Pages

Thursday, September 14, 2023

RAMAYANAM PART 61

 இராமாயணம் தொடர் 61

சுக்ரீவனின் சத்தியம்!

🌟 இலட்சுமணன் தாரையிடம், கார்காலம் முடிந்த பிறகு அன்னை சீதையை தேட படையோடு வருவதாக இராமரிடம் வாக்கு கொடுத்துவிட்டு சென்ற சுக்ரீவன், தான் கொடுத்த வாக்கை மறந்துவிட்டான். ஆதலால் அண்ணன் இராமன், சுக்ரீவன் என்ன செய்து கொண்டு இருக்கிறான். தான் செய்த வாக்கிற்கு என்ன பதில் என்பதை தெரிந்து கொண்டு வரும்படி கட்டளையிட்டுள்ளார். ஆதலால் தான் நான் இங்கு வந்துள்ளேன் எனக் கூறினான். தாரை, மைந்தனே! சிறியவர்கள் தவறு செய்து இருந்தால் அவர்களை தாங்கள் மன்னித்து அருள வேண்டும். தாங்கள் செய்த உதவியை சுக்ரீவன் ஒருபோதும் மறக்கவில்லை. அதேபோல் தங்களுக்கு செய்த கொடுத்த வாக்கையும் சுக்ரீவன் மறக்கவில்லை. பல இடங்களுக்கு தூதர்களை அனுப்பி படைகளை திரட்ட சற்று காலதாமதமாகிவிட்டது என்றாள்.

🌟 தாரை, தாங்கள் செய்த உதவியை ஒருபோதும் சுக்ரீவனால் மறக்க இயலாது. அவ்வாறு சுக்ரீவன் மறக்க நேர்ந்தால், அனைத்தையும் இழந்து மிகுந்த துன்பத்திற்கு உள்ளாவான் என்றாள். இதைக் கேட்ட இலட்சுமணன் நாம் தேவை இல்லாமல் கோபப்பட்டு விட்டோமா என நினைத்துக் கொண்டார். இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே அனுமன் அவ்விடத்திற்கு வந்தான். அனுமனை கண்டவுடன் இலட்சுமணனுக்கு கோபம் வந்தது. இருந்த போதிலும் அதனை இலட்சுமணர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. பிறகு இலட்சுமணர் அனுமனை பார்த்து, மிக வலிமையும், அனைத்தையும் கற்றறிந்த நீயும் கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டாயா? எனக் கேட்டார்.

🌟 அனுமன், பெருமானே! இவ்வுலகில் பாவம் செய்தவருக்கு கூட மன்னிப்பு உண்டு. ஆனால் செய்த உதவியை மறப்பவற்கு மன்னிப்பு உண்டா? தங்களுக்கும் அரசனுக்கும் நட்பு ஏற்பட நான் காரணமாக இருந்தேன். அவ்வாறு இருக்கையில் தங்களை துன்ப நிலையில் இருக்க செய்வேனா? கருணையின் வடிவாய் இருக்கும் தங்களின் எண்ணம் தான் என் மனதில் உள்ளது. தாங்கள் இல்லையேல் எங்களுக்கு வாழ்வு ஏது? அதேபோல் சுக்ரீவனும் தாங்கள் செய்த உதவியை மறக்கவில்லை. தூதுவர்களை ஏவி படைகளை சேர்க்க காலதாமதமாகிவிட்டது என்றான். அனுமனின் வார்த்தைகளை கேட்ட இலட்சுமணனின் கோபம் சற்று தணிந்தது. பிறகு இலட்சுமணர் அனுமனிடம், அண்ணன் இராமர் அன்னை தேவியை பிரிந்ததால் மிகவும் மனம் வருந்தி சோர்ந்துள்ளார். நீங்கள் கொடுத்த வாக்கின்படி சரியான நேரத்திற்கு வராததால் இராமர் மிகவும் கோபம் கொண்டு உள்ளார். ஆதலால் அவரின் கட்டளைப்படி நான் இங்கு வந்துள்ளேன் எனக் கூறினார்.

🌟 அங்கதன் மறுமடியும் சுக்ரீவனின் மாளிகைக்குச் சென்று சுக்ரீவனின் மயக்க நிலையை தெளிய வைத்தான். சுக்ரீவனிடம், இலட்சுமணர் பெரும் கோபங்கொண்டு வந்துள்ளார் என்பதை தெரிவித்தான். மது மயக்கத்தில் இருந்து தெளிந்த சுக்ரீவன், கோபங்கொண்டு இச்செய்தியை ஏன் முன்கூட்டியை என்னிடம் தெரிவிக்கவில்லை எனக் கேட்டான். அதற்கு அங்கதன், தந்தையே! அப்போது தாங்கள் மகளிர் புடைசூழ, மதுவில் மயங்கி இருந்தீர்கள். அதனால் நான் அன்னையிடம் சென்று இலட்சுமணரின் வரவை தெரிவித்தேன். அவர்கள் இலட்சுமணரை சமாதானப்படுத்த சென்றுள்ளார்கள். ஆதலால் தாங்கள் சீக்கிரம் இலட்சுமணரை காண வர வேண்டும் என்றார்.

🌟 சுக்ரீவன், நான் மதுவில் மயங்கி கிடந்தேனா? மது அருந்தியவனுக்கு தாய், தந்தை, மகன், மகள் என எவரும் தெரியமாட்டார்கள். மது ஒருவனது வாழ்க்கையை கெடுத்து விடும் போலும். மது அருந்துபவனுக்கு நிச்சயம் நரகம் உண்டு. உலகின் மிகக் கொடுமையானது மது அருந்துவது தான். ஆதலால் மதுவை ஒருபோதும் நான் தொட மாட்டேன். இது இராமன் மேல் ஆணை என சத்தியம் செய்தான்.

தொடரும்...

No comments:

Post a Comment