Pages

Thursday, August 31, 2023

RAMAYANAM PART 46

 இராமாயணம் தொடர் 46

கவந்தனிடம் மாட்டிக் கொள்ளுதல்

🔷 இராமர் இலட்சுமணர், ஜடாயுவை தேடி விரைந்து சென்றனர். அவர்கள் போகும் வழியில் ஒரு கொடிய வில் முறிந்து கிடப்பதையும், கவசம் அறுந்து கிடப்பதையும் கண்டனர். இதனைக் கண்ட இராமர் இங்கு பெரும் போர் நடத்திருக்க கூடும் என்றார். சிறிது தூரம் சென்றதும் இரத்த வெள்ளத்தில் ஜடாயு வீழ்ந்து இருப்பதை பார்த்து மிகவும் துன்பப்பட்டனர். இராமர் ஜடாயுவை பார்த்து புலம்பி அழுதார். வீட்டில் என் தந்தையை இழந்தேன். இங்கு தந்தைக்கு நிகரான தங்களை இழந்து விட்டேன். இனி நான் என்ன செய்வேன் என புலம்பி அழுதார். சிறிது மயக்கம் தெளிந்த ஜடாயு இராம இலட்சுமணரை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.

🔷 உங்களை என் உயிர் போகும் தருணத்தில் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் சீதையை தனியே விட்டுவிட்டு எங்கே சென்றீர்கள். இராவணன் சீதையை கவர்ந்து செல்வதை கண்டு நான் அவனை தடுக்க முயற்சித்தும் தோற்றுவிட்டேன். இராவணன் சிவன் கொடுத்த வாளால் என் சிறகுகளையும் கால்களையும் அறுத்துவிட்டு, இங்கிருந்து தப்பித்து ஓடி விட்டான். இதைக்கேட்ட இராமர் பெரும் கோபம் கொண்டார். சீதையை அபகரித்து சென்றதையும், தங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விண்ணுலகத்தவரை அழித்து விடுகிறேன் என்றார். ஜடாயு, இராமா! ஒரு பெண்ணை காட்டில் தனியாக விட்டுவிட்டு ஒரு மானின் பின் சென்றது உன் தவறு. நீ விண்ணுலகத்தவரை கோபித்துக் கொண்டு ஒரு பயனும் இல்லை. அவர்கள் நீ அரக்கர்களை அழிப்பாய் என உன் உதவியை நாடி இருக்கின்றனர்.

🔷 ஆதலால் நீ அரக்கர் குலத்தை அழித்து உன் மனைவியை காப்பாற்று என்று கூறினார். பிறகு ஜடாயுவின் உடலை விட்டு உயிர் பிரிந்தது. இராமரும் இலட்சுமணரும் ஜடாயுவின் பிரிவை தாங்கமுடியாமல் அழுதனர். பிறகு அவர்கள் ஜடாயுவுக்கு ஈமச் சடங்குகளை செய்தனர். இராம இலட்சுமணர் அன்றைய பொழுதை ஓர் இடத்தில் கழித்தனர். இரவெல்லாம் இராமர் தூங்கவில்லை. சீதையை நினைத்து மிகவும் வேதனையடைந்தார். பொழுது விடிந்தது. இராமரும் இலட்மணரும் சீதையை தேடி தெற்கு திசையை நோக்கி பயணித்தனர். இவர்கள் வெகுதூரம் சென்று கவந்தன் என்னும் அரக்கன் இருக்கும் வனத்தை அடைந்தனர். நண்பகல் வந்தது. கவந்தனை இந்திரன் வஜ்ஜாயுதத்தால் அடித்ததால் அவனின் தலை உடம்புக்குள் புகுந்து முண்டமாக மாறினான். கவந்தன் வனத்தில் வாழும் விலங்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி தீங்கு செய்து வந்தான். கவந்தனின் கையில் யாராவது அகப்பட்டால் உடனே அவன் தின்றுவிடுவான். அவன் கையை நீட்டி அள்ளினால் வனத்தில் உள்ள விலங்குகள், முனிவர்கள் எல்லாம் கையில் அகப்படுவர். அந்த அளவுக்கு அவனின் கை நீளமானது. சீதையை தேடி சென்ற இராமனும் இலட்சுமணனும் கவந்தனின் கையில் அகப்பட்டுக் கொண்டனர்.

🔷 கவந்தன், உங்களைக் கடவுளே எனக்கு உணவாக அனுப்பியிருக்கிறார். உயிர் மேல் ஆசை வைக்க வேண்டாம் என மிரட்டினான். இராமர் சீதையின் நினைவால் மிகவும் மனம் வருந்தி இருந்தார். இராமர் இலட்சுமணனிடம், தம்பி! எனக்கு ஏற்பட்ட துயரங்கள் போதும். இனியும் நான் உயிர் வாழ விரும்பவில்லை. என்னை இவ்வரக்கனிடம் விட்டுவிட்டு நீ தப்பிச்செல் என்றார். இலட்சுமணன், அண்ணா! நாம் வனம் வரும் முன் அன்னை சுமித்திரை என்னிடம், இராமனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அவனுக்கு முன் நீ உயிர் துறந்துவிடு என்றார். ஆனால் இப்பொழுது நீங்கள் உயிர் துறந்தால், நான் எவ்வாறு நாடு திரும்ப முடியும். இறந்தால் இருவரும் இறப்போம் என்றார். அண்ணா! துன்பம் வரும்போது அதனை எதிர்க்க வேண்டும். அது தான் வீரம். இதனைக் கேட்ட இராமர் மனம் தேறினார்.

No comments:

Post a Comment