Pages

Thursday, August 31, 2023

RAMAYANAM PART 47

 இராமாயணம் தொடர் 47

சுக்ரீவனை தேடி செல்லுதல்

💫 இலட்சுமணர், அண்ணா! நாம் இவனைக் கொல்லாமல் இவனுடைய தோள்களை மட்டும் வெட்டிவிடுவோம் என்றார். கவந்தன் இராம இலட்சுமணரை விழுங்க முன் வந்தான். அவர்கள் கவந்தனுடைய தோள்களை வெட்டித் தள்ளினார்கள். கவந்தன் கீழே விழுந்தான். பிறகு அவன் சாப விமோச்சனம் பெற்று சூரிய ஒளி போல் விண்ணில் தோன்றினான். இராமர் கவந்தனை நோக்கி, நீ யார்? எனக் கேட்டார். நான் விசுவாவசு என்ற பெயர் கொண்ட கந்தர்வன். ஒரு முனிவரின் சாபத்தால் அரக்கனாக மாறினேன். தாங்கள் என் தோள்களை வெட்டியவுடன், நான் என் பழைய உருவினை பெற்றேன். தங்களுக்கு கோடி வணங்கள். நான் சீதையை கண்டுபிடிக்க வழியை கூறுகிறேன். நீங்கள் தனியாக சீதையை கண்டுபிடிக்க இயலாது. தங்களுக்கு சுக்ரீவன் உதவி புரிவார். ஆதலால் தாங்கள் சுக்ரீவனை நாடி செல்லுங்கள். சுக்ரீவனின் மனைவியை வாலி கவர்ந்து சென்றுள்ளான். நீங்கள் சுக்ரீவனின் மனைவியை மீட்டு சுக்ரீவனிடம் நட்பு கொள்ளுங்கள். சுக்ரீவன் மிகவும் நல்லவன். அவன் வானரங்களின் தலைவன் ஆவான். சீதையை தேடி கண்டுபிடிக்க சுக்ரீவன் உதவி புரிவான் எனக் கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தான் கந்தர்வன்.

💫 பிறகு இராம இலட்சுமணர் பல காடுகளையும், மலைகளையும் தாண்டி சென்று மதங்க மகரிஷி வாழும் ஆசிரமத்தை அடைந்தனர். அங்கு மகரிஷியின் சீடர்களுக்கு சபரி என்னும் மூதாட்டி பணிவிடை செய்து கொண்டு அங்கேயே தங்கியிருந்தாள். சபரி மூதாட்டி மகரிஷியின் மாணவி ஆவார். அவள் இராமனின் வரவை எதிர்நோக்கி வழிபாடு செய்து கொண்டு இருந்தாள். சபரி மூதாட்டி இராம இலட்சுமணர் வருகையை எதிர்பார்த்து அவர்களுக்காக காய் கனிகளை சேகரித்து வைத்து இருந்தாள். இராம இலட்சுமணர் வருகையை பார்த்து இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தாள். சபரியின் அளவற்ற அன்பைக் கண்டு இராமர் நெகிழ்ந்து போனார். பிறகு சபரி இராமனின் துன்பங்களை கேட்டறிந்தார். அவள் சுக்ரீவனை துணையாகக் கொண்டு சீதையை கண்டுபிடிக்க கூறினாள். சுக்ரீவனை காண செல்லும் வழியையும் அவள் கூறினாள். பிறகு சபரி, இராம இலட்சுமணர் இருக்கும் போதே முக்தி நிலையை அடைந்தாள்.

💫 இராமரும் இலட்சுமணரும் சுக்ரீவனை காண சபரி காண்பித்த வழியை நோக்கி பயணித்தனர். வழியில் மலைகள், காடுகளை கடந்து சென்றனர். பிறகு அவர்கள் பம்பை நதியை அடைந்தனர். பம்பையின் அழகையும், நீர் வளத்தையும், நில வளத்தையும் பார்த்த உடன் இராமருக்கு சீதையின் நினைவு வந்தது. அவர்கள் பம்பையில் நீராடிவிட்டு இறைவனை வழிப்பட்டு, பிறகு சோலையில் ஓர் இடத்தில் தங்கினார்கள். இராமர் இலட்சுமணரிடம், தம்பி! சீதை இங்கு இருந்தால் பம்பை நதியின் அழகை மிகவும் இரசித்திருப்பாள். ஆனால் இன்று அவள் என்னை நினைத்து மிகவும் வருந்தி கொண்டு இருப்பாள் என்றார். இதற்கு இலட்சுமணர், அன்னை! தங்களை நினைக்க மாட்டார் என்றார். இதைக் கேட்ட இராமருக்கு அதிர்ச்சி உண்டானது. தம்பி! உன் பதில் வித்தியாசமாக உள்ளது. கற்புடைய பெண்கள் தங்கள் கணவரை எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்பார்கள். அதேபோல் சீதையும் என்னை நினைத்துக் கொண்டு இருப்பாள் தானே? என்றார்.

💫 அதற்கு இலட்சுமணர், கற்புடைய பெண்கள் நிச்சயம் தங்கள் கணவரை பிரியும்போது, நினைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அன்னை தங்களை மறந்தால் தானே நினைப்பார்கள். அன்னை தங்களை ஒரு நொடி கூட மறக்க மாட்டார்கள். ஆதலால் தான் தங்களை நினைக்க மாட்டார்கள் என்றேன் என்றார். இலட்சுமணனின் பேச்சு திறமையைக் கண்டு இராமர் வியந்து போனார். இராமர் மறுபடியும் சீதையை நினைத்து புலம்பினார். சுக்ரீவன் எங்கு உள்ளானோ? அவனை நாம் எப்படி கண்டுபிடிப்பது? சீதை எத்தகைய துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பாளோ? சீதையை நான் எப்பொழுது காண்பேன்? ஒரு பெண்ணின் துயரத்தை போக்க முடியாத எனக்கு எதற்கு வில்? என்று உலக மக்கள் அனைவரும் என்னை தூற்றுவார்களே எனக் கூறி இராமர் புலம்பினார். இலட்சுமணர் இராமரை சமாதானம் செய்தார்.



No comments:

Post a Comment