபிடிக்க முடியாததால் மிகவும் கவலையுடன் சோர்வடைந்தனர். அது மட்டுமின்றி சுக்ரீவன் கொடுத்த ஒரு மாதக்காலம் முடிவடைந்ததால் மிகவும் கவலையுற்றனர். நம்மை ஒரு மாதக்காலம் சீதையை கண்டிபிடித்து வரச்சொன்ன சுக்ரீவனும், இராமரும் நம் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருப்பார்கள்.

💫 நாம் இன்னும் சீதையை கண்டுபிடிக்கவில்லை என்ற செய்தி இராமருக்கு தெரிந்தால் அவர் மிகவும் வேதனைப்படுவாரே? நாம் சீதையை கண்டுபிடிக்காமல் எவ்வாறு நாடு திரும்ப முடியும் என பலவாறு புலம்பி கவலையுற்றனர். அப்போது அங்கதன் அவர்களிடம், நாம் இராமரிடம் சீதையை நிச்சயமாக கண்டுபிடித்துவிட்டு வருவோம் என அவரிடம் ஆணையிட்டு வந்தோம். ஆனால் நம்மால் அக்காரியத்தை செய்து முடிக்க முடியவில்லை. நமக்கு சுக்ரீவன் கொடுத்த கால அவகாசமும் முடிந்து விட்டது. இதற்கு மேலேயும் நம்மால் சீதையை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை. சுக்ரீவன் நமக்கு கொடுத்த கட்டளையை செய்து முடிக்கவில்லை என்று நம்மை தண்டிப்பான். நாம் சீதையை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என்ற செய்தி இராமர் அறிந்து மிகவும் வருந்துவார். இதையெல்லாம் நாம் கண்ணால் பார்ப்பதற்கு பதில் நம் உயிரை இங்கேயே மாய்த்துக் கொள்ளலாம். இதற்கு உங்களின் கருத்து என்ன? என்று கேட்டான்.

தேடல் தொடரும்...

No comments:

Post a Comment