Pages

Monday, September 11, 2023

RAMAYANAM PART 58

 இராமாயணம் தொடர் 58

சுக்ரீவனின் பட்டாபிஷேகம்!...

✫ தாரை, கணவன் உள்ளத்தில் மனைவி இருப்பாள். அதைபோலவே மனைவியின் உள்ளத்தில் கணவன் இருப்பார். நான் தங்கள் உள்ளத்தில் இருந்திருந்தால் என் மார்பின் மீதும் அன்பு பாய்ந்திருக்க வேண்டுமே. ஏன் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என கதறி அழுதாள். அனுமன் தாரைக்கு ஆறுதல் சொன்னான். பிறகு அங்கிருந்து தாரையை அழைத்துச் சென்றான். அங்கதன் தன் தந்தைக்கு செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் செய்து முடித்தான். 

✫ பிறகு சில நாட்கள் கழித்து, ஒரு நல்ல நாளில் இராமன் இலட்சுமணனிடம், சுக்ரீவனுக்கு முடி சூட்டும் படி கட்டளையிட்டார். பிறகு இலட்சுமணன் அனுமனிடம் பட்டாபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை கொண்டுவரும்படி கூறினான். அனுமனும் புண்ணிய தீர்த்தங்கள், மாங்கல்ய பொருட்கள் என பட்டாபிஷேகத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டு வந்து சேர்த்தான். முனிவர்கள் ஆசியுடன், தேவர்கள் மலர்தூவ இராமனின் முன்னிலையில் இலட்சுமணன், சுக்ரீவனுக்கு முடிசூட்டினான். அங்கதனுக்கு இளவரசர் பட்டம் சூட்டினார்கள். கிஷ்கிந்தையின் அரசனாக முடிசூட்டிக் கொண்ட சுக்ரீவன், இராமன் திருவடியில் விழுந்து வணங்கினான். இராமர் சுக்ரீவனை கட்டி தழுவிக் கொண்டார்.

✫ சுக்ரீவா! உன் அரசு ஓங்குக. நீ உன் ஆட்சியில் தருமநெறிப் படி நடந்து, உன் அரசாட்சிக்கு பெருமை சேர்க்க வேண்டும். நீ வாலியின் மகன் அங்கதனுடன் சேர்ந்து நலமாக ஆட்சி புரிய வேண்டும் என்று வாழ்த்தினார். பிறகு இராமர், சுக்ரீவா! நீ மன்னன் என்னும் உன் மரியாதையை பாதுகாத்து கொள்ள வேண்டும். பகைமை, விரோதம், இகழ்ச்சி, வேற்றுமை இவற்றை மனதில் வைத்துக் கொள்ள கூடாது. நேர்மையாகவும், அறநெறியுடன் அரசு புரிய வேண்டும். சிறியவர், பெரியவர் என்று எவரையும் இகழ்ந்து பேசுதல் கூடாது. அழிவுக்கு காரணம் பாவங்களே. அதனால் பாவச்செயலை ஒருபோதும் செய்யக்கூடாது.

✫ ஒரு பெண்ணாசையால் தான் வாலி மாண்டான். ஒரு பெண்ணால் தான் நான் இன்று பெரிதும் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். ஆதலால் பெண்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரைக் கூறினார். மழைக்காலம் வரப் இருப்பதால், மழைக்காலம் முடிந்து உன் சேனையை திரட்டிக் கொண்டு வா! நாம் சீதையை தேடிச் செல்வோம் என்றார். பிறகு அங்கதன் இராமனின் திருவடியில் விழுந்து வணங்கினான். இராமர் அங்கதனிடம், அங்கதா! நீ பண்புள்ளவனாக, ஒழுக்கமுள்ளவனாக நடந்து கொள்ள வேண்டும். இளவரசனுக்கு உரிய பெருமையை பாதுகாத்து கொள்ள வேண்டும். சுக்ரீவனை உன் சிறிய தந்தை என நினைக்காமல், உன் தந்தை போலவே பாவித்து மரியாதையுடன் மதித்து நடக்க வேண்டும் என அறிவுரைக் கூறினார்.

✫ பிறகு சுக்ரீவன் இராமனிடம் தன்னுடன் வந்து அரண்மனையில் தங்கும்படி வேண்டினான். ஆனால் இராமர், நான் தவக்கோலம் பூண்டுள்ளதால் அரண்மனையில் வாழ்வது முறையாகாது. ஆதலால் என்னால் உன்னுடன் வர இயலாது எனக் கூறினார். இராமர் தவக்கோலம் பூண்டுள்ளதால் அவரை மறுத்து சுக்ரீவன் எதுவும் கூறவில்லை. சுக்ரீவன் இராமரின் பிரிவை எண்ணி மிகவும் வருந்தினான். பிறகு இராமரையும், இலட்சுமணரையும் பிரிய மனமின்றி கண்களில் கண்ணீர் தழும்ப விடை கொடுத்து கிஷ்கிந்தை நோக்கி புறப்பட்டான். சுக்ரீவனும், அங்கதனும் அரண்மனைக்கு சென்று, தாரையின் திருவடியில் விழுந்து வணங்கினார்கள்.

தொடரும்...

No comments:

Post a Comment