Pages

Friday, August 18, 2023

RAMAYANAM PART 22

 இராமாயணம் தொடர் 22

கைகேயி இராமனிடம் சொல்லும் கட்டளை

🌠 கைகேயி, மன்னரே, தாங்கள் இந்த வரத்தை அருளவில்லையென்றால் நான் இப்பொழுதே உயிர் துறப்பேன் என்றாள். தசரதன் இதை கேட்டு மிகவும் வேதனைப்பட்டார். நான் செல்ல இருக்கும் கானகத்துக்கு இராமன் செல்வதா? இராமன் அயோத்தியில் இருந்தால் உனக்கும் பரதனுக்கும் தீங்கு செய்வான் என நீ நினைக்கின்றாயா? பரதன் நாடாளும் வரத்தை தருகிறேன். அறுபதினாயிரம் ஆண்டு தவம் இருந்து பெற்ற மகனாகிய இராமனை கானகம் செல்ல சொல்வதா? இதை நினைத்தால் என் இதய துடிப்பே நின்று விடும் போல் இருக்கிறதே! என்று புலம்பினார்.

🌠 கைகேயி, தாங்கள் இந்த வரத்தை மறுக்க கூடாது என்று பிடிவாதமாக கூறிவிட்டாள். தசரதர் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கைகேயி இரண்டு வரங்களை பெற பிடிவாதமாய் நின்றாள். அன்றைய இரவு கழித்து பொழுது விடிந்தது. அயோத்தி மக்கள் மகிழ்ச்சியுடன் இராமனின் பட்டாபிஷேகத்தை பார்க்க மண்டபத்தில் கூடினார்கள். வசிஷ்டரும் முனிவர்களும் புடைசூழ மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்கள். சுமந்திரரே! பட்டாபிஷேகத்துக்கு நேரம் ஆகி கொண்டு இருக்கிறது நீங்கள் போய் சக்ரவர்த்தியை அழைத்து வரும்படி கூறினார், வசிஷ்டர். சுமந்திரர், மன்னர் கைகேயின் மாளிகையில் தான் இருப்பார் என்று நினைத்துக் கொண்டு சுமந்திரர் கைகேயின் மாளிகைக்கு சென்றார். 

🌠 அங்கு சென்றதும் கைகேயி சுமந்திரரிடம், அமைச்சரே தாங்கள் சென்று இங்கு இராமனை அழைத்து வருமாறு கூறினாள். சுமந்திரர், மகுடம் சூட்டி கொள்ள இருக்கும் இராமனை வாழ்த்தி வழியனுப்ப அழைத்து வரச் செல்கிறார் என்று நினைத்து கொண்டு இராமரிடம் தங்களை கைகேயி தாயார் அழைக்கிறார் என்று கூறினார். உடனே இராமர், சீதையிடம் , மகுடம் சூட்டி கொள்ள நேரம் ஆகி விட்டது. என்னை என் அன்னை அழைக்கிறார். நான் சென்றுவிட்டு வருகிறேன். நீ ஆயத்தமாக இரு என்று சொல்லி விட்டு தேரில் ஏறிச் செல்கிறார். இராமனை பெற்றது வேண்டுமானால் கௌசலை தான், ஆனால் இராமனை வளர்த்தது கைகேயி தான். இராமன் தேரில் கைகேயி மாளிகைக்கு சென்றதை பார்த்த அயோத்தி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

🌠 தன் பாசம் மிகுந்த மகனான இராமனை வாழ்த்தி அனுப்ப தான் கைகேயி அழைத்து இருக்கிறாள் என்று கூடியிருந்த மக்கள் பேசிக் கொண்டனர். இராமர் கைகேயின் மாளிகைக்கு போய்ச் சேர்ந்தார். கைகேயி முன் மண்டபத்தில் அமர்ந்து இருந்தாள். இராமர் கைகேயிடன் சென்று வணங்கி ஆசி பெற்றார். இராமா! உன் தந்தை தற்போது ஒரு புதிய கட்டளையிட்டிருக்கிறார். அக்கட்டளையை நான் உனக்கு சொல்லாமா? எனக் கேட்டாள், கைகேயி. இராமர், அம்மா! தந்தையின் கட்டளை தாய் மூலம் அமைந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறு ஒன்றுமில்லை. கட்டளை இடுங்கள் அன்னையே! உங்கள் கட்டளைப்படி நான் நடப்பேன் என்றார். 

🌠 கைகேயி, இராமா! அயொத்தியை உன் தம்பியான பரதன் ஆட்சி செய்ய வேண்டும். நீ பதினான்கு ஆண்டு வனவாசம் செல்ல வேண்டும். இது மன்னருடைய ஆணை என்றாள். இதனைக் கேட்ட இராமர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். இராமனின் முகம் பூக்களை போல் மலர்ந்தது.

No comments:

Post a Comment